4.07.2026 சேலத்தில் நடைப்பெற்ற பொதுக்குழுவில் திராவிடர் கழகம் கொண்டு வந்த 19 தீர்மானங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் குறிப்பிடுவது போல திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் நடத்துகின்ற மாநாடுகள் என்று சொன்னாலும், கமிட்டிகள் என்று சொன்னாலும், பொதுக்குழு என்று சொன்னாலும் அதிலே நிறைவேற்றக்கூடிய தீர்மானங்கள் வெறும் வாசகங்கள் அல்ல; அல்லது ஏதோ காற்றுப் போக்கிலே போகக்கூடியவை அல்ல. மாறாக, வருங்காலத்து சட்டத்திட்டங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இது வரலாறு என்று குறிப்பிடுகிறார்.
அந்த வகையில் பொதுக்குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தில் எண் 17 சமூக ஊடகப் பயிற்சிப் பட்டறை பற்றியது.
அவை, சமூக ஊடகங்களே இன்றைய கருத்துருவாக்கக் களங்களாக இருப்பதுடன், இளைஞர்களின் நேரத்தைப் பெரிதும் கொலை செய்யும் ஊடகமாக இருக்கும் சூழலில், உண்மைச் செய்திகளைப் புரிந்துகொள்ளவும், சமூக ஊடகங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும், உரிய எச்சரிக்கைகளுடன் அவற்றை அணுகவும் இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் வகையில் நாடெங்கும் 100 பயிற்சிப் பட்டறைகளை இன்றைய 15 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் (பாலின பேதமற்று) அனைவருக்கும் உடனடியாகத் தொடங்கி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது என்ற தீர்மானம்.
இது இக் காலகட்டத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம். ஏனெனில்? இந்த சமூக ஊடகங்களின் கருத்துருவாக்கங்கள் மூலம் தான் இங்கே ஒரு ஆட்சி மாற்றமே நடைப் பெற்றுள்ளது என்று சொல்லலாம்.
ஆம் பல தகவல்கள் தான் இங்கே பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. பொய்யான பல்வேறு தகவல்களால் பல அழிவுகளை நோக்கி அழைத்து சென்றுள்ளது. இன்றைய வலைத்தளங்களில் உண்மைச் செய்திகளுக்கு பதில், பொய்ச் செய்திகள் அதிவேகமாக பரவுகின்றன.
இன்றைக்கு ‘ஜென்சி’ தலைமுறை என்று சொல்லப்படுகிற, சமூக ஊடகம் தோன்றிய காலத்திலிருந்து வளரும் இத் தலைமுறை குழந்தைகள் பத்திரிக்கை படிப்பதிலும், செய்திகளில் வரும் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வது அறிதாகவுள்ளது. வலை தளங்களில் வரும் செய்திகளை உண்மை என்று நம்புகின்றன. அந்த செய்திகளை குறித்து எந்த ஆராய்ச்சி பார்வையும் கிடையாது. ஒரே, செய்தி திரும்ப, திரும்ப பரவும் போதும், அச்செய்தி பல லட்சம் “லைக்ஸ் ” கள் பெறும்போது அது உண்மையாகவே கருதப்படுகிறது.
இதை உணர்ந்து தான் ஆசிரியர் அவர்கள் உண்மைகளை சமூக ஊடங்களில் நாம் முழு வீச்சுடன் கொண்டுச் செல்ல வேண்டும் என்று பொதுக்குழுவில் கொண்டு வந்த இத் தீர்மானத்தின் வாயிலாக உணர்த்துகிறார்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் செய்திகள் எல்லாம் நொடிக்கு நொடி பரவுகிறது. பத்திரிகையில் படிக்கும் செய்திகள் எல்லாம் பழைய செய்தியாக மாறிவிடுகிறது. இந்நிலையில் நாமும், நம் செய்திகளை கொண்டு செல்லுவதில் மாற்றம் காண வேண்டி உள்ளது. நான் கூட சமூக ஊடகங்களில் தினமும் மூன்று, நான்கு நிமிடம் பேசி ஒளிப்படம் வெளியிடப் போகிறேன். இது இன்றைய காலக்காட்டத்தில் மிக முக்கியமான செயல் ஆகும். பொய்கள் வேகமாக பரவும் போது, உண்மைகளை அதைவிட அதி வேகமாக பரப்பி உண்மையை நிலைநிறுத்தப் பட வேண்டும் என்கிறார்.
கருத்துருவாக்க தகவல்கள் தான் இச்சமூகத்தை ஒன்றிணைத்து இயங்க வைக்கிறது. அவைதான் மக்களை வழி நடத்துபவைகளாக மாறியுள்ளன. (நுகர்வுப் பொருள்கள் உள்பட). இத்தகைய தகவல்கள் பல்வேறு காலக்கட்டங்களில் மனிதர்களிடையே எந்தெந்த வகையில் கொண்டுச் சேர்க்கப்பட்டுள்ளன என்று ஆராய்ந்தால், பல தகவல்கள் கிடைக்கின்றன.
ஆதி மனிதன் காலம்
மொழி உருவாகுமுன் மனிதர்கள் குகை ஓவியங்கள், சைகைகள், ஒலி, இசை, தீ போன்ற இயற்கை ஊடகங்களின் மூலம் தகவலை பரிமாறினர்.
புகைச் சைகைகள், தப்புக் குரல்கள், தீயின் உதவி போன்றவை தூரத்திலிருந்தும் அறிகுறிகளை அனுப்பும் ஆரம்பகால வழிகளாக இருந்தன. பின்னர் காலத்தில் கல்லில் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி போன்றவற்றில் எழுத்து வடிவில் தகவலை பதிவு செய்து அரசாணைகள், வரலாறு, மதக் கருத்துகளை பரப்பினர்.
சங்ககால மக்கள் தங்கள் கருத்துகளை வாய்மொழியோடு மட்டுமல்லாமல் பாடல்கள், எழுத்து பதிவுகள் மூலம் சமூகத்தில் பரப்பி வந்தனர். அச்சுக் கருவி வந்த பிறகு செய்தித் தாள்கள், சிற்றிதழ்கள், புத்தகங்கள் மூலம் தகவல் விரைவாகவும், பெரிய அளவிலும் மக்களிடம் சென்றது.
அரசியல், சமூக சீர்திருத்தம், கல்வி, மதம் போன்ற கருத்துகள் அச்சு ஊடகத்தால் கிராமம்–நகரம் முழுவதும் பரவத் தொடங்கின. தொலைத் தொடர்பாக முன்னர் புறாக்கள், குதிரை மீது தூது கொண்டுச் செல்லும் மனிதர்கள் என்று தொடர்ந்து, பின்னர் அவை அஞ்சல், டெலிகிராம், வானொலி, தொலைபேசி போன்ற வழிகளில் தூர இடங்களில் உள்ளவர்களிடம் செய்திகளை அனுப்பினர்.இதனால் தூரம் காரணமாக இருந்த கால தாமதம் மிகக் குறைந்தது; நேரடியாக குரல் மூலம் தகவல் விரைவாக சென்றது.
தொலைக்காட்சி, கைப்பேசி வருகையால் ஒலி–ஒளி இணைந்த தகவல் பரிமாற்றம் சாத்தியமாகி, விளம்பரம், செய்திகள், கல்வி நிகழ்ச்சிகள் மக்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தன. “கணினி, தகவல் தொழில்நுட்பம்” என்ற கருத்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துல்லியமாக உருவாகி, கணினி மூலம் தரவுகளை சேமித்து, ஆராய்ந்து, மீட்டும் முறைமை வளர்ந்தது.
இதன் மூலம் தொழில், வணிகம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் தகவல் நிர்வாகம் ஒரு அறிவியல் தொழில்நுட்பமாக மாறியது. தற்போது, இணையதளம் (மின்னனுக்கள், மின்கம்பி, மின்காந்த அலைகள் மூலம் பரவும் தகவல் ) வருகையின் காரணமாக காலம், இடம், பெருமளவு நீங்கின;
அந்த வகையில், தகவல்களை கொண்டு செல்லும் கருவியாக, அதிவேக தொடர்பாக கைப்பேசி உருவாகி, இன்று ஒவ்வொருவர் கையிலும் தற்போது உள்ளது.
இதில் வீடியோ அழைப்பு, மெசேஜிங், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், “எக்ஸ்” தளங்கள், வாட்ஸ்அப் போன்ற அனைத் தையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு (Unified Communications) முறைகள் ஒருபுறம் மக்கள் உற்பத்தித் திறன், முடிவெடுக்கும் வேகத்தை உயர்த்தின என்றாலும், மற்றொரு புறம், குறிப்பாக நம் நாட்டில் உண்மை, அறிவியல் செய்திகள் அப்பாற்பட்டு, கடவுள், மதம், ஜாதி, சினிமா போன்றவை “ஆசிரியர் குறிப்பிடும் “டிரோஜன் குதிரைகள்” போன்ற பொய் பிம்பங்கள் நிறைய இந்த சமூக ஊடகங்கள் வழியாக மக்கள் மனதில் ஊடுருவி, உண்மைக்கு மாறான கருத்துருவாக்கங்களை பரப்பி மூட நம்பிக்கைகளை வளர்த்து, மக்களை மூளைச்சலவை செய்து வருகிறது.
ஒவ்வொரு தனி மனிதரும் தகவல்களை பரப்புவர்களாக உருமாறி உள்ளார்கள். பல ஆயிரம் உறுப்பினர்கள் (Subscription) வைத்திருப்பவர்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் உண்மை என்றெண்ணி “லைக்” செய்கிறார்கள்.அந்த நபர்களை பின்தொடர்ந்து செல்லுகிறார்கள்.
இக்காலம் கட்டம் மனித குல வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் உலகில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனிடமும் தொடர்பு கொள்வது மிக எளிதாக மாறியுள்ளது. சென்ற காலங்களில் பார்த்தோம் ஒவ்வொரு தகவலையும் கொண்டுச் செல்ல எவ்வளவு காலம் தாமதமாகும் என்று. இன்று நம் கரங்களிலிருக்கும் கைப் பேசியில் விரல்களை வைத்து அழுத்தினால் போதும் அடுத்த நொடி மற்றொருவரின் பார்வைக்கு செல்லுகிறது. இது கைப்பேசி மட்டுமல்ல, சக மனிதனுக்கு ஒரு தகவல்களை உடனுக்குடன் கடத்தும் பொய்பேசியாகவும் உள்ளது தான் ஆபத்தானது.
தனக்குவரும் செய்திகள் உண்மையா? பொய்யா என்று ஆராயாமல் குனிந்ந தலை நிமிராமல் ஆமோதிக்கிறார்கள். பொய்க் கவர்ச்சிகள் மூலம் ஆட்பட்டு, உணர்ச்சி மிகுந்த வர்களாக உள்ளார்கள். (இவை சமூகத்தை மட்டுமல்ல, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் உடனுக்குடன் செய்திகள் பகிர்ந்து கொள்ளுவதால் பாதிப்பை உருவாக்கி கொள்ளுகிறார்கள். இதனால் பல திருமண உறவுகளே பாழ்படுவதை, நம் கண் முன்னால், நம் குடும்பங்களிலே காண முடிகிறது)
ஆசிரியர் அவர்கள் எழுதிய “ஆர். எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை” என்ற புத்தகம். அப் புத்தகத்தில், ஆரிய சித்தாந்தம் எப்படியெல்லாம் சமூகத்தில் ஊடுருவி வர்ணத்தை – ஜாதியை உருவாக்கி, அதை எப்படிக் காப்பாற்றுகிறது. பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த எப்படி எல்லாம் துடிக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு மிகத் துல்லியமாக விளக்கி இருப்பார்.
மேலும், “டிரோஜன் குதிரை” என்பது ரகசிய நோக்கத்தை அடைவதற்காக ஓர் எதிரியை ஏமாற்றப் பயன்படும் ஒரு பொருள் அல்லது நபர், மேலும் (கணினி) உதவிகரமான கணினி நிரலி (Programme) போலத் தோற்றமளித்து உள்ளே நுழைந்து கணினியின் தரவுகளை அழிக்கும் நச்சு நிரவி போன்றது என்கிறார்.
இதுபோன்ற டிரோஜன் குதிரைகள் சமூக வலைத் தளங்களிலும் உலா வருகின்றன.(இப் புத்தகம் வெளிவந்த ஆண்டு 2021). இதே போன்று தகவல்கள் மூலம் எந்தெந்த வகையில், இவ் உலகில் மக்களை அடிமைப்படுத்தி, கற்பனையான கற்பிதலுக்கு உட்படுத்தி அவர்களை ஆட்சி செய்துள் ளார்கள், ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் புத்தகம் (நூறு மொழிகளிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம்) யுவால் நோவா ஹராரி
எழுதிய “நெக்சஸ்” என்ற புத்தகம். ( இப் புத்தகம் வெளிவந்த ஆண்டு 2024).
இப்புத்தகம் கடவுளை பற்றிய கட்டுக் கதைகளை விட ஆபத்தானது இந்த கணினியில் வரும் கட்டுக்கதைகள் என்கிறது. மேலும், கணினி அடிப்படையான வலையமைப்பு ஒரு புதிய வகை அதிகார அமைப்பு முறையாகும். நாம் இதற்கு முன்பு பார்த்துள்ள மனித அடிப்படையிலான எந்தவோர் அதிகார அமைப்பு முறையை விடவும் இது மிக அதிக சக்தி வாய்ந்தது. ஒருபோதும் சோர்வடையாதது. இந்த வலையமைப்பு, கணினியிடை கட்டுக்கதைகளையும் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமா உள்ளது.
அந்தக் கட்டுக் கதைகள் மனிதனால் படைக்கப்பட்ட எந்தவொரு கடவுளையும் விட அதிக சிக்கலாவையாகவும் அந்நியமானவாயாகவும் இருக்கும். இந்த வலையமைப்பினால் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள நன்மைகள் அளப்பரியவை. இதனால் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள பாதகமான விஷயம், மனித நாகரிகத்தின் அழிவாகும். புதுமையான தொழில்நுட்பம் பல நேரங்களில் வரலாற்று பேரழிவுகளுக்கு ஈட்டுச்செல்கிறது. தொழில்நுட்பம் இயல்பாகவே மோசமானது என்பதல்ல,மாறாக அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்வதற்கு மனிதர்களுக்கு நேரம் பிடிக்கிறது என்கிறது.

கற்பனைக் கதைகள் மூலம் ஒழுங்கைப் பேணுவது பெரும்பாலும் எளிதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, கடவுள், மதங்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்பதை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக, தாம் ஒரு பாரபட்சமற்ற, நிலையான உண்மை என்று எப்போதும் முழங்குகின்றன. அப்படிப்பட்ட விசயங்களில், உண்மைக்கான தேடல், சமூக ஒழுங்கின அடித்தளங்களை அச்சுறுத்துகிறது. பல சமுதாயங்கள், தம்முடைய மக்கள் அவர்களுடைய உண்மையான தோற்றங்களைப் பற்றி அறியாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன என்கின்றன அப்புத்தகம். (இப்புத்தகம் வாசிக்கும் போது தந்தை பெரியாரின் சிந்தனையும், அதையொட்டிய ஆசிரியர் சிந்தனையும் எவ்வளவு முன்னோடியானது என்பதை உணர வைக்கிறது).
அப்படி, இவ் உலகம் உண்மையான தோற்றங்களை அறியாமல் இருக்கவும், மக்களிடையே உண்மைக்கு மாறான கருத்துருவாக்கங்களை உருவாக்கி தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டுமென்று என்று செயல்படும் ‘ஆர். எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’யைத் தகர்ப்போம்.
மேலும்,ஆசிரியர் குறிப்பிடுகிறார் இன்றைய சூழ்நிலையில், ஜாதி – மதப்போதை, மதுப் போதை, சினிமாப் போதை, கைப்பேசி போதை, பதவிப் போதை இந்த அய்ந்து போதைகள் மக்களை தவறான பாதையில் வழி நடத்தி செல்லுகிறது. அதை ஒழிப்பதை திராவிடர்கழகம் தனது வேலைத் திட்டங்களாக கொண்டுச் செயல்படும் என்கிறார்.
அவர் வழியில் இந்த அய்ந்து போதைப் பழக்கங் களையும் ஒழிக்கவும், குறிப்பாக கைப்பேசி வழியாக சமூக ஊடகங்களில் வரும் தவறான கருத்துருவாக்க தகவல்களில் வரும் உண்மைகளை புரிந்துகொள்ளவும், சமூக ஊடகங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும், பயிற்சி கொடுத்து, அரசியல் விழிப்புணர்வை உருவாக்கி, பகுத்தறிவு உள்ள சமூகமாக தொடர்ந்து பயணிக்க, இளைஞர்களை எவ்விதத்திலும் யாராலும் எவ்வித போதையிலும் ஆட்படுத்தாமலிருக்க வழிவகைச் செய்வோம்.
இதை அவசரமாக, அவசியமாக செயல்படுத்த வேண்டுமென்று காலம்கருதி நமக்கு உணர்த்திய ஆசிரியருக்கு நன்றி.
– பெ.கலைவாணன், திருப்பத்தூர்
