புதுடில்லி, ஜூலை 9- நீட் வினாத்தாளைத் தொடர்ந்து யுஜிசி-நெட் தகுதித் தேர்வின் சமூகவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்துள்ள தாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத் தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியி ருப்பதாவது: யுஜிசி-நெட் தேர்வு தொடங் குவதற்குச் சற்று முன்பாக, 100 பக்கங்கள் கொண்ட ‘பிடிஎஃப்’ கோப்பு ஒன்று நாடு முழுவதும் கசிந்துள்ளது. தேசிய தேர்வு முகமையிடம் மட்டுமே இருக்கக்கூடிய வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான ரகசிய விவரங்கள் அந்தப் பக்கங்களில் இடம் பெற்றிருந்தன.
நடைபெற்ற சமூகவியல் தேர்வுத் தாளின் வினாக்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததில், இந்த பிடிஎஃப் கோப்பில் இருந்த சுமார் 90 வினாக்கள் அப்படியே அசல் தேர்வுத் தாளோடு ஒத்துப்போயுள்ளன. பிகார், உத்தரப் பிரதேசம், அரியானா, டில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ரூ.2.25 லட்சத்துக்கு இந்த வினாத்தாள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப் பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவில் ஈடுபட்டுள்ள இதே கும்பல்தான் சிஎஸ்அய்ஆர்-நெட், எச்டிஇடி மற்றும் ஏடிஏ போன்ற பிற போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களையும் கசியவிட்டு, முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நீட் மற்றும் நெட் தேர்வுகளில் அடுத்தடுத்து இத்தகைய முறைகேடுகள் அரங்கேறிய பின்னரும், மோடி அரசு எதையும் கண்டுகொள்ளாமல் ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
