புதுடில்லி, ஜூலை 26– ஒன்றிய அரசின் கல்வித்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த திங்கள்கிழமை (20.7.2026) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய வேளையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் பகிரங்க குற்றச்சாட்டு
இந்த நிகழ்வு குறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி (CJP) செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்ததாவது:
“ஜூலை 20 அன்று அமைதியான முறையில் பேரணி சென்ற மாணவர்கள் மீது காவல் துறை பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் சில பெண் போராட்டக்காரர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இந்த அநீதியை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம்; அனைத்தையும் நினைவில் கொள்வோம்.”
புதிய இணையதளம் மூலம் ஆதாரங்கள் சேகரிப்பு
தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
ஆதாரங்கள் பதிவேற்றம்: மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றும் பெண் போராட்டக்காரர் களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர்/அதிகாரிகளின் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகள் வைத்திருப்போர், அதை விரைவில் தொடங்கப்படவுள்ள புதிய இணையதளத்தில் பதிவேற்றலாம். இணையதளம் மூலம் அடையாளம் காணப்படும் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டில்லி காவல் துறையிடம் வலியுறுத்தப்படும்.
நீதிமன்றத்தை நாட திட்டம்: காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை அணுகி வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவைப் பெறுவோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறைக்குச் செல்வதை உரிய நேரத்தில் உறுதிசெய்வோம் என்றும் சவுரவ் தாஸ் உறுதியளித்துள்ளார்.
