இன்று (ஜூலை 15ஆம் நாள்-2026) தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது 150ஆம் ஆண்டு பிறந்த நாள்

3 Min Read

 கி.வீரமணி 

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் என்றும் சாவதில்லை” என்ற புரட்சிக் கவிஞரின் தத்துவக் கருத்தில் எவ்வாறெல்லாம் தமிழ் உரிமையும், உணர்வும், தமிழ் காக்கும் போர்க்குணமும் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் தமிழ் மொழி உணர்வுக்கு ஆதரவாக. ஹிந்தித் திணிப்புக்கு எதிராகக் களம் கண்ட மறைமலை அடிகளாரும் சுடராய்த் திகழ்வார். சுயமரியாதை என்பது மொழி, பண்பாடு காப்பாற்றும் சுயமரியாதைதான் என்பதை நிறுவி, ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்பைக் கொண்டு வந்து  அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் – திரு.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது இட்ட ஆணையை எதிர்த்துத் தாய்மார்கள் பச்சிளங் குழந்தைகளோடு சிறையேகிய போராட்டத்தில், தனித்தமிழ் இயக்கத்தின் அரும்பெரும் புலவர்களை ஹிந்தி எதிர்ப்பு மேடையில் ஒன்றாக்கிய பெருமை தந்தை பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் உண்டு.

“கடவுள் நம்பிக்கை, சமயத்தில் சைவம் தழைத்தோங்கிட நாத்திகத்தை எதிர்ப்போம்” என்பவர்கள் கூட, பொது நோக்கோடு ஒன்றிணைந்தனர். “ஹிந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா?” என்று கேட்டு அதற்கு எதிராக “எல்லாரும் வாருங்கள் நாட்டினரே” என்பதை அன்று பன்மொழிப் படித்துத் துறைபோகிய மறைமலை அடிகளார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் போன்றோர் தந்தை பெரியாருக்குப் பெரும் பக்க பலமானவர்கள் – ஹிந்தி எதிர்ப்புப் பெரும் போரில்! எவ்வளவோ கொள்கை மாறுபாடு இருந்தாலும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் எழுதிய ‘அறிவுரைக் கொத்து’ என்ற நூலைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப்பாட நூலாக (Non-detailed Text) வைத்ததை எதிர்த்துப் பார்ப்பனர்கள் கண்டனக் கூக்குரல் எழுப்பியதை எதிர்கொண்டு. அதற்காகத் தனது ‘குடிஅரசு’ ஏட்டில், மலைமறை அடிகளாருக்கு ஆதரவாக நின்று வென்று காட்டியவர் தந்தை பெரியார் என்பதை இன்றைய இளந் தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்!

ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்தின் பரப்புரைக்கான அறப்போர் ஆயுதங்களில் ஒன்றாகிய “ஹிந்தி பொது மொழியா?” என்று ஒரு சிறு நூலை வெளியிட்டு, ஹிந்தி மொழி ஒரு சரக்கில்லா மொழி – குறிப்பாக சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி – அவர்கள் பிரச்சாரத் தந்திரத்தின்படி தேவபாஷை எழுத்து என மக்களை ஏமாற்றி “தேவ நகரி” என்று ஒரு மொழியில் உயர்வு – தாழ்வினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடம் பெறுமாறு செய்தது பெருங்கொடுமையல்லவா?

1967இல் (அறிஞர் அண்ணா திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டில்) எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்ப் பாட நூலில் (அதற்கு முன்னரே தேர்வு செய்த பாடத் திட்டத்தின்படி) மறைமலை அடிகளார் எழுதிய வடமொழி – சமஸ்கிருதம் பற்றிய ஒரு கட்டுரை – இடம் பெற்றதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் அவர்களது குருஷேத்திரமான நாளேடுகளில் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ என்று கண்டனக் கணைகளை ஏவி, தி.மு.க. – அண்ணா ஆட்சியை மிரட்டி, உருட்டிப் பார்த்தனர். முதலமைச்சர் அண்ணா அரசு உறுதியுடன் தேர்வு முடியும் வரை விடாப்பிடியாக அப்பாடத்தை நீக்காமல், கொள்கை ஆட்சியாக இருந்து ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு முன்னோட்டமாக ”எதிர்ப்புக்கு என்றும் பயப்பட மாட்டோம்” என்று காட்டி, எதிர்ப்பினைப் பஞ்சு பஞ்சாக்கினர்.

எனவே விழா நாயகர் மறைமலை அடிகளார் கொள்கை நெறிப்பட்ட வழியும், திராவிட இயக்கமும் ஒரே அளவில் நிற்கின்றன.

அதன் விளைவு கலைஞரால் தமிழ் செம்மொழியாக்கிடப் பெற்ற பெரு வெற்றி!

எனவே திராவிடர் கழகம் மறைமலை அடிகளின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை ஒரு மாபெரும் கருத்தரங்காக மொழி உரிமைக் கருத்தாக்கங்களுடன் அடுத்த மாதம் நல்லறிஞர்களை அழைத்துப் பங்கு பெறச் செய்து – அடிகளாரின் குடும்ப, கொள்கை வாரிசுகளையும் அழைத்து வெகு சிறப்புடன் நடத்திடத் திட்டமிடுவோம்.

வாழ்க மொழி அறிஞர் மறைமலை அடிகள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *