புனே, ஜூலை 14- புனேயில் லாரி மோதி பண்டர்பூருக்கு நடைப்பயணம் சென்ற 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.
மராட்டியத்தில் ஆசாடி ஏகாதசியையொட்டி பண்டர்பூர் விட்டல் சாமி கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குழுவினர் நடைப்பயணம் செல்வது வழக்கம். இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ‘வர்க்காரிகள்’ என அழைக்கப்படுகின்றனர்.
புனே மாவட்டம் ஜெஜூ அருகில் சாங்கிலியைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று (13.7.2026) காலை நடைப்பயணம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பக்தர்களை ஏற்றி வந்த லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைப்பயணம் சென்று கொண்டு இருந்த பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் நடைப்பயணம் சென்று கொண்டு இருந்த 7 பக்தர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜெஜூரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது பெண் பக்தர்களான நந்தா பவார் (வயது 70), மாதவி (வயது 55), ராஜசிறீ (வயது 55) ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. மற்ற 4 பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுநர் பாலாஜியை (வயது 70) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து எடுத்து இருந்தது தெரியவந்துள்ளது. லாரி மோதி 3 பெண்கள் உயிரிழந்த நிகழ்வு பண்டர்பூருக்கு நடைப்பயணம் செல்லும் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
