மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்த திட்டம் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் மீண்டும் நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு!

2 Min Read

நெல்லை, ஜூலை 1- கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போது, ஒவ்வொரு தாலுகா வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் சென்று மாதம் ஒரு நாள் 3ஆவது புதன்கிழமை நாள் முழுவதும் தங்கி அந்த தாலுகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்யும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்கள்’ நடத்த கடந்த 2024ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இதற்கான அரசாணை 2024 ஜன.29ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதன்படி, அந்த தாலுகாவில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று மனுக்கள் பெறுதல், கிராம மக்களின் குறைகளை தீர்த்தல், பள்ளிகள், விடுதிகளை ஆய்வு செய்தல், அந்தத் தாலுகாவில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம், குடிநீர் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, குழந்தை பிறப்பு விகிதம், சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அங்கன்வாடிகள், ரேசன் கடைகளின் செயல்பாடு, வேளாண்மை, தோட்டக் கலைத்துறை பணிகள், அனைத்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தல், இரவில் தங்குதல், மறுநாள் காலை மீண்டும் ஆய்வு செய்து பணியை முடித்தல் உள்ளிட்ட பணிகள் வரையறுக்கப்பட்டன.

இதன் மூலம் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து அந்த தாலுகா முழுவதும் மாவட்ட ஆட்சியரால் ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்று தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து விளக்குவர். இதன் மூலம் அங்கு நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெறும். பொதுமக்களுக்கு விரைவில் திட்டங்கள் சென்றடையும் என்பதற்காக அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.

மீண்டும் செயல்படுத்த உத்தரவு

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் கடந்த 4 மாதங்களாக செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்து தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதம் தோறும் மூன்றாவது புதன் கிழமை சென்னை மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி முகாம்கள் நடத்த நடப்பு (2026 – 2027) நிதி ஆண்டிற்கு அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *