பூரி ரத யாத்திரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

2 Min Read

புவனேஸ்வர், ஜூலை 19- ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரையில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

ஏராளமான பக்தர்கள் திரண்ட இந்த விழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கையை அரசு மூடிமறைப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கூட்ட நெரிசல்

பூரி ஜெகந்நாதர் கோயிலின் ஆண்டு ரத யாத்திரை 16.7.2026 அன்று தொடங்கியது. தேர்கள் கோயிலின் முக்கிய வீதியான ‘கிராண்ட் ரோடு’ பகுதியில் வந்தபோது, தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் அலைமோதினர். திடீரென ஏற்பட்ட முண்டியடிப்பினாலும், தள்ளுமுள்ளுவினாலும் அப்பகுதியே நிலைகுலைந்தது.

கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கையில்
நீடிக்கும் குளறுபடி

இந்த விபத்தில் 60 வயது முதியவர் உள்பட இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், உள்ளூர் ஊடகங்களும் கள நிலவரங்களும் முற்றிலும் வேறுபட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடுகின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மையை மறைக்கிறதா அரசு?
– எழும் குற்றச்சாட்டுகள்

மத நம்பிக்கையும், ஆன்மீக விழாக்களில் நடக்கும் மரணங்களும் அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், ஒன்றிய மற்றும் ஒடிசா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு உண்மைகளை மூடிமறைக்க முயல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள் மூலமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோரின் விவரங்களை மிகக் குறைவாகக் காட்டி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காட்ட அரசு முயல்வதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முக்கியக் கேள்வி

ஆன்மீக விழாக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தொடர்கதையாகி வரும் இதுபோன்ற கூட்ட நெரிசல் மரணங்களைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல், மத உணர்வுகளைக் காரணம் காட்டி அரசுகள் அமைதி காப்பது முறையா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *