ஜெய்சல்மேர், ஜூலை 28- கடந்த வாரம் அரியானா மாநிலத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதே நிகழ்வில், காணொலி வாயிலாக ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்தின்’ கீழ் புதுப் பிக்கப்பட்ட சென்னை பூங்கா நகர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள 12 ரயில் நிலையங்களையும் அவர் நாட்டிற்கு அர்ப் பணித்தார்.
பிரதமரால் திறக்கப்பட்ட இந்த 12 நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையங்களில், ராஜஸ்தான் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெய்சல்மேர் ரயில் நிலையமும் ஒன்றாகும்.
ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு மிகச் சிறப்பாகத் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் தாக்கம் தாங்காமல் ரயில் நிலையத்தின் கூரைகள் உடைந்தும், சில இடங்களில் பலத்த கசிவு ஏற்பட்டும் சேதமடைந்தன.
இதன் காரணமாக, பயணிகள் தங்கும் அறைகள், காத்திருப்போர் கூடம் மற்றும் பல்வேறு முக்கிய கட்டடப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.
நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரயில் நிலையம், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மழைநீரில் மூழ்கிய சம்பவம் அங்கு வந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
