தெஹ்ரான், ஜூலை 6- அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலியானார்கள். 86 வயதில் கொல்லப்பட்ட அயதுல்லா காமேனி பல ஆண்டுகளாக ஈரானை ஆட்சி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் இறுதி நிகழ்வு போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இதுவரை நடைபெறாமல் இருந்துவந்தது. அண்மையில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் சற்று அமைதி நிலவி வருவதால் அயதுல்லாவின் இறுதி நிகழ்வு திட்டமிடப்பட்டது.
அயதுல்லாவுக்கு இறுதி மரியாதை செலுத்த நாடு முழுவதும் இருந்து 2 கோடி பேர் கலந்து கொண்டனர். இது இந்த நூற்றாண்டில் ஒரு தலைவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட உலகின் அதிக மக்கள் கலந்து கொண்டது என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதே போன்று உலகின் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட வர்கள் பெட்டியிலிருந்த அவரது உடலை பார்த்து கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினர். அங்கு கூடியிருந்த மக்களில் பலர் “எங்கள் குரல் ஒன்றே பழிவாங்குவோம்… பழிவாங்குவோம்…” என்று முழக்கமிட்டனர். சிலர் “அமெரிக்கா ஒழிக!” என்றும், “இஸ்ரேல் ஒழிக!” என்றும் முழக்கமிட்டனர். சிலர் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தினர் மீது தன்னார்வலர்கள் குளிர்ச்சியான நீரை தெளித்தபடி இருந்தனர். பல இடங்களில் உணவுகள், பானங்கள் வழங்கப்பட்டன.
காமேனியின் உடல் ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கின் பல்வேறு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. துக்க நிகழ்வுக்காக அதிகாரிகள் சாலைகள் மற்றும் வான்வெளியை மூடி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அன்றாட நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. காமேனியின் பிறந்த இடமான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசாவில் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) உடல் அடக்கம் செய்யப்படுவதோடு அவரது இறுதி நிகழ்வுகள் நிறைவடைகிறது.
