பேரருவி நகர் தந்த பேரெழுச்சி

3 Min Read

அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த போது 1977 ஆம் ஆண்டு  குற்றாலத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை. அதற்கு முன்னெல்லாம் தத்துவத் தலைவராம் தந்தை பெரியாரே நடத்தும் பயிற்சிப் பட்டறைகள்தாம் தலைவர்களை உருவாக்கின. ஒரு வாரம், ஒரு மாதம் கூடத் தொடரும் அப் பட்டறைகள். பயிற்சி எடுத்தவர்கள் பிரச்சாரகர்களாகி பல ஊர்களுக்கும் அனுப்பப்படுவார்கள். பரப்புரைகளில், இயக்கப் பணிகளில் ஈடுபடுவார்கள். மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் என்று பலரும் இப் பட்டறையில் கூர் தீட்டப்பட்டுள்ளனர்.

பெரியாரின் ஈரோட்டு குடிஅரசு அலுவலகமே ஒரு நிரந்தரப் பயிற்சிப் பட்டறையாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அன்னை மணியம்மையாரும், முத்தமிழறிஞர் கலைஞரும் அந்தக் குருகுலத்தில் பயின்ற மாணவர்கள் தான். அப்படியொரு பயிற்சிப் பட்டறையில் தான் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறுவனாக இருக்கும்போது பயிற்சி பெற்றார். அப்படியொரு பட்டறை திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் அருகில் உள்ள விடயபுரத்தில் நடந்த போது தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகத்தை இவ் வுலகுக்கு வழங்கினார். எத்தனை எத்தனை இளைஞர்கள் கருஞ்சட்டை வீரர்களாகச் சுயமரியாதைக் கொள்கைகளை எடுத்து முழங்கினரோ, அத்தனைப் பேரும் பெரியாரிடம் நேரில் பயிலும் வாய்ப்பு கிடைத்திருந்தது. 95-ஆம் வயதில் பெரியார் நம்மை விட்டுப் பிரிந்தார்.

பெரியார் உடலால் நம்மை விட்டுப் பிரிந்தாலும், தத்துவமாகத் தொடர்கிறார், நம் இயக்கமாகத் தொடர்கிறார் என்பதன் சான்றாகத்தான் அன்னை மணியம்மையார் இயக்கப் பணிகளை மேற்கொண்டார். அய்யா போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் தொடர்ந்தது அந்தப் பயணம். அந்தப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் தான் ‘குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!’

பெரியார் என்ற தனி மனிதரோடு அவரது கொள்கை போய்விடாது! அவரது கொள்கைகளும், தத்துவங்களும் தலைமுறை கடந்து, எல்லைகளைக் கடந்து கொண்டு சேர்க்கப்படும் என்பதன் அடையாளம் தான் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

47 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இங்கிருந்து மட்டும் தயாராகியிருப்பர். ஒக்கேனக்கலிலும், சென்னையிலும், தமிழ்நாடு முழுவதும் பிற மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வரும் பயிற்சிப் பட்டறைகளின் எண்ணிக்கையும், அதில் பயன்பெற்றோர் எண்ணிக்கையும் பல பத்தாயிரங்களைத் தாண்டும்.

நான்கு அல்லது அய்ந்து நாட்கள் நடைபெறும் இப் பட்டறையை அன்னையார் மறைவுற்ற பிறகு, இடைவிடாது தொடர்ந்து நடத்தி வருகிறார் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி! இந்தப் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றோர் பல தரத்தவர். ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளைக் கடந்து விட்டது. பயிற்சிப் பட்டறையில் முதல் தலைமுறை பங்கேற்றவர்களின் பேரப்பிள்ளைகள் என்னும் மூன்றாம் தலைமுறையினர் வந்து பங்கேற்கும் அளவுக்கு அதன் வரலாறு நீள்கிறது.

கழகத் தோழர்கள் தங்கள் குழந்தைகளை, இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் பேரார்வத்துடன் ஒவ்வோர் ஆண்டும் இப் பாசறைக்கு அனுப்பி வைப்பர். மணமேற்கவிருக்கும் காதலர்களில் ஒருவரோ, மண விழா கண்ட புதிய இணையர்களில் ஒருவரோ இயக்கத்தவராகவும், பெரியாரியலைப் பின்பற்றுபவராகவும் இருந்தால், பகுத்தறிவும், சுயமரியாதையும் மிக்க வாழ்க்கைப் பாடமாம் பெரியாரியலைக் கற்க இங்கே அழைத்து வருவதை ஒவ்வோர் ஆண்டும் இப் பயிற்சிப் பட்டறை கண்டிருக்கிறது. இங்கிருந்து பயிற்சி பெற்றோர் பெரும் பெரும் அறிவாளர்களாக, ஆய்வாளர்களாக, அரசியல் தலைவர்களாக, மக்கள் பணியாளர்களாக, உயர் அதிகாரிகளாக ஏராளம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஊக்கத்தை ஊட்டி அனுப்பியது குற்றாலம் பயிற்சிப் பட்டறை!

இந்த ஆண்டு நடைபெற்ற நான்கு நாட்கள் தனி வரலாறு படைப்பவை. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 167 பேர் இணைந்தனர். அனுமதிக்கு எந்த வயது குறிப்பிடப்பட்டிருந்ததோ அவர்கள் தான் மாணவர்கள்! இதில் இயக்கக் குடும்பங்களிலிருந்து வந்திருந்தவர்கள் 32 பேர் மட்டுமே; பெரியாரியலைக் கற்க வந்த புதியவர்கள் 135 பேர். அதில் முதல் முறையாக வந்தவர்கள் 134 பேர். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களே மிகுதி. ஏன் பேராசிரியர்களும், மருத்துவர்களும் கூட பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர் –  மாணவர்களாக மாறினர்.

பெரியாரை ஓரிரு சொற்றோடர்களுக்குள் மட்டும் அறிந்திருந்தவர்களுக்கு ஒரு நூலகத்துக்குள் நுழைந்த நிறைவு! வகுப்பு நடத்தியோருக்கு மாணவர்களுக்கு உரியதை வழங்கிய நிறைவு! அரங்கம் நிறைந்திருந்த மாணவர்களைக் கண்டும், அவர்களின் கேள்விக்குப் பதில் அளித்தும், பல்திறன் ஆற்றல்களைக் கண்டும் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் புத்துணர்வு!

திராவிடத்திற்கும், பெரியாருக்கும் யாராலும் ‘எண்ட் கார்டு’ (End Card) போட முடியாது. ஓராயிரம் இளைஞர்களைக் கேட்ட போராட்ட நாயகனுக்குத் தலைமுறை தலைமுறையாக இப் பட்டறைகளில் தயாராகி வரும் இளைஞர்கள், தங்களையே கொடுத்துக் கொண்டிருப்பர். குற்றால அருவிகளில் இன்னும் ‘சீசன்’ தொடங்கவில்லை. பேரருவி கூட சிற்றருவியாக ஒழுகிக் கொண்டிருக்கிறது. ஆனால், பெரியாரியல் பேரருவியாகி, புத்தெழுச்சி தந்திருக்கிறது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *