முனைவர் இனியன் இளவழகன்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம்
செயற்குழு உறுப்பினர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
| ப |
ண்டைய தமிழர் வரலாற்று ஆய்வுகள் நீண்டகாலமாக இலக்கியங்கள், கல்வெட்டுகள் மற்றும் வாய்மொழி மரபுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வாதாரங்கள் வரலாற்று ஆய்விற்கு மதிப்புமிக்க தகவல்களை வழங்கினாலும், அவை வரலாற்றின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கின்றன. இதற்கு மாறாக, தொல்லியல் அகழாய்வுகள் கடந்தகால மனித வாழ்க்கையின் நேரடிப் பொருள்சார் சான்றுகளை வழங்குவதன் மூலம், பண்டைய தமிழர் சமூகத்தை அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றன. குடியிருப்புகள், ஈமச்சின்னங்கள், மட்பாண்டங்கள், கருவிகள், அணிகலன்கள், கல்வெட்டுகள், தாவரவியல் எச்சங்கள், விலங்கியல் எச்சங்கள் போன்றவற்றின் கண்டுபிடிப்புகள், பண்டைய தமிழர்களின் சமூக, பொருளாதார, தொழில் நுட்ப, அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை மீளுருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மை, அதன் வளர்ச்சிநிலைகள் குறித்த நமது புரிதலைப் பெருமளவில் மாற்றியமைத்துள்ளன. மேம்பட்ட குடியிருப்புகள், எழுத்தறிவு, கைத்தொழில் உற்பத்தி, வேளாண்மை, உலோகத் தொழில்நுட்பம் மற்றும் தொலைதூர வணிகத் தொடர்புகள் ஆகியவை முன்பு கருதப்பட்டதைவிட மிகவும் தொன்மையான காலத்திலேயே தமிழ்நாட்டில் நிலவியிருந்தன என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
வரலாற்றிற்கான அறிவியல்
அடித்தளமாகத் தொல்லியல்
அடித்தளமாகத் தொல்லியல்
இலக்கிய மரபுகளுக்கு மாறாக, தொல்லியல் சான்றுகள் என்பவை நேரடியாகக் கண்டறியப்படும் பொருள்சார் ஆதாரங்களாகும். இவ்வாதாரங்கள் அறிவியல் முறைகளின் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இன்றைய தொல்லியல் அகழாய்வுகளில் மண்ணடுக்கு ஆய்வு (Stratigraphy), துரித நிறை நிறமாலை கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு (Accelerator Mass Spectrometry – AMS), தொல்லியல்-தாவரவியல் (Archaeo-Botanical), தொல்லியல்-விலங்கியல் (Zoo-Archaeological), தொல்லியல்-உலோகவியல் (Archaeo-Metallurgy), புவியியல் தகவல் முறைமை (GIS), தொலைஉணர்தல் (Remote Sensing), மற்றும் பண்டைய டிஎன்ஏ (Ancient DNA) ஆய்வுகள் போன்ற நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறைகள் காலவரிசையைத் துல்லியமாக நிறுவுவதோடு, பண்டைய மக்களின் சுற்றுச்சூழல், பொருளா தாரம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறையை மீளுருவாக்குகின்றன.
பண்டைய தமிழர் நாகரிகத்தை மீளுருவாக்குதல்
அகழாய்வுகள் மூலம் குடியிருப்புகள், வேளாண்மை, இரும்புத் தொழில்நுட்பம், எழுத்தறிவு, நகரமயமாக்கல் ஆகியவற்றின் காலவரிசை நிறுவப்படுகிறது. குடியிருப்புத் தளங்கள் வீடமைப்பு, தெருக்கள், வடிகால் அமைப்புகள், தொழிற்பகுதிகள், நீர் மேலாண்மை மற்றும் கைவினைத் தொழில்கள் குறித்த தகவல்களை வழங்குகின்றன. அதேவேளை, ஈமச்சின்னங்கள் சமூக அமைப்பு, ஈமச்சடங்கு மரபுகள், உடல்நலம், மக்கள்தொகை அமைப்பையும், உயிரியல் உறவுகளையும் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
தொல்லியல்-தாவரவியல் ஆய்வுகள் கருகிய தானியங்கள், விதைகள் மற்றும் தாவர எச்சங்களின் மூலம் வேளாண்மையை மீளுருவாக்குகின்றன. தொல்லியல்-விலங்கியல் ஆய்வுகள் வளர்ப்பு விலங்குகள், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், உணவுமுறை மற்றும் மனித–விலங்கு உறவுகளை விளக்குகின்றன. இரும்பு உருக்காலைகள், மட்பாண்டச் சூளைகள், மணி உற்பத்திப் பட்டறைகள், உலோகத் தொழில், சங்கு, தொழில், நெசவுத் தொழிலுக்கான சான்றுகள் அக்காலத் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றன. வெளிநாட்டு மட்பாண்டங்கள், உரோம நாணயங்கள், கண்ணாடி மணிகள், பிற இறக்குமதிப் பொருட்கள், ஆகியவை இலங்கை, அரேபியா, தென்கிழக்காசியா, மத்தியதரைக் கடல் உலகத்துடன் தமிழ்நாடு கொண்டிருந்த விரிவான வணிகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டின் முக்கிய அகழாய்வுகளின் பங்களிப்பு
கீழடி அகழாய்வுகள் செங்கல் கட்டடங்கள், வளையக் கிணறுகள், வடிகால் அமைப்புகள், தொழிற் பட்டறைகள், நூல்நூற்பு தக்களிகள், இரும்புக் கருவிகள், கண்ணாடி மணிகள் மற்றும் ஏராளமான தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகளை வெளிக்கொணர்ந்துள்ளன. தொல்லியல் தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆய்வுகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தலை அடிப்படையாகக் கொண்ட செழிப்பான வேளாண்–கால்நடைப் பொருளாதாரத்தை எடுத்துக்காட்டுகின்றன.
கொடுமணல் ஆரம்ப வரலாற்றுக் காலத்தின் முக்கிய தொழில்துறையாகவும், வணிக மையமாகவும் விளங்கியது. இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி, மணி தயாரித்தல், ரோம வணிகப் பொருட்கள் ஆகியவை மேம்பட்ட உலோகத் தொழில்நுட்பத்தையும், பன்னாட்டு வணிகத் தொடர்புகளையும் உறுதிப்படுத்துகின்றன.
பொருந்தல் அகழாய்வில் கண்டறியப்பட்ட AMS காலக்கணிப்பிற்குட்பட்ட கருகிய நெல், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், இரும்புப் பொருட்கள், தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை வேளாண்மை, எழுத்தறிவின் காலவரிசையை நிறுவுவதில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. மயிலாடும்பாறை அகழாய்வு, தமிழகத்தில் இரும்புத் தொழில்நுட்பத்தின் தொன்மையை மேலும் பின்தள்ளி, புதிய காலக் கட்டத்தை நிறுவியுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள், வெண்கலப் பொருட்கள், இரும்பு ஆயுதங்கள், மட்பாண்டங்கள், அணிகலன்கள், விலங்கு எச்சங்கள் ஆகியன கண்டறியப்பட்டுள்ளன. இவை மேம்பட்ட ஈமச்சடங்கு மரபுகளையும் உலோகத் தொழில்நுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. கொந்தகை, கீழடியுடன் தொடர்புடைய ஈமத்தளமாக விளங்கி, அக்கால மக்களின் இறப்புச் சடங்குகளையும் சமூக அமைப்பையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
உறையூர் அகழாய்வுகள் செங்கல் கட்டடங்கள், வளையக் கிணறுகள், தொழில்துறைச் சான்றுகள், உரோம ஆம்போரா மட்பாண்டத் துண்டுகள், ரவுலட்டட் வேர், நாணயங்கள், நெசவுத் தொழிலுக்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.
பொற்பனைக்கோட்டை கோட்டையமைப்புடைய குடியிருப்பாக இருந்ததற்கான சான்றுகளை வழங்குகிறது. செட்டிமேடு மற்றும் மணலூர் அகழாய்வுகள் வைகை பள்ளத்தாக்கில் ஆரம்ப வரலாற்றுக் காலக் குடியிருப்புகள் பரவலாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. சிவகளை அகழாய்வில் AMS காலக் கணிப்பிற்குட்பட்ட கருகிய நெல், குடியிருப்பு–ஈமச்சின்னச் சான்றுகள் கண்டறியப்பட்டு, தாமிரபரணி பள்ளத்தாக்கின் வேளாண்மை, நிலையான குடியிருப்புகளின் தொன்மையை வெளிப்படுத்துகின்றன.
தொல்லியல்
அகழாய்வுகளின் அவசியம்
அகழாய்வுகளின் அவசியம்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவ்வகழாய்வுகள் திட்டமிடப்பட்ட குடியிருப்புகள், மேம்பட்ட வேளாண்மை, உயர்ந்த உலோகத் தொழில்நுட்பம், சிறப்புற்ற கைவினைத் தொழில்கள், எழுத்தறிவு, விரிவான வணிக வலையமைப்புகள், சிறப்பான ஈமச்சடங்கு மரபுகளைக் கொண்ட ஒரு உயர்ந்த தமிழ்ச் சமூகத்தை வெளிப்படுத்துகின்றன. மேலும், தொல்லியல் சுற்றுச்சூழல் வரலாற்றை மீளுருவாக்கவும், தவறான வரலாற்றுக் கருத்துகளைத் திருத்தவும், நகரமயமாக்கலும் இயற்கைச் சிதைவுகளாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் தளங்களில் மிகச் சிறிய பகுதி மட்டுமே அறிவியல் முறையில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளதால், எதிர்கால ஆய்வுகளில் புவித் தொல்லியல், நிலையான அய்சோடோப்பு ஆய்வு, பண்டைய டிஎன்ஏ, LiDAR, GIS, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது தமிழர் நாகரிகம் குறித்த நமது அறிவை மேலும் விரிவுபடுத்தும்.
முடிவுரை
பண்டைய தமிழர் வரலாற்றை மீளுருவாக்கு வதற்கான மிகவும் நம்பகமான அறிவியல் அடித்தளம் தொல்லியல் அகழாய்வுகளே ஆகும். அவை இலக்கியங்கள், கல்வெட்டுகள், பிற வரலாற்று ஆதாரங்களை முழுமைப்படுத்தும் நேரடி பொருள்சார் சான்றுகளை வழங்குகின்றன. குடியிருப்புகள், பொருளாதாரம், தொழில்நுட்பம், வணிகம், எழுத்தறிவு, சமூக அமைப்பு, சமய மரபுகள், சுற்றுச் சூழலுக்கேற்ப மனிதர்கள் மேற்கொண்ட தழுவல் ஆகியவற்றை விளக்குவதில் அகழாய்வுகள் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றன. கீழடி, கொடுமணல், பொருந்தல், ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, உறையூர், கொந்தகை, சிவகளை, மணலூர், செட்டிமேடு, பொற்பனைக்கோட்டை ஆகிய அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகள் தமிழர் நாகரிகம் குறித்த நமது புரிதலின் அடிப்படையையே மாற்றியமைத்துள்ளன. எனவே, அறிவியல் அடிப்படையிலான தொடர்ச்சியான அகழாய்வுகளும் பன்முகத் துறை சார்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதன் மூலமே மட்டுமே பண்டைய தமிழர் வரலாற்றை முழுமையான, ஆதாரப்பூர்வமான, துல்லியமான முறையில் மீளுருவாக்க முடியும்; அதேவேளை, தமிழர்களின் செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் வருங்காலத் தலைமுறைகளுக்காகப் பாதுகாக்க இயலும்.
இறுதியாக.. தொல்லியல் அகழாய்வுகள் என்பவை வேலையற்ற வேலையல்ல, வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை, அறிவியல் பூர்வமாக அணுகும் முற்போக்குச் செயல்பாட்டு வடிவம் ஆகும்..
