ஜெய்ப்பூர், ஜூலை 12 ராஜஸ்தான் மாநில காவல்துறை “தலித்” என்ற வார்த்தையைப் பயன் படுத்தத் தடை விதித்துள்ளது. அதன்படி, அனைத்து அதிகாரிகளுக்கும், அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் வாய்மொழித் தொடர்புகளில் “தலித்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட “பட்டியல் ஜாதி” என்ற வார்த்தையைப் பயன்படுத்து மாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, ஜூலை 2 அன்று ராஜஸ்தான் காவல்துறையின் ‘பல்வகைப்பிரிவு’ மூலம் பிறப்பிக்கப்பட்டது. இப்பிரிவு, வகைப்படுத்தப்படாத தனித்துவமான குறைகள் மற்றும் பொதுமக்களின் மனுக்களைக் கையாள்வதுடன், ‘பட்டியல் ஜாதி பிரிவு’டனும் இணைந்து செயல்படுகிறது.
இந்த உத்தரவின்படி, அதிகாரப்பூர்வ அரசுத் தொடர்புகளில் “தலித்” என்ற வார்த்தையைப் பேசவோ அல்லது எழுதவோ கூடாது. எனவே, இனிவரும் காலங்களில் முதல் தகவல் அறிக்கைகள், புகார்கள், குற்றப்பத்திரிக்கைகள், கைது குறிப்புகள், காவலில் வைப்பதற்கான ஆவணங்கள், வழக்கு நாட்குறிப்புகள், வழக்கு முடிப்பு அறிக்கைகள், படிவங்கள், விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் காவல்துறை இனி “தலித்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் அமர்வு 2018-இல் பிறப்பித்த உத்தரவு மற்றும் ராஜஸ்தான் அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை மார்ச் 16, 2019 அன்று பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றின்படி ‘தலித்’ என்ற வார்த்தை இனி பயன்படுத்தப்படாது என்று மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்ெகனவே, இத்தகைய உத்தரவுகள் இருந்தபோதிலும் ‘தலித்’ என்ற வார்த்தை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்தன. எனவே, அதிகாரிகள் “தலித்” என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பட்டியல் ஜாதி’ அல்லது ‘அனுசூசித் ஜாதி’ என்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் மாணவர்களின்
ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் திட்டம்..!
காஞ்சிபுரம், ஜூலை 12 காஞ்சிபுரம் பெருநகர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் ‘ஆனந்தத்துடன் ஆங்கிலம் கற்றல்’ திட்டத்தை வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா துவக்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மதி அறக்கட்டளை இணைந்து வழங்கும் இத்திட்டத்தின் கீழ், ‘டேப்’ (TAB) மற்றும் ஹெட்போன் மூலம் வாரமிருமுறை மாணவர்களுக்கு எளிய முறையில் நவீன ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
