2008ஆம் ஆண்டு குஜராத்தில் பிஜேபி ஆட்சியின்போது நடைபெற்ற அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

2 Min Read

அகமதாபாத், ஜூலை 08– கடந்த 2008ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிஜேபி ஆட்சியின்போது நடைபெற்ற அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதா பாத்தில் ஹட்கேஷ்வர் உள்ளிட்ட 21 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். 246-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹர்கத் உல் ஹிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த வழக்கை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 548 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 6,000 ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 1,163 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 29 பேர் விடுவிக் கப்பட்டனர். குற்றவாளிகளாக தீர்ப்பளிக் கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண் டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் கோக்ஜே, சமீர் ஜேடேவ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து நேற்று (7.7.2026) தீர்ப்பு வழங்கியது. அப்போது அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். 38 மரண தண்டனை குற்றவாளிகள், 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறும்போது, “அகமதாபாத் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர் களுக்கு தலா ரூ.5 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். இந்த இழப்பீடு தொகைகளை வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் குஜராத் அரசு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டு உள்ளனர்.

இதுகுறித்து அரசு தரப்பு வழக் குரைஞர் அமித் படேல் கூறும்போது, “அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அனைத்து குற்றவாளிகளும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் நாள்தோறும் விசாரிக்கப்பட்டது. இதன்காரணமாகவே விரைவாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது” என்றார்.

குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த அப்போதைய காவல் துறை மூத்த அதிகாரி பி.ஜி.வகேலா கூறும்போது, “கடந்த 2008ம் ஆண்டு குண்டு வெடிப்பின் போது ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்தது. இந்த வழக்கை நாங்கள் விசாரித்தபோது 3 மாதங்கள் வீட்டுக்கே செல்லவில்லை. முதலில் 90 பேரை பிடித்தோம். அவர்களில் 82 பேரை கைது செய்தோம். பின்னர் 78 பேர் மீது வழக்குகளை பதிவு செய்தோம்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் 29 பேரை மட்டும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. மற்றவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட் டது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினரின் தீவிர விசாரணையால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *