‘‘நீட் தேர்வு ரத்து என்பதே ஒரே தீர்வு”

2 Min Read

மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேச்சு!

புதுடில்லி, ஜூலை 29 நீட் தேர்வு வினாத்தாள் கசிவதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ‘டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பினர் 35 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. இதனால், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், நுழைவுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்தம் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனப் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வு முறை கேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காகப் புதிய பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா மக்களவையில் நேற் (28.7.2026) தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்.” நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சட்டம் கொண்டுவருவதால் எந்தப் பயனும் இல்லை.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடும், தி.மு.க-வும்தான் முதன்முதலில் குரல் கொடுத்தன. நாடாளுமன்றத்தில் நீட் மசோதாவைத் தி.மு.க எதிர்த்தது. அப்போதே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், அன்றைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார். மேலும் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினார். அதுமட்டுமல்லாது, சட்டமன்றத்திலும் நீட் விலக்கு சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இப்படி நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

பா.ஜ.க ஆட்சியில் தான் நீட் தேர்வு வினாத்தாள் தொடர்ச்சியாகக் கசிந்து வருகிறது. ஆனால், இதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், வினாத்தாள் கசிந்ததால் தான் மாணவர்கள் மீண்டும் சிறப்பாகத் தேர்வு எழுதியதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இது முரணாகத் தெரியவில்லையா?

இளம் தலைமுறையினரின் குரலை ஒன்றிய அரசு கேட்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காங்கிரஸ் செய்த தவறைத் தொடர வேண்டாம்; நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்” என தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *