உலகின் அறிவு தாகத்திற்கு, தந்தை பெரியாரின் கொள்கையின் கூர்மையே இன்றைய தேவை!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200 ஆவது கருத்தாய்வு!
தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றிய நேரடி நிகழ்ச்சி!

தொகுப்பு: திருப்பத்தூர் ம.கவிதா

சென்னை, மே 26 சிறந்த நூல்களின் சிறந்த சிந்தனை களை வெகு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதல் முன்னெடுப்பாக  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் வாராவாரம் நடத்தி வரும் தொடர் இணைய வழி நூலாய்வுக் கூட்டங்கள் 1.7. 2022 அன்று தொடங்கி வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் நடை பெற்று, 200 ஆவது நிகழ்வாக சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நேரடி நிகழ்வாக கடந்த 23.5.2026 அன்று நடைபெற்றது.

மறைந்த பகுத்தறிவுக் கலைத்துறை மாநிலத்தலைவர் பொம்மலாட்டக் கலைஞர்  மு. கலைவாணன் அவர்க ளுக்குக் கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தி ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.

எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு தலைமை தாங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியரின் 40 நூல்கள் இம்மன்றத்தில் திறனாய்வு செய்யப்பட்டிருக்கின்றன என்றும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் எழுதிய நூல்கள், அவர்களைப் பற்றிய நூல்கள் மற்றும் நமது திராவிட இயக்க நூல்கள் திறனாய்வு செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லி, நிகழ்விற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தம்முரையில் நன்றி நவின்றார். முதன் முதலில் கலந்துரையாடல் கூட்டத்தில்  மதுரையில்  ஆசிரியர் அவர்கள் ரூ.1000 நன்கொடையைப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்திற்குக் கொடுத்துத் தொடங்கி  வைத்தார்கள். இந்த நேரடி நிகழ்வு, வாருங்கள் படிப்போம் குழுவோடு இணைந்து ,சென்னை,திருச்சி, மதுரை எனப் பல ஊர்களில் நடத்திய வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள்  மற்றும் எல்லா நிகழ்வுகளுக்கும் நமது தோழர்கள் தாராளமாக பண உதவி செய்கிறார்கள், எல்லா நிகழ்வுகளிலும் கொஞ்சமாவது பணம் மிஞ்சும் வகையில்தான் நாம் நடத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.

‘‘எழுத்தைப் போர்க் கருவியாக மாற்றவும், ஒவ்வொரு தோழரின் தனிப்பட்ட எதிர்நீச்சல் வாழ்வைப் பதிவு செய்யவும் வழிகாட்டிய தமிழர் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்துகிற தொடர் நூலாய்வு நிகழ்ச்சிகளில் 100 ஆவது நிகழ்ச்சியில் இணைய வழியில் பங்கேற்று ‘விடுதலைக் களஞ்சியம் – பழைய வரலாறு புதிய பார்வை’ என்ற தலைப்பில் உரை யாற்றியதோடு இன்றைய 200 ஆவது நிகழ்விற்கும் ‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’ என்ற அருமையான தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள்”  என்று கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட  அனைவரையும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம. கவிதா வரவேற்றார்.

புதுமை இலக்கியத் தென்றலின் தலைவரும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செய லாளரும் இணைய வழியில் கூட்டங்களைத் தவ றாமல் ஒருங்கிணைத்துச் செல்லக்கூடியவருமான பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் நேரடி நிகழ்வை ஒருங்கிணைத்தார். “இது உங்கள் மன்றம், உங்கள் அமைப்பு நீங்கள் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து இங்கே திறனாய்வு நடத்துங்கள்” என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

“நம்முடைய நூல்கள் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் மற்ற நம் உணர்வாளர்களுடைய நூல்களையும் நாம் எடுத்துப் பேசுவோம். அவர்களும் நம் இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.இரண்டரை மாதங்களுக்கு ஒரு முறை நேரடிக் கூட்டங்கள் வழியாக சந்தித்து நூலாய்வுகள் நடத்தும் ஒரு முறையையும் ஏற்படுத்துவோம். என்னைப் போன்றவர்கள் இந்த இயக்கத்தின் பால் வந்ததற்கு வாசிப்புப் பழக்கம் ஒரு காரணமாகும். இன்னும் நாம் கிராமப்புறங்களில் சென்று எழுத்துப் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும்” என்று பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.

இங்கே, இணைய வழியில் நான் நூலாய்வு செய்தி ருக்கிறேன். நீங்கள் பேச்சாளர்களை மட்டுமல்ல கருத்தாளர்களையும் உருவாக்கிக் கொடுக்கிறீர்கள் என்று திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் வீரமர்த்தினி வாழ்த்தினார்.

ஊடகத்தினுடைய ஆதிக்கம் கோலோச்சுகின்ற இந்த உலகச் சூழலிலே பேச்சுகளையும் எழுத்துகளையும் பதிவு செய்வது  மிகவும் அவசியமாகிறது. அந்த வகை யில் தொடர்ச்சியாக இவை நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என ஊடகத்துறை மாநிலச் செயலர் அழகிரிசாமி உரையாற்றினார்.

“நூல்கள் இங்கே தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. யாரிடம் கொடுத்தால் சிறப்பாக அதை செய்வார்கள் என்று தேர்ந்தெடுத்து நிறைய வைரங்களைப் பட்டை தீட்டுவதைப் போல் ஒவ்வொரு வரையும் இந்த எழுத்தாளர் மன்றம் உருவாக்கி இருக்கிறது” என்று பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி. கருணாநிதி வாழ்த்தினார்.

சிலர் எழுதுவார்கள்; ஆனால், பேச வராது, ஆனால், எழுத்தாளர்களை பேச்சாளர்களாக இந்த அமைப்பு உருவாக்குகிறது. இதை வளரும் எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  எழுத்தாளர் பொ.நாகராசன் கூறினார்.  தொடர்ந்து மயிலாடுதுறை கி.தளபதிராஜ்  வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்ததாக,ஒரு எழுத்தாளருக்குரிய இலக்கணமாக தந்தை பெரியார் சொல்வது அவர்கள் கருத்தாளர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு எழுத்தாளர் தன் எழுத்தின் வலிமையை உணர்ந்திருக்க வேண்டும், தன் எழுத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், எழுத்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்த்திருக்க வேண்டும் என்று அதிரடி அன்பழகன்  கூறினார்.

நிகழ்வில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர்கள் முனைவர் கோ.ஒளிவண்ணன், பேராசிரியர் நம் சீனிவாசன், எழுத்தாளர் ஞான வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வு தொடங்கும் முன்பாக எழுத்தாளர் மன்றப் பொறுப்பாளர்களிடம் மேலும் அமைப்பை வலி மைப்படுத்தும் வழிவகைகளை எழுத்தாளர் மன்றத் தலைவர்,மாநிலச்செயலாளர்கள் கலந்தாலோசித்தனர்..

நிகழ்வில் எழுத்தாளர் வி.சி. வில்வம்  இயக்குநர் பாலு மணிவண்ணன், பொறியாளர் தா.கு. திவாகரன், எழுத்தாளர் தேன்மொழி, வேலூர் மாவட்டத் தலைவர் சிவகுமார்,  புதுமை இலக்கியத் தென்றல் பொறுப்பாளர் மு.ரா. மாணிக்கம், தாமோதரன், தோழர் முருகையன், தனலட்சுமி தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

நன்கொடைகள்

23.05.2026 பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற சிறப்பு நிகழ்விற்கு நன்கொடை அளித்தவர்கள் விவரம்:

தருமபுரி கிருஷ்ணமூர்த்தி  ரூ.2000, கனிமொழி வெப்பலாம்பட்டி  ரூ.1000, திருப்பத்தூர் தோழர்கள் வெண்ணிலா ரூ.1000, கண்ணகி ரூ.1000, வி.ஜி.இளங்கோ ரூ.3000,  சென்னை இசையின்பன் ரூ.1000, லோ.குமரன் ரூ.5000, குடந்தை பேரா ம.சேதுராமன் ரூ.2000, மதுரை தோழர்கள் இரா.அழகுப்பாண்டி ரூ.1000, சே.முனியசாமி ரூ.1000, பேரா சி.மகேந்திரன் ரூ.1000, செல்ல கிருட்டிணன் ரூ.1000, வா.நேரு ரூ.2000, நாகமலை இராமச்சந்திரன் ரூ.1000,  மயிலாடுதுறை கி.தளபதிராஜ் ரூ.1000, ஞான வள்ளுவன் ரூ.1000, முனைவர் கோ;ஒளிவண்ணன் ரூ.1000, வி.சி.வில்வம் ரூ.1000, புதுச்சேரி வி.இளவரசி சங்கர் ரூ.2000,  எஸ்.இராசகோபால் ரூ.1000, மாரி கருணாநிதி ரூ.1000, ந.தேன்மொழி ரூ.1000, வேண்மாள் கோவிந்தன் ரூ.2000, நிகழ்வில் தன் பிறந்த நாள் மகிழ்வாக  வேல்.சோ.நெடுமாறன் ரூ.5000.

தமிழர் தலைவர் உரை

இதுவரை வெளியிடப்பட்ட 199 நூல்களைப் பற்றி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக்கூட்டத்தில் நூல் மதிப்புரை செய்யப்பட்டது.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் புரவலர் ஆசிரியர் அவர்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நூல் ‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’ என்று குறிப்பிட்டு  உரையாற்றினார்.

“தொடங்கி வைத்த நானே 200 வது கூட்டத்திலும் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், எனக்கும் இது மறுவாசிப்பிற்கு ஒரு வாய்ப்பாகக் கொள்கிறேன். பெரியார் சிந்தனையானது கடல் போன்றது, அதன் கூர்மையைக் கண்டுபிடித்தால் பல தளங்களிலும் இன்னும் நாம் இதை விரிவாகக் கொண்டு செல்ல முடியும்’’ என்று கூறிய தமிழர் தலைவர் தம் உரைப்பொழிவின் மூலம் கீழ்க்கண்ட நறுக்குத் தெறித்த கருத்துகளைச்  சுவைபட அரங்கம் அறியத் தந்தார்.

1) நான் 15 வயதில் படித்த பெரியார் வேறு, 25 வயதில் படிக்கும் போது  அதைவிட வித்தியாசமாக இருந்தது, 55 வயதில் அவரைப் படிக்கும் போது இன்னும் அது கூர்மையானது…எனவே அவரின் நூல்கள் எதுவாக இருந்தாலும் நம்முடைய முதிர்ச்சி, நம்முடைய அறிவுத் தெளிவை வைத்து தான் தந்தை பெரியாரின் சிந்தனையின் கூர்மையை உணர முடியும்.

2) நாமெல்லாம் பகுத்தறிவுவாதிகள் ஆனால் பெரியார் முழுப் (பூரண) பகுத்தறிவுவாதி! ஏனென்றால் ஆசா பாசங்களுக்கு அவர் பயப்பட்டதில்லை. உலகமே புரண்டு போகும் எதிர்ப்பு வந்தாலும் அவர் கவலைப் பட்டதில்லை. அந்தச் துணிச்சல்தான் பெரியார் சிந்தனையின் கூர்மையாகும்.

3) பெரியார் சிந்தனைக்குத் தடைகள் இல்லை. அவர் சுதந்திர மனிதனாக இருந்தார்.  எதையும் முழு நிர்வாணத் தன்மையுடன் அவர் பார்த்தார். எங்கும் ஜொலிப்புகள் இல்லை.

4) அவர் ஒரு எதார்த்த மனிதர்! ஏன் தாடி வளர்க்கிறீங்க என்று கேட்டபோது, அதுவா வளருது… நான் என்ன பண்றது? எதற்கு 15 நிமிடம் அதற்கு வீணாக்குவது என்று இயல்பாகச் சொன்னவர்.

5) தமக்குச் சரி என்று பட்டதைக் கூற எதற்கும் அவர் பின்வாங்கியதில்லை. மானாமதுரையில் வெற்றிலை பாக்கு மாநாடு கூட்டி அய்யாவைப் பேச அழைத்த போது இது தேவையற்ற மாநாடு என்று சொன்னார். இந்தத் துணிச்சல் யாருக்கு வரும்? நாமே நினைப்போம் வேறு ஆள்கள் உள்ள கூட்டத்தில் நம் கருத்துகளை அதிகமாக சொல்லலாமா என்று, ஆனால் பெரியாரிடம் அந்த விஷயமே கிடையாது.

6) பெரியார் சில நேரங்களில் மற்றவர்களின் தவறு களைப் பொறுத்துக் கொள்வார். சகிப்புத்தன்மையோடு இன்னும் அவர்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துப் பார்ப்பார்.

7) தந்தை பெரியார் சுலபமாக யாரையும் நம்ப மாட்டார்.  பல பரீட்சைகளை வைப்பார் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார். அப்படி பல ஆண்டுகாலம் அவர் பார்த்துப் பார்த்து அவரின் நம்பிக்கைக்குரியவர் ஆனவரே அன்னை மணியம்மையார்.

8) 1937 இல் இருந்து இயக்கச் சொத்துகளுக்கான ஏற்பாடுகள் செய்ய அவர் சிந்தித்து வந்திருக்கிறார்… மாநாடுகளில் தீர்மானங்கள் போட்டிருக்கிறார். மணி யம்மையார் அவரின் நம்பிக்கைக்குரியவராகத் தெரியும் போது அவரைத் தத்தெடுக்க இந்து மதத்தில் அவர் ஒரு பெண் என்பதால் அதற்கு இடமில்லாத போது அதற்கான வழிவகைகளை வழக்கறிஞர்களுடன் கலந்து பேசுகையில் எந்த எதிர்ப்பையும் பற்றி கவலைப்படாமல், மனைவிக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு என்று சொல்லும் போது, சரி மனைவி என்று போடுங்க, பதிவு செய்து கொள்ளலாம் என்று சொன்ன அந்தச் துணிச்சலும் தெளிவும் அவரின் சிந்தனை கூர்மையாகும். (இயக்க ஏற்பாட்டிற்காக செய்வதில் எழுந்த சிக்கலை முடித்து வைக்கும் பிராப்ளம் சால்விங் வழிமுறை) அந்த தொலைநோக்கால்தான் இன்றைக்குப் பெரியார் திடல் தப்பியது  எதிர்ப்பாரும் தவிர்க்க முடியாத இடமாக இன்றும் இருக்கிறது.

9) திருமண ஏற்பாட்டிற்கு எதிர்மறை பதிலை அளித்த ராஜாஜி அவர்களின் நிலைப்பாட்டை எக்கார ணத்தினாலும் அவர் மறைந்த பிறகும் உணர்ச்சி வசப்பட்டு காட்டிக் கொடுக்காத தந்தை பெரியாரின் சிந்தனையின் வியக்கத்தக்க கூர்மை.

எதிர்ப்பு வந்தாலும் காட்டிக் கொடுக்காத நேர்மை. பொதுமக்கள் யோகியதை  என்ன என்று  எனக்குத் தெரியும் என்று தன் உறுதியில் அவர் மேற்கொள்ளும் நிலைப்பாடு.

10) மேற்கோள்காட்டிப் பேசாமல் எளிய மொழிகளால் புரிய வைக்கக்கூடிய ஒப்பற்ற சுய சிந்தனை.

புரியாத கடின தத்துவங்களாக இல்லாமல் நடை முறை வாழ்க்கைக்கு ஒத்துப்போக கூடிய எளிமையான கருத்துகளோடு மக்களுக்கு வலிமையாய் புரிய வைக்கும்  சிந்தனையில் கூர்மை.

11) மொழி ஒரு போர்க் கருவி என்று இதுவரை எவருமே சொல்லாத சிந்தனையைக் கூறியது!

12) மின்சாரத்தில் வாகனங்கள் ஓடும் என்று கூறும் காலத்தை எதிர் நோக்கிய சிந்தனை. நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சிந்தித்த சிந்தனை!

13) அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாத சிந்தனை யின் கூர்மை

14) உண்மையைச் சொல்லவே நேரமில்லை ,நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன்?  மரண வாக்குமூலம் போலத் தான் என் வாக்குமூலம் என்று சொல்லும் தெளிவு!

15) அறிவுக்காக அறிவு இல்லை, செயலுக்கானது, அந்தச் செயல் மக்களுக்குப் பயன் விளைவிக்க வேண்டி யது என்ற அடிப்படையில் தன் வாழ்வை அமைத்த சிந்தனைக் கூர்மை!

இத்தனை செய்திகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஆய்வுப் பிழிவை ஆசிரியர் தந்தார். இது ஒரு தொடக்கம்தான் இதை நாம் தொடரலாம் என்று சொன்னார். அன்னை மணியம்மையாரின் தொண்டறம்  எனும் நூலிலிருந்து பல செய்திகளை எடுத்துக்காட்டினார்.

அன்று முழுவதும் கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற அடிப்படையில் ஓடிக் கொண்டிருந்த  தமிழர் தலைவர் ஆசிரியர் தம் உரையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அயற்சி என்பதையே மறந்தவராய் உரையாற்றி  அரங்கத்திற்குப் பயிற்சி கொடுத்தார் என்பதைக் கண்டும் கேட்டும் புத்துணர்ச்சி பெற்றும் மகிழ்ந்தோம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப்பொறுப்பாளர்களுக்கும், கூட்டு முயற்சியான இந்த இணைய வழிக்கூட்டத்தில் தங்கள் பங்களிப்பை செலுத்தி வரும் பொறுப்பாளர்க ளுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

நிறைவாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், ஆசிரியர் அவர்களுக்கும், மற்ற தோழமைகளுக்கும் நன்றி தெரி வித்து உரையாற்றினார். இரவு சிற்றுண்டியோடு இனிதாக நிகழ்வு நிறைவு பெற்றது. மிகப்பெரிய ஊக்கம் பெற்று, தொடர் இணையவழிக்கூட்டங்களை  இன்னும் நிகழ்த்திட, நேரடி நிகழ்ச்சிகளை நடத்திட உறுதியேற்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொறுப்பாளர்கள் தங்கள் தங்கள் ஊர் திரும்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *