சிறீநகர், ஜூலை 13- ‘‘எங்கள் ஆட்சியை கவிழ்ப்பதற்காக, எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரையில் கொடுப்பதாகவும், அமைச்சர் பதவிகள் மற்றும் மாநில தகுதி வழங்குவதாகவும் பாஜக பேரம் பேசுகிறது” என்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
ரூ.20 கோடி
சிறீநகரின் ஹஸ்ரத்பாலில் நடைபெற்ற தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அப்துல்லா, “தேசிய மாநாட்டுக் கட்சியைப் பிளவுபடுத்த பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. ஜம்முவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் வந்து, உச்ச நீதிமன்ற வழக்குரைஞராக இருக்கும் பாஜக நிர்வாகி ஒருவர், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டு, ரூ.20-30 கோடி, அமைச்சர் பதவி மற்றும் மாநில தகதி ஆகியவற்றை வழங்குவதாக உறுதியளித்ததாகக் கூறினார். மக்களின் நம்பிக்கை மிகவும் பலவீனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை வழங்குவது பலனளிக்காத நிலையில், இப்போது எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரகசியமாக, ‘எங்களுடன் வாருங்கள், நாங்கள் உங்களுக்கு மாநில தகுதியை பெற்றுத் தருகிறோம்’ என்று கூறி வருகிறார்கள். ஆனால், எனது எம்எல்ஏக்கள் விலைபோக மாட்டார்கள். இந்த மேடையில் உள்ள எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் 30 கோடி ரூபாய்க்கோ அல்லது 100 கோடி ரூபாய்க்கோ தங்கள் நேர்மையை விற்க மாட்டார்கள்.
பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்துவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. பின்வாசல் வழியாக வந்து உங்களால் ஒருபோதும் முன்வரிசை அதிகாரத்தை அடைய முடியாது. மக்கள் உங்களைப் பின்வரிசையிலேயே வைத்துள்ளனர், அங்கேயேதான் நீங்கள் நீடிப்பீர்கள்” என்று உமர் அப்துல்லா கூறினார்.
