‘திறந்த மனதுடன் ஏற்கும் மனமே’ (Openness – புதிய விஷயங்களை ஏற்கும் மனப்பக்குவம் மற்றும் ஆர்வம்) என்ற ஒற்றை ஆளுமைப் பண்பு தான் நீண்ட ஆயுளுக்கான ரகசிய மூலப்பொருள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது சத்தான உணவு, அன்றாடம் உடற்பயிற்சி, அப்புறம் நல்ல நண்பர்கள்தான். ஆனால், இதையெல்லாம் தாண்டி உங்களுடைய ஆயுளை நீட்டிப்பதில் உங்களுக்கே தெரியாத ஒரு ‘ரகசிய மூலப்பொருள்’ ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது வேறு எதுவும் அல்ல… உங்களுடைய சொந்த ஆளுமைப் பண்பு (Personality) தான்.
அண்மையில் நடத்தப்பட்ட சுவாரசியமான ஆய்வு நீண்ட ஆயுளுக்கும் மனிதர்களின் குணத்திற்கும் உள்ள அறிந்திராத மறைமுகமான முடிச்சுகளை அவிழ்த்துள்ளது. இத்தாலியின் காக்லியாரி பல்கலைக்கழக உளவியலாளர் மரியா சியாரா ஃபாஸ்டேம் அவரது குழுவினர், உலகின் மிக விசித்திரமான ஒரு பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர். அதுதான் சார்டினியா (Sardinia) தீவில் உள்ள ‘புளூ ஜோன்’ (Blue Zone). உலகிலேயே 100 வயதைத் தாண்டி வாழும் மனிதர்கள் அதிகம் வாழும் ஒரு சில அரிய இடங்களில் இதுவும் ஒன்று.
ஆராய்ச்சியாளர்கள் 71 முதல் 101 வயதுக்குட்பட்ட 125 முதியவர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்களில் 55 பேர் புளூ ஜோன் பகுதியிலும், 70 பேர் அதற்கு வெளியேயும் வசிப்பவர்கள். இவர்களின் பின்னணி, வாழ்வாதாரம், அவர்களுக்கு கிடைக்கும் இலவச மருத்துவ வசதி வரை எல்லாமே ஒன்றுதான். அப்படியென்றால் புளூஜோன் மக்கள் மட்டும் எப்படி இவ்வளவு காலம்வாழ்கிறார்கள்? அறிவியலாளர்கள் அவர்களின் குணாதிசயங்கள் (Big Five Personality Traits) ஆராயத் தொடங்கினர்.
ஆய்வின் முடிவில் அதிரடி உண்மை வெளிவந்தது. புளூ ஜோன் பகுதியில் வாழும் முதியவர்களின் உடல் ஆரோக்கியம், மற்ற பகுதியில் வாழ்பவர்களை விடப் பெரிய அளவில் ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஆனால், அவர்களை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் தனித்து காட்டியது ஒரே ஒரு குணம் தான். அதுதான் ‘திறந்த மனம்’ (Openness). ‘திறந்த மனம்’ என்றால் என்ன? புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், எதையும் கற்றுக்கொள்ளத் துடிக்கும் ஆர்வம், மற்றும் புதிய அனுபவங்களை நோக்கி ஓடும் வேகம். புளூ ஜோன் முதியவர்கள் எப்போதுமே தங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் புத்துணர்ச்சியான பொழுதுபோக்குகளில் அதிக நேரத்தைச் செலவிட்டனர். வாழ்க்கையில் வரும் சவால்களை மிக எளிதாகச் சமாளிக்கும் சிறந்த மனவலிமை (Coping skills) அவர்களிடம் இருந்தது.
ஆய்வின் மூலம் ஒட்டுமொத்தமாக மனிதர்களின் குணங்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகின்றன என்பது தெரியவந்துள்ளது. திறந்த மனம் உள்ளவர்கள் மிகச் சிறந்த மனநல ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் தங்களின் வாழ்க்கையில் அதிக திருப்தியைக் காண்கிறார்கள். மனக்கலக்கம்/மன அழுத்தம் (Neuroticism) கொண்டவர்கள் எப்போதுமே தங்களின் வாழ்க்கை தரம் குறைவாக இருப்பதாக உணர்கிறார்கள்.
ஒரு மனிதனின் குணம் எப்படி அவனது ஆயுளை நேரடியாக நீட்டிக்க முடியும்? அறிவியலாளர்கள் இதற்குச் சூப்பர் விளக்கம் கொடுத்துள்ளனர். ‘திறந்த மனம்’ என்ற குணம் நேரடியாக ஆயுளை வளர்க்காது; மாறாக அது உங்களுடைய தினசரி பழக்கவழக்கங்களை மாற்றியமைக்கிறது. எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாகவும், சமூகத்தோடு இணைந்தும் வைத்திருக்க உதவுகிறது. இந்த சுறுசுறுப்பு தான் காலப்போக்கில் உங்களை ஆரோக்கியமான முதுமையை நோக்கி அழைத்துச் செல்கிறது. அடுத்த முறை யாராவது நீண்ட ஆயுளின் ரகசியம் பற்றிக் கேட்டால், டயட் மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து, எப்போதும் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம் என்று சொல்ல மறக்காதீர்கள்.
