பெங்களூரு, ஜூலை 29- பெங்களூருவில் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், சிவில் நீதிமன்றத்தின் வெளியேறும் வாசல் எதிரில் நடைபெற்றது.
25.7.2026 சனிக்கிழமை 2 மணிக்கு சமூக ஆர்வலரும், மூத்த வழக்குரைஞர் வி.நரசிம்மமூர்த்தி தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட கண்டன முழக்கத் துடன் நடைபெற்றது.
வழக்குரைஞர் வி.நரசிம்மமூர்த்தி நீட் தேர்வு முறையை அடியோடு முற்றிலும் ஒழிக்க வேண்டும், மேலும் இதனால் ஏராளமான மாணவ மாணவியர்கள் உயிர் நீத்து தியாகம் புரிந்துள்ளனர் என்றும், ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கினைக் கண்டித்து நெடிய உரை நிகழ்த்தினார்.
மேலும் பல இளம் வழக்குரைஞர் கண்டன உரை நிகழ்த்தினர். ஏராளமான இளம் மற்றும் மூத்த வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர். கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சே.குண வேந்தன், மாநில துணைத் தலைவர் ஜெ.அருண், மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ, இளம் கழக வழக்குரைஞர் ஆர்.திவ்யா ஆகியோர் கண்டன பதாதைகள் ஏந்தி, கண்டன முழக்கமிட்டனர்.
விடுதலைப் பூங்கா ஆர்ப்பாட்டம்
பெங்களூரு மய்யப் பகுதியில் அமைந்துள்ள பிரிபஞ்பார்க் என்னும் விடுதலைப் பூங்காவில் கடந்த ஒரு வாரமாக நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் தொடர் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. 25.4.2026 மதியம் மிகப்பெரிய அளவில் ஏராளமான மாணவர்கள், திராவிடர் கழகத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தினர், இளம் வழக்குரைஞர்கள், மூத்த வழக்கு ரைஞர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தன் எழுச்சியாக கலந்து கொண்டனர். பெங்களூரு மாநகரமே எழுச்சித் தீ மூட்டிய கோலத்தில் சற்றேறக்குறைய பத்து ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டு மிகுந்த பரபரப்போடு ஒலி பெருக்கி மூலம் தொடர் முழக்கங்களை மாறி மாறி ஒலிபரப்பியவாறு இருந்தனர்.
திடலில் மூன்று பகுதியான அமைப்பில் மக்களின் பதாகையிலும் ஆங்கிலம், தமிழ் வாசகங்கள் நிறைந்து காணப்பட்டன. முதல் அரங்கில், ஆயிரம் பேர்கள் அமர்ந்து ஒலி பெருக்கியின் மூலம் கண்டன உரை நிகழ்த்தினர். திராவிடர் கழகக் கொடியும், கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடியும், எஸ்.எப்.அய். கொடியும், இந்திய நாட்டுக் கொடியும் ஏந்தி கலந்து கொண்டனர். ஏராளமான மகளிரும் மூத்த வழக்குரைஞர்கள், பெண் வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.
இரண்டாம் அரங்கு
இரண்டாம் அரங்கு மிகப் பெரிய மேடையுடன் கூடிய பேரரங்கம் அமைக்கப்பட்டு, பெரும் திரளாக மாணவர்களும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும், கட்சி பேதமில்லாமல் பலரும், மகளிரும் கண்டன முழக்கமிட்டு எழுச்சியூட்டினர். இதில் ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியும், தொடர் கண்டன முழக்கமிட்டும் பரபரப்பினை ஏற்படுத்தினர்.
மூன்றாம் திடல் அமைப்பு
திறந்த வெளி பேரரங்கில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள், பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒலி பெருக்கியின் மூலம் நீட் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். மூத்த வழக்குரைஞர் நரசிம்மமூர்த்தி, திராவிடர் கழக மாநிலத் தலைவர் சே.குணவேந்தன், மாநிலத் துணைத் தலைவர் ஜெ.அருண், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ, வழக்குரைஞர் திவ்யா மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் தமிழில் நீட் எதிர்ப்பு வாசகங்கள் நிறைந்த பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.
பல்வேறு தொலைக்காட்சி நிறு வனங்கள் நரசிம்மமூர்த்தி மற்றும் சே.குணவேந்தன் ஆகியோரிடம் நேர்காணல் செய்தி சேகரிப்பு செய்தனர்.
அய்நூற்றுக்கு மேற்பட்ட பாதுகாப்பு காவலர்களும், காவலர் மற்றும் தீய ணைப்பு வாகனங்களும் பூங்கா திடல் முழுவதும் அணிவகுத்து நின்றனர். பெங்களூரு மாநகரம் நீட் எதிர்ப்பு போர்க்களம் போன்று காட்சியளித்தது. இந்நிகழ்வு மிகுந்த நீட் தேர்வு தேவை யில்லை என்பதை பறைசாற்றும் விதமாக பரப்பரப்பினை ஏற்படுத்தியது.
