அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து முறியடித்தாகவேண்டும்– தி.மு.க. மீது களங்கம் ஏற்படுத்த முயலும் ஏற்பாடுகள் எடுபடாது!

5 Min Read
*ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முக்கியமானது –
எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஒன்று!
* ஒற்றை ஆட்சி, ஒற்றை மதம் (ஹிந்து மதம்), ஒற்றை மொழி என்று அரசமைப்புச் சட்டத்தையே தலைகீழாகப் புரட்டும் சட்ட திட்டங்களை நிறைவேற்றிட பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். அரசு திட்டமிட்டுள்ளது!

வரும் 20 ஆம் தேதி கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பி.ஜே.பி.யின் அஜெண்டாக்களை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கும் சட்டங்களை நிறைவேற்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இவற்றை முறியடிக்கவேண்டும் என்றும், தி.மு..மீது களங்கள் ஏற்படுத்தும் முயற்சிகள், சூழ்ச்சிகள் எடுபடாது என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வருகிற ஜூலை 20 ஆம் தேதியன்று தொடங்க விருக்கும் நாடாளுமன்றத் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. மற்ற கூட்டத் தொடர்களைவிட, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பெரும் பொறுப்பாளர்கள் அத்துணைப் பேரும் பதவியேற்பின்போது, பிரமாணம் எடுத்துக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினையே புறந்தள்ளி, அதன் முக்கிய தனித்தன்மையான அடையாளத்தினையே மாற்றி, ஜனநாயகக் குடியரசு என்பதையும், மக்களிடம் இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை (Basic Structure of the Constitution) அடிக்கட்டுமானத்தையே அடியோடு மாற்றி, (கரையான் அரித்த நூலின் வெறும் அட்டை போல் ஆக்கிட பெரும் முயற்சி நடக்கிறது.) பார்லிமெண்டரி முறைக்குப் பதிலாக, அதிபர் முறைக்கு ஈடாக, பிறகு ஒரு ‘‘சர்வாதிகாரத்திற்கு’’ நாடாளுமன்ற முறை மூலமே ஏற்பாடு செய்யும் ஒரு சூழ்ச்சித் திட்டமாக்குவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் கால்கோள் விழா நடத்திட முனைகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு.

 ‘வித்தைகள்’, ‘வியூகங்கள்’ மூலம் தந்திரம், சூழ்ச்சிமூலம் ஆட்சியைப் பிடித்த ஓர் இயக்கம்!

பாபர் மசூதியை இடித்து அயோத்தி கோயில் திட்டத்தை நிறைவேற்றியதுபோல, அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தங்கள் மூலம், அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்து, பன்வகைக் கலாச்சாரம், மொழி, நாகரிகம், பல சமூகங்கள் – மக்கள் வாழும் நாட்டினை, மூன்று முறை இந்திய ஜனநாயக அரசால் தடை செய்யப்பட்டு, பிறகு பேச்சுவார்த்தை  – உறுதிமொழி மூலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட – அவ்வப்பொழுது உருமாற்றம் (Camouflague) நடத்தி ‘வித்தைகள்’, ‘வியூகங்கள்’ மூலம் தந்திரம், சூழ்ச்சிமூலம் ஆட்சியைப் பிடித்த ஓர் இயக்கமாம் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையான ஒற்றை மதம் – தன் மதம் – ஹிந்து மதம், ஒற்றை மொழி தம் மொழி – சமஸ்கிருதம், ஹிந்தி, ஒற்றைக் கலாச்சாரம் தமது கலாச்சாரம் – ஆரியக் கலாச்சாரம் முதலியவற்றை வைத்து, ஆளத் திட்டமிட்டுக் காய் நகர்த்திடும் வகையில், சட்டத் திட்டங்களையே நிறைவேற்றிட முயற்சிக்கிறது.

தனது இலக்கை அடைய வியூகம் வகுத்து வருகிறது பா.ஜ.க.!

அரசியலமைப்புச் சட்டத்தில், முக்கிய திருத்தங்க ளுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3 – Two thirds majority) உறுப்பினர்களை நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெற முடியாவிட்டாலும், கட்சிகளை உடைத்தும், இணைத்தும், வேறு சில எதிர்க்கட்சிகளைத் திரிசூலங்களான வருமான வரித்துறை, சி.பி.அய்., அமுலாக்கத் துறை மூலம் அச்சுறுத்தியும், மற்றும் ‘‘பஞ்சு மிட்டாய்களைக்’’ காட்டியும், தனது இலக்கை அடைய நாளும் வியூகம் வகுத்து வருகிறது!

அதற்கு, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்தான் அதிமுக்கியம். ஆர்.எஸ்.எஸ். தத்துவகர்த்தா கோல்வால்கர் கூறியபடி, மாநிலங்களே இல்லாத (கூட்டாட்சிக்குப் பதில்) ஒற்றை ஆட்சி – Unitary ஆட்சியை நிலை நிறுத்தி, மாநில அதிகாரப் பறிப்பை, கல்வி, உணவு, ஆளுமை போன்ற பல துறைகளிலும் ஏற்படுத்தி, ‘ஹிந்துராஷ்டிரம்’ அமைக்க, ஏற்பாடுகள் சட்டத்தைக் கருவியாக்கி, சிறுபான்மை மக்களான இஸ்லாமிய, கிறித்துவ சமூகத்தினரின் குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை, கல்வி, மருத்துவக் கொடை உரிமை உள்பட அனைத்தையும் பறிக்கும் சட்டங்கள் – திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டும், நிறைவேற்றப்படவுமான ‘வியூகம்’ வேக வேகமாகத் திட்டமிடப்பட்டுள்ளன!

முன்பு மூன்றில் இரண்டு பங்கு கிட்டாத கார ணத்தால், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளம், அசாம் போன்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்போதே அவசர அவசரமாக நாடாளுமன்றத்தினைக் கூட்டி, 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவோடு திட்டமிட்டே – தொகுதி மறுவரையறை மசோதாவையும் பொருத்தமில்லா இணைப்பாக்கி, ஆழம் பார்த்து, அம் முயற்சியில் தோற்றனர்.

பா.ஜ.க. திட்டம் தோற்கடிக்கப்பட்டது!

அதனால், தி.மு.க.வுக்குத் தனி மரியாதை இந்தியா முழுவதும் ஏற்பட்டது! பா.ஜ.க. திட்டம் தோற்க டிக்கப்பட்டது. அது தெரிந்தே தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று அதனைத் தேர்தலின்போது நடத்தியது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி.

தற்போது கல்வித் திட்டத் திணிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், ஏழை உணவு பாதுகாப்புச் சட்ட மசோதா (திருத்தம்) போன்ற பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அத்துடன், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் ஒரு மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் தம் பதவியை இழந்தவுடனே சிறையில் அடைக்கப்படுவதற்கான (ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் வேறு வடிவங்களில் இது நடந்து வரும் நிலையில்) புதிய வியூகமும் வகுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு முழுமை யான சட்ட சம்மதம் பெற்றுத் தரும் புதிய வியூகம் முதலியன வரவிருக்கின்றன.

தி.மு.க.விற்குப் களங்கம் ஏற்படுத்த
மறைமுகமான ஏற்பாடுகள்!

மற்ற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிளவுபடுத்தியது – காரணம் வெளிப்படை. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பொருளாகவோ அல்லது குதிரை பேரம் பேசுபவர்களாகவோ ‘அவதாரம்’ எடுக்க வைக்க முடியாது என்று தெரிந்தும், அவர்களது பெயரைக் கெடுக்கத் திட்டமிட்டு, தி.மு.க.விற்குக் களங்கம் ஏற்படுத்த மறைமுகமான ஏற்பாடுகள் நடந்துவிட்டதுபோல, ஒரு திட்டமிட்ட முறையில் ஒரு வதந்திப் பரப்புரை (Whispering Campaign) இணையதளம் மற்றும் ஆரிய ஏடுகள் வழி நடத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் தி.மு.க தலைமை நிச்சயம் முழு உறுதியுடன், தனது லட்சியப் பாதையில் மாறாப் பயணத்தில் நிலைத்து நின்று வென்று காட்டும் என்பதை நாடு அறிய வேண்டும்.

சில ஆரிய பார்ப்பன ஏடுகளும், ஊடகங்களும், தி.மு.க.விற்கு ஒரு ‘பழி’ ஏற்படுத்த இத்தகைய பிரச்சா ரத்தினைச் செய்கின்றனர். ‘‘நாடாளுமன்றத்தில், அதன் நிலைப்பாடு முந்தையது போல இருக்காது’’ என்று கூறுவதை,

‘‘பொய்யாய், பழங்கதையாய், கனவாகிப் போகும்படி’’ காட்டும் என்பதை உரிமையுடன் நம்புகிறோம்.

தனித்தனியாக நின்றாலும், ஒரே முடிவில் வென்று காட்டவேண்டிய தருணம் இது!

அனைத்து எதிர்க் கட்சிகளும், ‘‘யார் வரக்கூடாது’’ என்பதையே ஒரே திட்டமாக்கி, தனித்தனியாக நின்றாலும், ஒரே முடிவில் வென்று காட்டவேண்டிய தருணம் இது! அலட்சியம் காட்டினால், இந்தியா இருக்காது; மாறாக, ‘ஹிந்துயா’தான் இருக்கும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை         

13.7.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *