போதைப் பொருளில் சிக்கிய சர்ச்சை! அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க. மாணவர் அணி போராட்டம்! சென்னையில் மேனாள் அமைச்சர்கள் கைது

2 Min Read

சென்னை, ஜூன் 30– அமைச்சர் டி.சரத்குமாரை போதைப்பொருள் சர்ச்சையின் கீழ் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று  (29.6.2026) நடைபெற்றது. சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேனாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள்கள்

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார், போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற காட்சிப் பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் திமுகவினர் நேற்று (29.6.2026) மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர், ‘போராட்டத்துக்கு 5 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்’ எனக் கூறி பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் சம்பவ இடத்துக்குத் திரண்டு வந்தனர்.

காவல் துறையினரின் தடையையும் மீறி, சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “அமைச்சர் தனது கைப்பேசி மீது கார்டை வைத்து பவுடரை நசுக்குவதும், கையில் 500 ரூபாய் நோட்டை மடித்து வைத்திருந்த பாணியும், உயர்ரக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் உபயோகிக்கும் நுகர்வு முறையாகும்.

ஆனால், இதற்குப் பதிலளித்த அமைச்சர், `பிறந்து சில நாட்களே ஆன தன் குழந்தைக்கு மாத்திரை நசுக்கினேன்’ என்கிறார். ஆனால் அவரது மனைவியோ, `ஒன்றரை வயது குழந்தைக்குப் பால் கொடுக்கச் சென்றபோது மாத்திரையை நசுக்கினார்’ என்று முரண்பாடாக் கூறுகிறார். எனவே அமைச்சர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என்றார்.

மேனாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறும்போது, “சம்பந்தப்பட்ட அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் `கொக்கைன்’ உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்று ஆய்வறிக்கை கோர வேண்டும்” என்றார். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பதிவில், “போதைப் பொருள் பயன்படுத்தியது போல், ‘தக் லைப் ஸ்டோரி’ போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த திமுகவினர் கைது; தவெக ஆட்சியை விமர்சிப்பதால், மேனாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு; எ.வ.வேலு வீட்டில்ரெய்டு… இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீடிக்காது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *