அழுத்தங்களை விலக்கி, மாணவர்களைக் காப்போம்

4 Min Read

இயற்கைப் புரிதலுக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும், வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கும், உலகின் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிகளுக்குமாகப் பயன்பட வேண்டிய கல்வியைக் கடினமானதாக்கி, கற்கும் மாணவர்களுக்கு கல்வியின் மீது வெறுப்பை உண்டாக்கும் வேலைகளைப் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செய்துவருகின்றன. அத்தகைய கல்வி நிறுவனங்களே தரமானவை என்றும், ‘புத்தகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் என்பதைக் கடந்து வேறு எதையும் மாணவர்களைச் சிந்திக்க விடாதவையே சிறந்த கல்வி நிறுவனங்கள்’ என்றும் பொதுப் புத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கு வலுச் சேர்க்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கை, நீட், கியூட், கேட் என்று ஏராளமான நுழைவு – தகுதித் தேர்வுகளும் திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

விரும்பிப் படிக்க வேண்டியவற்றை வருந்திப் படிப்பதும், அப்படி முடியாவிட்டால் தங்களையே வருத்திக் கொள்வதுமாக மாணவர்களின் மனநிலை மாறிப் போயிருக்கிறது. இவற்றைக் குறித்துக் கவலை கொள்ளாத ஒன்றிய அரசோ, மேலும் மேலும் புதிய புதிய நெருக்கடிகளை மாணவர்களுக்குத் தந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், கடந்த 2025 மார்ச்சில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில், உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைச் சம்பவங்களை ஆராய்ந்து, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பணி வரம்பு உயர் கல்வியோடு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், மன அழுத்தத்திற்கான பல காரணங்கள் பள்ளிக்கல்வியின் போதும், கடும் போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுச் செயல்முறையின்போதும் உருவாகத் தொடங்குகின்றன என்ற முடிவுக்கு இக்குழு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 ஜூன் 8 அன்று தனது இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்த இக் குழு, இந்தியாவில் மாணவர் தற்கொலைகளை வெறும் மனநலப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என்று வாதிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மாணவர்களின் மன உளைச்சலுக்கு முக்கியக் காரணங்களாகப் போட்டி நுழைவுத் தேர்வுகளும், பயிற்சி வகுப்புகளால் ஏற்படும் அழுத்தமும், அடிக்கடி மாற்றப்படும் பாடத்திட்டங்களும், கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை இக் குழு சுட்டிக்காட்டும் என்று குழுவின் ஆலோசனைகள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகள் இருமடங்காக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்களின்படி தெரியவருகிறது. 2019-ஆம் ஆண்டில் 10,335 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த எண்ணிக்கை 2020-இல் 12,526-ஆக அதிகரித்தது. 2021-இல் 13,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தது. 2022-இல் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தபோதிலும், 2023-இல் மாணவர் தற்கொலைகள் 13,892 என்ற உச்சபட்ச எண்ணிக்கையை எட்டின. இது அதிர்ச்சிதரத் தக்கது மட்டுமல்ல… பொறுக்கமுடியாத துயரமும் ஆகும்.

இதனை ‘அமித் குமார் மற்றும் பிறர் எதிர் ‘இந்திய அரசு’ (Amit Kumar & others Vs Union of India – 2026) வழக்கின்போது உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் நிகழ்ந்த மொத்த தற்கொலை மரணங்களில் 7.6 சதவீதமாகவும் இருந்தது. எனவே, இதற்கான காரணங்களை ஆராயவும், தற்போதைய சட்டங்கள் மற்றும் நிறுவன வழிமுறைகளை மறுஆய்வு செய்யவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பைப் பரிந்துரைக்கவும்தான் நீதிமன்றம் இந்த தேசியப் பணிக் குழுவை அமைத்தது.

“மாணவர்களின் மனநலம் என்பது ஒட்டுமொத்தச் சூழலின் ஒரு பகுதி மட்டுமே. தற்கொலை எண்ணம் கொண்ட ஒவ்வொரு மாணவரும் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்தமல்ல. கல்விசார் அழுத்தம், ஜாதி-மத-மொழி-பாலினம் சார்ந்த பாகுபாடுகள், நிதி நெருக்கடி, சமூகத் தனிமை, மொழித் தடைகள், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த சவால்கள் எனப் பலவிதமான அழுத்தக் காரணிகள் காலப்போக்கில் சேர்ந்து அழுத்தம் தருகின்றன,” என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பணிக்குழு  மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களை அடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பள்ளிக்கல்வியிலிருந்தும், நீட் போன்ற போட்டித் தேர்வுகளாலும், அதற்கான பயிற்சி மய்யங்களாலுமே தொடங்கிவிடுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளது. “இப்பகுதிகள் பணிக்குழுவின் அதிகார வரம்பிற்குள் நேரடியாக இல்லாவிட்டாலும், அவற்றை புறக்கணிக்க முடியாது; ஏனெனில் அவை இறுதியில் உயர்கல்விச் சூழலையும் பாதிக்கின்றன” என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்ததை எகனாமிக் டைம்ஸ் ஏடு சுட்டிக்காட்டுகிறது. நிறைய மாணவர்கள் படிக்கும் வகையிலான கல்வி வளாகங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை, விடுதி வசதிச் சிக்கல்கள், கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் போன்றவையும் மாணவர்களின் மன அழுத்தத்திற்கான குறிப்பிடத்தக்க காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுமார் 60,000 ஆசிரியர்களும், கிட்டத்தட்ட 16,000 கல்லூரிகள் – பல்கலைக் கழகங்கள், 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பெற்றோர்களும் பொதுமக்களும் இக் குழுவின் ஆய்வுகளுக்கு பதிலளித்துள்ளனர்.  இந்தக் குழு சுமார் 40 நிறுவனங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருப்பதாகவும், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர், வடகிழக்கு மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளது. இதன் இறுதி அறிக்கை இவ்வாண்டு அக்டோபரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகப்படியான பாடத்திட்டச் சுமைகளைக் குறைப்பதற்கும், வழக்கமான கற்றலில் இருந்து விமர்சனப் பார்வையுடன் எதையும் அணுகும் வகையிலும், பகுத்தறிவில் கவனம் செலுத்துவதற்கும் இக் குழு பரிந்துரைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீட், அரிய வகை உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு உள்ளிட்ட கொடுமைகளை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் இம் மாத இறுதியில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது. ‘நீட்’ ஏற்படுத்தும் உயிர்ப்பலிகளையும், உணர்வுக் கொலைகளையும் களைய எடுக்கப்பட்டுள்ள இத்தகைய முயற்சிகள் அவசியம் – மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *