நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது டில்லி காவல்துறையினர் தடியடி– கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! நீட், அயோத்தி ராமன் கோயில் முறைகேடு எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

2 Min Read

புதுடில்லி, ஜூலை 20  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (20.7.2026) தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள்  மீது டில்லி காவல் துறையினரும், மத்திய படையினரும் தடியடி நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்திப் போர்க்கோலம் பூண்டன.

இன்று (20.7.2026) நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள், அமளி காரணமாக மக்களவையும், மாநி லங்களவையும் பகல் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

ஒத்திவைப்பு

நீட் தேர்வு சர்ச்சை, அயோத்தி ராமன் கோயில் அறக்கட்டளை நிதி முறைகேடு புகார் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மக்களவைத் தொடங்கியதும், மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

இரங்கல் குறிப்புகள் வாசித்து முடிக்கப்பட்ட உடனே, நீட் தேர்வு முறைகேடுகள், அயோத்தி ராம ெஜன்மபூமி அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அமளிக்கு இடையே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உறுப்பினர்களை அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டு கோள் விடுத்தார்.

எனினும், முழக்கங்கள் தொடர்ந்ததால் மக்களவைத் தலைவர் அவையை பகல் ஒரு மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர் கவுரவ் கோகோய், ‘‘மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பது கடந்த சில நாட்களாகவே தெளிவாக புலப்படுகிறது. ராமன் கோவில் விவகாரமோ அல்லது நீட் விவகாரமோ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை அவர்களால் இதுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கியப் பிரச்சினைகள் இவைதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும், ஆனால் அரசிடம் முறையான திட்டம் இல்லை’’ என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால், ராமன் கோவில் அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கையை வழங்கியிருந்தார்.

அதேபோல், தி.மு.க. உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்களின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி அறிவிக்கை அளித்திருந்தனர்.

தடியடி – கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு

இதனிடையே இன்று (20.7.2026) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள சூழலில், ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இந்தப் பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு காவல்துறையினரும், மத்திய படையினரும் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியைத் தொடங்க முனைப்பு காட்டிய டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டில்லி காவல்துறையினரும், மத்தியப் படையினரும் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *