பெரியார் கொள்கையை நேரடியாக ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ பெரியாருடைய தாக்கம் இல்லாத குடும்பம் கிடையாது!
தமிழ்நாட்டிலுள்ள எல்லா குடும்பமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்பெற்றிருக்கின்றன!
ஆண்டிமடம்: மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
தமிழ்நாட்டிலுள்ள எல்லா குடும்பமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்பெற்றிருக்கின்றன!
ஆண்டிமடம்: மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
ஆண்டிமடம், ஜூலை 20 மூன்று தலைமுறை, நான்கு தலைமுறையினர் தொடர்ந்து சுயமரியாதை இயக்க, திராவிட இயக்கக் கொள்கைகளால் பயன்பெற்றதினால், நன்றாகப் படித்திருக்கிறார்கள். பெரியார் கொள்கையை நேரடியாக ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ பெரியாருடைய தாக்கம் இல்லாத குடும்பம் கிடையாது. தமிழ்நாட்டில் பெரியாரால் பயன்பெறாத குடும்பம் இல்லை. எல்லா குடும்பமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்பெற்றிருக்கின்றன! ஓர் அறிவியல் புரட்சி, ஓர் அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 25.6.2026 அன்று ஆண்டிமடத்தில் மணமக்கள் மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை தாங்கி நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மணமக்கள்
மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா
மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அருமை நண்பர்கள் ஆண்டிமடம் கொங்கு நாட்டார் குப்பத்தைச் சார்ந்த திராவிடர் கழகத்தினுடைய ஒன்றிய தலைவர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய கொள்கை வீரர்கள் திருவாளர்கள் தியாக.முருகன் அவருடைய வாழ்விணையர் கலா ஆகியோருடைய செல்வன் மு.க.அதியமான் அவர்களுக்கும், அதேபோல திட்டக்குடி வட்டம் போத்திரமங்கலம் திருவாளர்கள் மு.சம்பத் – சுசீலா ஆகியோருடைய செல்வி கிருத்திகா அவர்களுக்கும் நடைபெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிடர் கழகத்திலேயே முழுக்க முழுக்க
தியாக.முருகன் தன்னை இணைத்துக் கொண்டவர்!
தியாக.முருகன் தன்னை இணைத்துக் கொண்டவர்!
ஒரு மாநாடு போல இந்த மணவிழாவை நடத்தக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறோம். நண்பர் தியாக.முருகன் அவர்களும், அவருடைய வாழ்விணையராக இருக்கக்கூடிய அருமை நண்பர் கலா அவர்களும் சீரிய அளவிலான இயக்கப் பொறுப்பாளர்களாவர். அவர்களது இல்லத் திறப்பு விழாவிலே தான் மிக நீண்ட நாளைக்கு முன்னாலே நானும், என்னுடைய வாழ்விணையரும் முதலில் அறிமுகமானோம். அதற்குப் பிறகு இயக்கத்திலே அவர் படிப்படியாக இருந்து, ஓய்வு பெற்ற பிறகு, தன்னை முழுமையாக பகுத்தறிவாளர் கழகத்திலே ஒப்படைத்துக் கொண்டார். பிறகு திராவிடர் கழகத்திலேயே முழுக்க முழுக்க அவர் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு நல்ல செயல்வீரராக, ஒன்றிய தலைவராக இன்றைக்கு உயர்ந்திருக்கிறார், உழைப்பின் மூலமாக. அதுபோலவே அவருடைய வாழ்விணையராக இருக்கிற அருமை அம்மா கலா அவர்களும் இந்தக் கொள்கையிலேயே ஒன்றியவர்களாக ஆகி இருக்கிறார்.
இந்த மணமுறைக்கு ஒப்புக்கொண்டவர்களை முதலில் பாராட்டவேண்டும்!
இங்கே பாராட்டுவதற்குரிய பெருமை என்னவென்று சொன்னால், புதிதாக வந்திருக்கக்கூடிய அவர்களுடைய சம்பந்தியார் அவர்கள். குறிப்பாக திருவாளர்கள் சம்பத் அவர்களும், சுசீலா அம்மையார் அவர்களும் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவர்கள் இரண்டு காரணங்களுக்காக. இன்னுங்கேட்டால், இவர்களைப் பாராட்டுவதைவிட, அவர்களை ஒருபடி அதிகமாகவே பாராட்ட திராவிடர் கழகம் கடமைப்பட்டிருக்கிறது. காரணம் என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க இவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள். ஆனால், அவர்கள் பொது சம்பந்தமாக ஏற்றாலும், இந்த மணமுறைக்கு அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் அல்லவா, அதுதான் பாராட்டுக்குரியது. அதுபோலவே மணமகனாய் இருக்கக்கூடிய அதியமான் அவர்கள் பொறியாளர். எம்.டெக். படித்து அவர் சென்னையில் பணியாற்றுகிறார். அதுபோலவே நம்முடைய மணமகளாக இருக்கிற கிருத்திகா அவர்களும் கம்ப்யூட்டர் பொறியாளராக சென்னையிலே பணியாற்றுகிறார்.
ஒரு நூறாண்டு காலத்தில் ஏற்பட்ட
அமைதிப் புரட்சியினுடைய விளைவு!
அமைதிப் புரட்சியினுடைய விளைவு!
மிகப் பொருத்தமான ஜோடி மட்டுமல்ல, பெண்ணை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார்கள். தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், திராவிட இயக்கம் சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட்டால், இந்நிலை ஏற்பட்டிருக்குமா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். இந்த நூறாண்டு காலத்தில் ஏற்பட்ட அமைதிப் புரட்சியினுடைய விளைவுதான், இந்த மணமக்கள் இரண்டு பேரும் பொறியாளர்களாக இருப்பதும், எங்களைப் போன்றவர்கள் பட்டதாரிகளாக இருப்பதுமாகும். இம்மணவிழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய துரை. சந்திரசேகரன் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்; வழக்குரைஞராக பதிவு செய்திருக்கிறார். இப்படி பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார். ஒரு எளிய கிராமமான குறிஞ்சிப்பாடி யைச் சார்ந்தவர் அவர்.
நம்முடைய சவுந்தரராஜனுக்கு என்றைக்கும் கொள்கைத் தடுமாற்றமே கிடையாது!
அதே மாதிரி அய்யா சவுந்தரராஜன். இரண்டு சவுந்தரராஜன் இருந்தார்கள் அப்போது. ஒரு சவுந்தர ராஜன் சுகாதாரத்துறை அமைச்சராக, எம்ஜிஆர் அரசாங்கத்திலேயே இருந்தவர். ஆனால், அந்த சவுந்தரராஜனுக்கு கொள்கைத் தடுமாற்றம் உண்டு. நம்முடைய சவுந்தரராஜனுக்கு என்றைக்கும் கொள்கைத் தடுமாற்றமே அன்றிலிருந்து இன்றுவரையிலே இல்லவே இல்லை. மிகத் தெளிவாக இருக்கக்கூடிய அவர் எம்.ஏ. படித்திருக்கிறார்.
இந்த அரங்கத்தை எடுத்துக் கொண்டீர்களேயானால், வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். அதே மாதிரி பொறி யாளர்கள் இருக்கிறார்கள். மேடையிலும் இருக்கிறார்கள். இன்னும் பல வகையில் இருக்கிறார்கள் என்றால், ஒன்றே ஒன்றுதான், இந்தக் கொள்கையை நீங்கள் ஏற்கலாம்; ஏற்காமல் இருக்கலாம். பல தரப்பட்ட கருத்துள்ளவர்கள் இருப்பார்கள். ஆனால், நான் ஒன்றே ஒன்றைத்தான் இந்த அவையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட இயக்கங்கள் இல்லாவிட்டால், இவ்வளவு பெண்கள் பட்டதாரிகளாக
ஆகி இருக்க முடியுமா?
ஆகி இருக்க முடியுமா?
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும், திராவிட இயக்கமும் பணியாற்ற முற்பட்டு, இன்று 110 ஆண்டுகள் ஆகின்றன நீதிக்கட்சி வந்து; சுயமரியாதை இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி வரிசையாக வந்திருக்கக்கூடிய திராவிட இயக்கங்கள். இந்த இயக்கங்கள் இல்லாவிட்டால், இவ்வளவு பெண்கள் பட்டதாரிகளாக ஆகி இருக்க முடியுமா? என்பதை எண்ணி பாருங்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய பாட்டியார் அல்லது கொள்ளு பாட்டியார் போன்றோர் பள்ளிக்கூடமே போயிருக்க மாட்டார்கள். பள்ளிக்கூடத்துக்கே அனுப்ப மாட்டார்கள். ‘‘அய்யோ பெண் படிக்கிறதா? பெண் படித்தால் என்னாகும்? பொம்பளை படிக்கலாமா?’’ என்று அதுவும் கிராமங்களில், பெண்களை அறவே படிக்க வைக்க மாட்டார்கள். நகரங்களில், ஒருவேளை முன்னே பின்னே வந்திருக்கலாம். ஆனால், அத்தனை பேரையும் ‘‘படி படி’’ என்று சொல்லி, இன்னுங்கேட்டால், ஆண்களை விட பெண்கள் முன்னுரிமை பெற வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
ஒரு பெண் படித்தால்,
நான்கு பேருக்குச் சமம்!
நான்கு பேருக்குச் சமம்!
ஒரே ஒரு இடம்தான் இருக்கிறது. அந்த இடத்தை ஒரு குடும்பத்தில் யாருக்குக் கொடுப்பது? என்ற நிலை வந்தால், தந்தை பெரியார் சொன்னார், ‘‘யோசிக்காமல் பெண்ணைப் படிக்க வையுங்கள்’’ என்று. ஏனென்று கேட்டால், ஒரு பெண் படித்தால், நான்கு பேருக்குச் சமம். அந்தக் குடும்பமே படித்ததாக அர்த்தம் என்பதற்காகத்தான்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை, இன்றைய தலைமுறை மணமக்களாக இருக்கக்கூடிய இவர்களைப் போன்ற தலைமுறையினருக்குத் தெரியாது. அவர்களுடைய பாட்டிமார்களுக்குத் தெரியும். பெண் சடங்கானால், பூப்பெய்தினால், மஞ்சள் நீராட்டு விழா நடந்துவிட்டால், வெளிச்சத்தையே பார்க்க முடியாது. வீட்டில், திரை கட்டி உள்ளே விட்டார்கள் என்றால், அதுவும் கிராமங்களில் இன்னும் மோசம்; சொந்த பந்தங்களைத் தவிர, மிகநெருக்கமான சொந்தங்களைத் தவிர, அந்தப் பெண் யாரையும், எட்டிப் பார்க்க முடியாது, தன்னுடைய பெற்றோர்களைத் தவிர. அப்படி ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தார்கள்.
பெரியாருடைய தாக்கம் இல்லாத
குடும்பம் கிடையாது
குடும்பம் கிடையாது
ஆனால், இன்றைக்கு என்னாயிற்று? அதை எல்லாம் கண்டித்து சுயமரியாதை இயக்கம் உழைத்ததினால்தான் நம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்திருக்கிறார்கள். மணமகள் கிருத்திகா அவர்கள் எம்டெக் படித்திருக்கிறார். சாதாரண படிப்பல்ல அது; பொறியாளர் துறையிலேயே மிகப்பெரிய அளவிற்கு மாஸ்டர்ஸ் டிகிரி. அதே மாதிரி மணமகன் அதியமான் அவர்களும் மாஸ்டர்ஸ் டிகிரி பொறியாளர் படிப்புப் படித்திருக்கிறார். போஸ்ட் கிராஜுவேட் என்று மேல்பட்டப் படிப்பு. அதே நேரத்தில், முருகன் என்ன படித்துள்ளார்? யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். சம்பத் என்ன படித்திருக்கிறார்? அவர்களுடைய அப்பா என்ன படித்தார்? எங்கள் குடும்பத்தில் நான் முதல் பட்டதாரி. ஆனால், என்னுடைய அப்பா ஆறாம் வகுப்புதான் படித்திருக்கிறார். தமிழில் எழுதத் தெரியும். அவருடைய அப்பா எவ்வளவு படித்திருக்கிறார்? யாருக்கும் தெரியாது; ஏனென்றால், அதற்கு மேலே நம்முடைய வரலாறு தெரியாது. ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. மூன்று தலைமுறை, நான்கு தலைமுறை தொடர்ந்து இந்தக் கொள்கையால் பயன்பெற்றதினால், நன்றாகப் படித்திருக்கிறார்கள். பெரியார் கொள்கையை நேரடியாக ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ பெரியாருடைய தாக்கம் இல்லாத குடும்பம் கிடையாது. தமிழ்நாட்டில் பெரியாரால் பயன்பெறாத குடும்பம் இல்லை. எல்லா குடும்பமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்பெற்றிருக்கின்றன!
‘‘எதைக் கொடுத்தாலும் கீழ் ஜாதிக்காரர்களுக்கு, சூத்திரர்களுக்குப் படிப்பு கொடுக்கக்கூடாது’’ என்பது மனுதர்மம்!
காமராஜர் ஆட்சிக்கு வந்தார்; ஆச்சாரியார் மூடிய பள்ளிக்கூடத்தையெல்லாம் திறக்க வைத்தார் பெரியார் அவர்கள். அதனுடைய விளைவைப் பார்த்தீர்களேயானால், நம் பிள்ளைகள் எல்லோரும் படித்தனர். குலக்கல்வி திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்தார்கள். மனுதர்மத்தில் என்ன எழுதி யிருக்கிறார்கள் என்றால், ‘‘எதைக் கொடுத்தாலும் கீழ் ஜாதிக்காரர்களுக்கு, சூத்திரர்களுக்குப் படிப்பு கொடுக்கக்கூடாது’’ என்பதுதான்.
சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் எப்படி படிப்பு கொடுக்கக் கூடாது என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதோ, அதே மாதிரி அதைவிட கீழாக இருக்கக்கூடிய பெண்கள், இன்னுங்கேட்டால், உயர் ஜாதிப் பெண்கள் உட்பட படிப்பு கொடுக்கக் கூடாது என்றுள்ளது.
அதை மறுத்து, மாற்றி அமைத்த பெருமை பெரியாருக்கு, திராவிட இயக்கத்திற்கு உரியது. அதனால்தான் இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
பெண்களைப் பார்த்து,
‘‘நல்ல வேலைக்காரியாக இருப்பதற்கு, சமைக்கக் கற்றுக்கொள்!’’ என்றனர்!
‘‘நல்ல வேலைக்காரியாக இருப்பதற்கு, சமைக்கக் கற்றுக்கொள்!’’ என்றனர்!
பெண்களுக்கு கரண்டியைப் பிடிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். ‘‘நல்லா சமைக்கக் கற்றுக் கொள். கல்யாணமாகி, உன் வீட்டுக்காரருக்கு நல்லா ருசியா சமைக்க வேண்டும். நல்ல வேலைக்காரியாக இருப்ப தற்கு, சமைக்கக் கற்றுக்கொள்’’ என்று சொல்வார்கள்.
அப்படிப்பட்ட நிலையிலே, சமையலும் ஓரளவு தேவைதான். யார் வேண்டுமானாலும் சமைக்கலாம் மிக முக்கியமாக. ‘ஏங்க, ஆம்பளை எப்படிங்க சமைக்க முடியும்?’ என்று கேட்கலாம். ‘நள பாகம்’ என்று சொல்கிறார்கள் பாருங்கள்; அவர் யார், ஆண்தானே! மிகப்பெரிய அளவுக்கு இருக்கிறதிலேயே ரொம்பப் பெரிய சமையல்காரன் யார் என்றால், நளன்தான் என்று சொல்லுவாார்கள். அதுமட்டுமல்ல, திருமணங்களில் எல்லாம் – இந்தத் திருமணம் முடிந்ததும்கூட, சாப்பிடச் சொல்வார்கள். நாம் விருந்துக்குப் போகப்போகிறோம். இங்கே சமையலை செய்வது யார் என்றால், முழுக்க முழுக்க பெண்கள் தயாரிப்பு இல்லை. பெரிய அளவு எண்ணிக்கையில் சாப்பிடுவதற்கு எல்லாம், ஆண் சமையல்காரர்கள் தான் இருக்கிறார்கள்.
பெண்களின் கைகளில் இருந்த கரண்டியைப் பிடுங்கி எறிந்துவிட்டு, பேனாவைக் கொடுத்தவர் தந்ைத பெரியார்!
இதற்கு மட்டும் ஆண் சமையலா? ஆனால், அதே நேரத்தில், படித்தவர், கணவராக வருகிறவர், வாழ்க்கைத் துணைவராக வருகிறவர் மட்டும் சமைக்கக் கூடாது. அவர் சமைப்பதா? இப்படி ஓர் ஆண் ஆதிக்க சமுதாயத்தை உருவாக்கியபோது, ‘‘எல்லோரும் எல்லாம் செய்யலாம். பெண் கையில் இருந்த கரண்டியைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அந்தக் கையில பேனாவைக் கொடுத்தவர்தான்’’ தந்தை பெரியார்.
பெண்கள் எல்லாம் இப்பொழுது தனி அலுவலகத்தை வைத்துக்கொண்டு, கணினியைத் தட்டுகிறார்கள்; உலகமே அவர்களுடைய கைக்குள்ள வந்தாயிற்று.
அப்பேர்ப்பட்ட ஓர் அறிவியல் புரட்சி, ஓர் அமைதிப் புரட்சி, அறிவு புரட்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே, ரொம்ப மகிழ்ச்சி – ஒரு சிறப்பு.
(தொடரும்)
