தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை அரசின் நிலைபற்றி உயர் நீதிமன்றம் கேள்வி

2 Min Read

மதுரை, ஜூலை  24– தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த கதிரேசன் உள்பட 20 பேர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, சீருடை மற்றும் சீருடை அணியாத காவல்துறையினர் கல்வீச்சு நடத்தி, தடியடி நடத்தியதுடன், பேரணியைக் கலைக்க நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

சீருடை அணியாத காவல்துறையினர் மற்றும் சிறப்புப்பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு, போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நபர்களின் தலை, மார்பு மற்றும் வாயை குறிவைத்து ஸ்னைப்பர் ரக நவீன துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுள்ளனர். 11க்கும் மேற்பட்டோரைக் சுட்டுக் கொன்றதற்கு காரணமான காவல்துறை துணைத் தலைவர் கபில்குமார் சரட்கர், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் மற்றும் ஆட்சியர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அய்பிசி 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநில காவல்துறை இயக்குநருக்கு  உத்தரவிட வேண்டும்.

இந்நிகழ்வு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமயில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஅய் விசாரணைக்கு மாற்ற வேண்டும். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளும் அரசுப்பணிகளைத் தொடர இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணையிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சிபிஅய் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காவல் ஆய்வாளர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஏ.கண்ணன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் ஒரேயொரு காவல்துறை ஆய்வாளர்மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பது ஏற்புடையதல்ல. சிபிஅய்யின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:

நிகழ்வு தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா? அப்போதைய ஆட்சியர், 3 தாசில்தார்கள் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்தது. அதன் மீது அரசின் நிலைப்பாடு என்ன? பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு ஏற்ெகனவே ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதி ரூ.20 லட்சம் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆக.13ல் தெளிவுபடுத்த வேண்டும்.  இவ்வாறு உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *