தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவையாக விளங்கும் ‘ஆவின்’ பால் விநியோகம் அண்மைக்காலமாகக் கடுமையாகக் குறைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் கொள்முதல், தற்போது 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் ஆவின் பால் விநியோகம் சுமார் 3 லட்சம் லிட்டர் வரை சரிந்துள்ளது என்றும், மாநிலம் முழுவதும் பெரும் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் அன்றாடம் பால் விநியோகம் 16 லட்சம் லிட்டரிலிருந்து 13.50 லட்சம் லிட்டராக (சுமார் 2.5 லட்சம் லிட்டர் அளவிற்கு) குறைந்துள்ளது. கோடைக்காலம் காரணமாகவே உற்பத்தி குறைந்துள்ளதாக ஆவின் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டாலும், போதிய நிர்வாக அக்கறை இல்லாததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என பால் முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது ஆவின் நிறுவனம் பசும்பாலுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு ரூ.44 என நிர்ணயித்துக் கொள்முதல் செய்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதால், நட்டத்தைத் தவிர்க்க விவசாயிகள் தங்களின் பாலைத் தனியாருக்கு வழங்கி வருகின்றனர். இதனைத் தடுக்க, ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாகப் பசும்பாலுக்கு ரூ.45 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.54 ஆகவும் உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்களும், முகவர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் ஏழை மக்கள் கூடுதல் விலை கொடுத்து தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவர்.
ஒன்றிய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷாவின் வழிகாட்டுதலின்படி, ‘அமுல்’ நிறுவனம் வட மாநிலங்களில் கால்பதித்து, அங்கிருந்த உள்ளூர் கூட்டுறவு அமைப்புகளை முடக்கிய வரலாறு அண்மைக் காலத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக, மகாராட்டிராவில் நீண்டகாலமாகப் புகழ் பெற்றிருந்த ‘ஆரே’ (Aarey) நிறுவனம், தற்போது அமுல் நிறுவனத்திடமிருந்து பால் பொருட்களை வாங்கி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், கருநாடகாவில் ‘நந்தினி’ பால் நிறுவனத்திற்குப் போட்டியாக முந்தைய பாஜக அரசு அமுல் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை, சித்தராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காலூன்ற முயன்றபோது, முந்தைய அரசு அவற்றை முறியடித்து ஆவின் பால் நிறுவனத்தை இந்தியாவின் சிறந்த பால் உற்பத்தி நிறுவனமாக மாற்றியது.
ஆனால், தற்போதைய சூழலில் – தொடர்ச்சியான பால் விநியோகக் குறைவு, கொள்முதல் சரிவு, மாதாந்திர அட்டைதாரர்களுக்கான சலுகைகள் ரத்து போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஆவின் நிறுவனத்தை முடக்கி, தனியாருக்குச் சாதகமாகச் செயல்பட வைப்பதற்கான மறைமுக வேலைகளோ என்ற அச்சத்தைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் நிறுவனத்தின் பழைய பெருமையையும் மக்கள் நம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இதே போல, பிற அரசுத் துறைகளிலும் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடுகள் அமையக் கூடாது. கடந்த ஆட்சியில், சென்னை மாநகராட்சியின் சில வார்டுகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டபோது, திராவிடர் கழகத் தலைவர் அதனைக் கண்டித்தார். நகர சுத்தித் தொழிலாளர்கள் அரசுப் பணியாளர்களாகவே இருக்க வேண்டுமென்ற தந்தை பெரியாரின் கருத்தைச் சுட்டிக் காட்டினார். தற்போதைய ஆளும் த.வெ.க.வும், அப்போது தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்தது. ஆனால், கடந்த மாதத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைப் பொது-தனியார் கூட்டாண்மை முறையில், தனியாருக்கு அளிப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு எதிராகத் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில் அந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆறுதலளிக்கிறது.
திமுக ஆட்சியில் ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் கொள்முதல் செய்யக் கோரப்பட்ட 500 மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டரை ரத்து செய்து, தனியார் நிறுவனங்களே பேருந்துகளை வாங்கி இயக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, கிலோமீட்டர் அடிப்படையில் நிலையான கட்டணத்தை வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக வரும் தகவல் என தனியார் மயத்தை நோக்கி மிக முக்கியமான துறைகளை நகர்த்துவதாக வரும் செய்திகள் வரவேற்கத்தக்கவை அல்ல. தொழில் வளர்ச்சியில் தனியாரை ஊக்குவிப்பது வேறு; பொதுத் துறைகளில், மக்களின் அன்றாடத் தேவை மிகுந்த துறைகளைத் தனியாருக்குக் கொடுப்பது என்பது வேறு.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்று, தனியார் மயமாக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப் போலத் தான் இதுவும்! இவை மக்கள் சொத்துகள்! மக்களின் அன்றாடத் தேவைகள்! அவற்றைக் காத்து பொதுச் சொத்துகளாகவே, லாபத்துடன் பராமரிக்க வேண்டியதே அரசுகளின் கடமையாகும். நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே துறையை, மக்கள் நலனும் பாதிக்கப்படாமல், அதே வேளையில் லாபம் கொழிக்கும் துறையாக மாற்றிக் காட்ட முடியும் என்று நிறுவிய லாலு பிரசாத் போன்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
