சென்னை, ஜூலை 2–- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு 30.6.2026 அன்று முதல் தொடங்கியுள்ளது. இத்தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
துணை ஆட்சியர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 23ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
துணை ஆட்சியர் 12; மாவட்டப் பதிவாளர் (பதிவுத்துறை) 8; கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் 3; வணிக வரி உதவி ஆணையர் 2; தொழிலாளர் உதவி ஆணையர் 1; மொத்த பணியிடங்கள் – 26.
முக்கியத் தேதிகள் மற்றும் கால அவகாசம்
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 29 (பிற்பகல் 11.59 மணி வரை)
விண்ணப்பத் திருத்தம் செய்ய: ஆகஸ்ட் 2 (முற்பகல் 12.01 மணி) முதல் ஆகஸ்ட் 4 (பிற்பகல் 11.59 மணி) வரை.
இத்தேர்விற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதில் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்விற்கு (Main Exam) அழைக்கப்படுவர்.
இதற்கென இணையதளத்தில் (www.tnpscexams.in) பட்டதாரிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இம்முறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக (26 இடங்கள்) இருப்பதால் தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
இதனால், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
