சென்னை, ஜூன் 29- ‘ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் தேவை’ என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு ஆணைய நீதிபதி கே. என்.பாஷாவை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை களை தடுப்பதற்கு தனிச் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு தி.மு.க. ஆட்சியின் போது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி வெ.பழனிக்குமார், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி எஸ்.ராமநாதன் ஆகி யோர் இருந்து வருகின்றனர்.
இந்த ஆணையம் அரசியல் கட்சிகள், சட்ட வல்லுனர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட 25 குடும்பத்தினர் தாழ்த்தப்பட்ட மனித உரிமை ஆர்வல ரான எவிடென்ஸ் கதிர் தலை மையில் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான சிறப்பு ஆணையத்தின் நீதிபதி கே.என்.பாஷாவை சென் னையில் நேரில் சந்தித்து ஆணவக் கொலையால் தங்களது குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டது? என்பது தொடர்பான வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தனர்.
வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்
அதாவது, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத் திய உடுமலைப் பேட்டை சங்கர், சேலம் ஓமலூர் கோகுல் ராஜ் கொலை வழக்கு ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன் உள்ளிட்டோரும் தங்களது வாக்குமூலத்தை ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆணையத்தில் அளித்த மனுவில், ‘தமிழ்நாட்டில் கடந்த 2014 முதல் 2025 வரை ஆணவ கொலையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்த ஆணவக் கொலைகளில் உடும லைப்பேட்டை சங்கர், சேலம் கோகுல்ராஜ் உள்ளிட்ட 7 ஆணவக் கொலைகளுக்கு மட்டுமே மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில் சில வழக்குகளில் குற்றவாளிகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தண்டனையின் வீரியத்தை குறைத்து தீர்ப்பு வாங்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன.
தனிச்சட்டம் தேவை
‘திருமண வயதை அடைந்த பெண்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுக்க அனைத்து அதிகாரமும் உள் ளது. இதில் யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது. அவர்களின் சுயமரியாதைக்கு எதிராக யாரும் நடந்து கொள்ளக்கூ டாது’ என்று ஒரு வழக்கிலும், ஆணவக் கொலைகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என மற்றொரு வழக்கிலும் கோர்ட்டு வலியு றுத்தி உள்ளது.
ஆணவக் கொலைகள் மட்டுமல்லாமல் சித்ரவதை செய் தல், தற்கொலைக்கு தூண்டு தல், காயம் ஏற்படுத்துதல், கடத்தி வைத்தல், தனி அறை யில் அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களும் நடக்கின்றன.
ஆணவக் கொலை மற்றும் குற்றங்கள் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் என் கிற ரீதியில் மட்டும் நடக்க வில்லை. பிற்படுத்தப்பட் டோர் இடையிலும் ஆணவக் கொலைகளும், ஆணவக்குற் றங்களும் நடக்கின்றன. அதே போன்று ஆதிதிராவிடர் சமூகத்திற்குள்ளும் இத்தகைய வன்முறைகள் நடக்கின்றன. ஒரே ஜாதியில் பொருளாதார அந்தஸ்து பார்த்தும் இத்தகைய வன்முறை நிகழ்வுகள் நடக்கிறது. இதுபோன்ற கொலைகளை விசாரித்து தண்டனை கொடுப்பதற்கு வலுவான சிறப்பு முன்னெடுப்பு தேவைப்படுகிறது. எனவே, ஆணவகொலைக்கும், ஆணவ குற்றங்களுக்கும் எதிராக தனிச்சட்டம் கண் டிப்பாக தேவை’ என கூறப்பட்டு உள்ளது.
