திருச்சி, ஜூலை 6- நிஜ உலக உறவுகளே இளமையின் பலம்: திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ மற்றும் மாணவர் மனசு அமைப்பு சார்பில் மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாட்டு வழிகாட்டுதல்!
திருச்சியில் அமைந்துள்ள பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாகம்மையார் அரங்கில், 02.07.2026 அன்று காலை 10.30 மணி அளவில், போக்சோ (POCSO) மற்றும் ‘மாணவர் மனசு’ அமைப்புக்கள் சார்பில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர், முனைவர் க.வனிதாவின் சீரிய வழிகாட்டுதலில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சிறீ வித்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகளிடையே உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஒரு அங்குசம் மிகப் பெரிய யானையை அடக்குவது போல, நம்மை அடக்க நினைக்கும் சிறுமையான விசயங்களுக்கு நாம் அடிபணிந்து விடக் கூடாது” என்று அறிவுறுத்தினார்.
மேலும், இன்றைய காலச் சூழலில் சமூக வலைத்தளப் பயன்பாட்டைத் தவிர்த்துவிட்டு, நம்மைச் சுற்றி உள்ள நிஜ மனிதர் களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத் தினார்.
பெண் குழந்தை பாதுகாப்பு, கல்வியின் சிறப்பு, ஒழுக்கம் சார்ந்த மேம்பாடு, ஆளுமைத்திறன் மற்றும் சுய ஒழுக்கம் போன்ற கருத்துகளைச் சிறு சிறு கதைகள் மற்றும் வாழ்வியல் நிகழ்வுகள் மூலம் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் எடுத்துரைத்தார். “செயலும் சிந்தனையும் தூய்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம்” என்பது இந்த நிகழ்வின் மையக்கருத்தாக அமைந்தது.
முன்னதாக, சிறப்பு விருந்தின ருக்குப் பள்ளி சார்பில், பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் ஏ.ஆர்.திலகவதி புத்தகம் மற்றும் பயனாடை வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வை போக்சோ மற்றும் மாணவர் மனசு அமைப்புகளின் ஒருங்கிணைப் பாளரும் , பள்ளியின் முதுகலை தமிழாசிரியருமான ஏ.ஆர்.திலகவதி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் மோ.கிருபா சங்கர் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங் கிணைத்து இருந்தனர்.
