வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 39ஆவது ஆண்டு விழா நியூசெர்சியில் ஜூலை 2, 3, 4 ஆம் நாட்களில் கொண்டாடப்பட்டது.
“தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்’’ என்ற குரலுடன் இராசேந்திர சோழனின் 1000 ஆண்டு, மறைமலை அடிகளாரின் 150ஆவது ஆண்டு கொண் டாடப்பட்டது.

அமெரிக்காவில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாத நகரங்களே கிடையாது. அங்கு பயிலும் மாணவர்களுக்குப் போட்டி நடத்தி, இறுதிப் போட்டிகள் விழா அரங்குகளில் நடைபெற்றன. இளஞ்சிங்கங்கள் மிகவும் அருமையாக ஆற்றல்களை வெளிப் படுத்தியது அனைவரையும் பெருமையுறச் செய்தது.
குறள் தேனீ, தமிழ்த்தேனீ, கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியல் தேனீ என்று இந்தப் போட்டிகளில் வென்றோருக்கு உயரமான கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. அவற்றுடன் இளைய தலை முறை உலா வந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இயக்குநர்கள் லெனின் பாரதி, தங்கர்பச்சான், கவிஞர்கள் சாம்ராஜ், தமிழ்நதி, வி.அய்.டி. வேந்தர் கோ. விசுவநாதன் போன்றோருடன் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் இணை அமர்வு ‘‘மனித நேயமும் சமூக நீதியும்’’ என்று நடைபெற்றது. பெரியார் பன்னட்டமைப்பு பற்றியும் அதன் நிகழ்ச்சிகள், பன்னாட்டு மாநாடுகள், வீரமணி சமூக நீதி விருதுகள், பெரியார் உலகம் பற்றிப் படங்களுடன் சோம. இளங்கோவன் உரைஆற்றினார்.
அனைவரும் திராவிட வரலாறு, வெற்றிகள் பற்றி நடத்தப்பட்ட ‘ககூத்’ என்னும் போட்டியில் கலந்து கொண்டனர். சங்கரபாண்டி முதல் பரிசைப் பெற்றார்.
பாலசந்திரன் அய்.ஏ.எஸ். அவர்கள் பரிசை வழங்கி அருமையான உரையாற்றினார். பேரவையின் முன்னாள் தலைவர்கள் 10க்கும் மேற்பட்டோரும், மற்றவர்களும் தங்கள் கருத்துகளைக் கூறினார்கள். இளைய தலைமுறையினரும், பிஞ்சுகளும் பேச்சாற்றலை வெளிப் படுத்தினர்.
மானமிகு தண்டபாணி அவர்கள் இப்பேரவை விழாவிற்கு வந்து கலந்து கொள்வதே மிக்க மன நிறை வாக உள்ளது என்று மகிழ்வுடன் பேசினார். பெரியார் பன்னாட்டமைப்பினர் ஜப்பானில் நடக்கும் மாநாட்டுக்கான அழைப்பை விடுத்தனர்.
