சிகிச்சை முடிந்து சிங்கப்பூரில் இருந்து திரும்பிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு – சென்னை விமான நிலையத்தில் பேட்டி

7 Min Read

ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம்…
தி.மு.க.வினரின் வரலாற்றிலேயே கிடையாது!

சென்னை, ஜூலை 13 ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம்…தி.மு.க.வினரின் வரலாற்றிலேயே கிடையாது! என்றார்  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து, நேற்று (12.7.2026) சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு  செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

‘‘இன்றைக்கு நான் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்திருக்கிறேன். இப்பொழுது நீங்கள் சோதனைக்கு வந்திருக்கிறீர்கள். இன்றைக்கு நீங்கள் சோதனையை முடித்தவுடன், நாளைக்கு சிங்கப்பூர் செல்வதற்காக டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்று சோதனை செய்த வர்களிடம் சொன்னேன். அன்றைக்கு இரவே அவர்கள் சோதனையை முடித்துவிட்டுப் போனவுடன், இதே பத்திரிகை நண்பர்களைப் பார்த்து, சோதனை நடைபெற்ற விஷயம் குறித்து நான் பேசினேன்.

25 ஆம் தேதி சிங்கப்பூருக்குச் செல்வதற்காக வாங்கியிருந்த டிக்கெட்டை, 26 ஆம் தேதி காலையில், அதே இண்டிகோ விமானத்தில் செல்லும் வகையில் மாற்றினேன்.

அதே விமானத்தில், நான் 26 ஆம் தேதி, இங்கிருந்து சிங்கப்பூருக்கு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றேன். அங்கே உள்ள மருத்துவ மனைக்கு நான் சென்றவுடன், என்னு டைய மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் தொடங்கப்பட்டன.

எனக்கு உடலில் பல பிரச்சினைகள் உள்ளன. அலர்ஜி, நரம்புப் பிரச்சினை, இதயப் பிரச்சினை என்பதுதான் அந்தப் பிரச்சினைகள். இந்த மூன்று பிரச்சினைக்காகத்தான் அங்கே சென்று மருத்துவம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, நான் அங்கே போனேன்.

அலர்ஜி பிரச்சினை

அலர்ஜி பிரச்சினை ஏன் வருகிறது? நாம் உண்ணுகிற உணவுப் பொருள்கள் எல்லாம் எது எது என் உடலுக்கு ஒத்துக் கொள்ளும். ஏன் அதனால் அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக ஒருமுறை ஊசி போட்டால், மூன்று நாள்கள் அப்சர்வ் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மருத்துவர்கள் சொன்னபடியே, மூன்று முறை நான் ஊசி போட்டுக் கொண்டேன். அதற்கே 9 நாள்கள் ஆயிற்று.

இரண்டாவது, 29.6.2026 அன்றைய நாள் கார்டியாலஜிஸ்ட் மருத்துவரையும், நரம்புப் பிரச்சினைகளுக்காக நரம்பி யல் டாக்டரான லீக்கிம் பென் என்ற மருத்துவரிடம், மருத்துவ ஆலோ சனை செய்து, அன்றைய தினம், மருத்து வப் பரிசோதனைகளைச் செய்து கொண்டேன்.

அடுத்ததாக, 30.6.2026 அன்று, என்னுடைய வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக, பீட்டர் யங் கெங் என்பவரை அன்றைக்குச் சந்தித்து, மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டேன்.

மெடிக்கல் சம்மரி

அன்றைய தினமே, அலர்ஜி (ஒவ்வாமை) டாக்டர் சென் இங் குவாங் என்ற மருத்துவரைப் பார்த்தேன். 9.7.2026 ஆம் தேதி வரையில் அவருடைய மருத்துவம் தொடர்ந்து இருந்தது. அதே நேரத்தில், 3.6.2026 ஆம் தேதி இதய மருத்துவர் டாக்டர் ஜெயராமன் லிங்கமநாயக்கர். அவருடைய மேற்பார்வையில்தான், அவர்தான் சீப் டாக்டர், அவருடைய பரிந்துரையின் பேரில்தான் ஒவ்வொரு டாக்டரையும் நான் பார்த்து, மருத்துவப் பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். அதுக்குரிய எல்லா டாக்ட ருடைய மெடிக்கல் சம்மரி என்னிடம் இருக்கிறது.

ஒவ்வொரு டாக்டரும் என்ன என்ன ஆலோ சனை கொடுத்திருக்கிறார்கள்; என்னென்ன மருந்துகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்கிற முழு விவரங்களும் என்னிடத்தில் இருக்கிறது.

மூன்றாவதாக, அவர்கள் கொடுத்த மொத்தமும் இந்த கேஸ் ஷீட் தான். இதில் எல்லா விவரங்களும் இருக்கிறது. எல்லா டாக்டர்களும் கொடுத்திருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டினுடைய சம்மரி முழுவதும், நான் எந்தெந்த டாக்டர்களைப் பார்த்தேன்; ஈசிஜியில் இருந்து இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை செய்த சம்மரியும் இருக்கிறது.

இனிமேல், நான் என்ன உணவு சாப்பிட வேண்டும்? என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்கிற முழுத் தகவல்களும் இந்த சம்மரியில் இருக்கிறது. 2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட டாக்குமெண்ட் எல்லாம் இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மூன்றாம் தேதி வரச் சொல்லி, ஒரு சம்மன் எங்கள் வீட்டில் ஒட்டியிருப்பதாக எனக்குத் தகவல் சொன்னார்கள். நான் உடனே, அந்த சம்மனை நகலெடுத்து ஃபேக்ஸ்சில் அனுப்பச் சொன்னேன். அப்படி அனுப்பியதும், அந்த சம்மனை நான் படித்துப் பார்த்தேன்.

நீங்கள் மூன்றாம் தேதி வர வேண்டும் என்று அந்த சம்மனில் இருந்தது.

நான் உடனே அந்த சம்மனுக்கு மரியாதை கொடுத்து, அங்கேயே உடனே ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.

3 ஆம் தேதி வரச் சொன்னதற்கான பதிலை நான் எழுதியிருந்தேன். என்ன எழுதியிருந்தேன் என்றால், நான் மருத்துவப் பரிசோதனையை முடித்துக் கொண்டுவருவதற்கு 10 நாள்கள் ஆகும் என்று கடிதம் கொடுத்தேன். அப்படி அந்தக் கடிதம் கொடுத்தும், உடனே ஒன்பதாம் தேதி வாருங்கள் என்று சொல்லி ஒரு சம்மன் கொடுக்கிறார்கள். மறுபடியும் அந்த சம்மனுக்குத்தான் நான் கடிதம் எழுதினேன்.

சம்மனுக்கு அளித்த கடிதம்!

அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன், கேளுங்கள்:

வணக்கம்!

‘‘என் மீது தொடுக்கப்பட்ட எஃப்.அய்.ஆர். வழக்கு சம்பந்தமாக, 9.7.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள். 3.7.2026 அன்று எனது வழக்குரைஞர் மூலமாக, நான் சிங்கப்பூரில் என் உடல் சம்பந்தமாக மருத்துவச் சோதனையில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு 10 தினங்கள் அவகாசம் தாருங்கள் என, கடிதம் கொடுத்திருந்தேன். தாங்கள், வழக்குரைஞரிடம் வாய்மொழியாக 15 ஆம் தேதிக்கு மேல் நோட்டீஸ் அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, 5 தினங்களிலே வரச் சொல்லுகிறீர்கள். 9.7.2026 அன்று மீண்டும் என் இல்லத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், 12.7.2026 ஆம் தேதிக்குள் மருத்துவப் பரிசோதனை முடிந்துவிடும். எனவே, தாங்கள் 12.7.2026 ஆம் தேதிக்கு மேல் எந்த தேதியில் அழைத்தாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.

அந்தக் கடிதத்தை வழக்குரைஞர் மூலம் அளித்திருந்தேன். இதில், எங்கே ஓடுறாங்க, எங்கே ஒளியுறாங்க, எங்கே பதுங்குகிறாங்க?

மருத்துவப் பரிசோதனைக்கு வழக்கமாக, எப்பொழுதும் போகிற மாதிரிதான் போனேன். வழக்குரைஞர் மூலமாகக் கடிதங்களையும் கொடுக்கிறோம். முழு ஒத்துழைப்புக் கொடுக்கி றோம் என்றும் சொல்லியிருக்கிறோம்.

இவ்வளவுக்குப் பின்னாலும், ‘ஓடுறாங்க, ஒளியுறாங்க, பதுங்குறாங்க’ என்பது அர்த்த மில்லாத கருத்துடைய வார்த்தைகள்தான். அதனால், என்னைப் பொறுத்த அளவுக்கு, நான் 2014–ஆம் ஆண்டிலிருந்து தொடர் மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறேன். அதற்கு முன் 2023–ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சென்றேன். அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பரிசோதனைக்காக 2026–ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சென்றேனேயொழிய, சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு எதற்காக அஞ்சியோ நான் அங்கே போகவில்லை.

இவ்வளவுதான், இன்றைக்கு நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயம்.

முழுமையான விளக்கம்!

ஏனென்றால், ஒரு வார காலம், அவரவர்களுக்கு என்னென்ன கற்பனை தோன்றுமோ, அப்படி கற்பனையில் பல்வேறு வகையில், நமக்குப் பிடித்த நண்பர்கள் எல்லாம், சமூக வலைத்தளப் பதிவு என்ற பெயரில், அவர்களுடைய கற்பனையை எல்லாம் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அத்தனை நண்பர்களுக்கும் நான், இன்று உங்களை எல்லாம் சந்திப்பதன் மூலமாக ஒரு முழுமையான விளக்கத்தைத் தந்திருக்கிறேன். இது போதுமானது என்று நான் கருதுகின்றேன்.

செய்தியாளர்:தொடர்ந்து நீங்கள் குறி வைக்கப்படுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? ஏற்கெனவே உங்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை செய்கிறார்கள். முதலமைச்சரும், இரண்டு முன்னாள் அமைச்சர்களைத்தான் தான் குறிப்பிட்டுப் பேசுகிறார். கரூரில், செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். இன்னொன்னு, உங்களைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். தொடர்ச்சி யாக உங்களை டார்கெட் செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

எ.வ.வேலு: பொதுவாக, என்னைப் பொறுத்தளவுக்கு டார்கெட் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொறடாவாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அவர்கள் என்னை நியமித்திருக்கிறார்கள். அதை, இந்த அரசாங்கம் குறிப்பாக பேரவைத் தலைவர் அவர்கள் அதை அங்கீகரித்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும், பேரவைத் தலைவரைப் பார்ப்பதோ அல்லது அரசு சம்பந்தப்பட்ட எதையாவது கேள்வி கேட்க வேண்டும் என்று சொன்னால், அந்தக் கொறாடாவுக்கு முழு சுதந்திரம் உண்டு. எனவே, அந்த மூன்று நாள்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில்கூட, அதிகமானவற்றை நான்தான் கேட்டிருப்பேன். அது என்னுடைய கடமை. என்னுடைய கடமையை நான் சட்டமன்றத்தில செய்துதானே ஆக வேண்டும்.

அதிலும் நான் ஒரு மூத்த உறுப்பினர். அதனால், நான் கேட்க வேண்டிய கேள்வியைதான் கேட்க வேண்டும். அது பிடிக்குதா, பிடிக்க வில்லையா? நான் சொல்கிற விளக்கம் போதுமா, போதாதா? இல்லை, நான் பேசவேக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்களா? என்பது போக போகத்தான் தெரியும்.

செய்தியாளர்:15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவீர்களா?

எ.வ.வேலு: கட்டாயம் ஆஜராவேன். நானே சொல்லி இருக்கிறேனே, நான் 12–ஆம் தேதிக்கு மேல், எந்தத் தேதி கொடுத்தாலும் நான் ஒத்துழைப்புத் தருவேன் என்று நான் சொன்னேன். அதனால் நான் முழு ஒத்துழைப்பைத் தருவேன். அதில் ஒன்னும் மாற்றம் இல்லை.

இரண்டாவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கின்ற காரணத்தினால், அது சம்பந்தமாக நான் பேச முடியாது. நீதி என் பக்கத்தில் இருக்குது.நான் கட்டாயம் நீதிக்குத் தலை வணங்குவேன். நீதிமன்றம் எனக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே, அந்த அடிப்படையில், நான் எந்தவித குற்றமும் நான் புரிந்தவனில்லை. குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது. அதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறேன். நீதி மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு செய்தியா ளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *