புதுடில்லி, ஜூலை 25– ஒன்றிய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சராகப் பணியாற்றி வந்த ரவ்நீத் சிங் பிட்டு தனது ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து நேற்று (24.7.2026) திடீரென விலகினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையைத் தொடர்ந்து, ரவ்நீத் சிங் பிட்டுவின் விலகல் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் 75(2)-ஆவது பிரிவின் கீழ், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான ரவ்நீத் சிங் பிட்டுவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், அவர் தனது ஒன்றிய இணையமைச்சர் பதவியையும் தற்போது விட்டு விலகியுள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அதில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
