சேலம், ஜூன் 29- சேலம் மரவனேரியில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். விழாவுக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முழுமையாகக்
கொண்டுவர நடவடிக்கை
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறையில் பல்வேறு புதிய திட்டங் களைச் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் (Budget) முறைப்படி வெளியிடப்படும். பொதுமக்களின் வசதிக்காகப் பத்திரப்பதிவுத்துறையில் இணைய வழி (ஆன்லைன்) முறை முழுமையாகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பட்ஜெட்டில்…
பத்திரப்பதிவிற்கான இணைய வழி முன்பதிவு (Token Booking) கால இடைவெளியைக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த முழுமையான அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகும்.
தொழில்நுட்பக் குறைபாடுகள்: பத்திரப்பதிவின் போது ஏற்படும் சர்வர் பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன, அவை விரைவில் சரிசெய்யப்படும்.
வரிக்குறைப்பு
வணிகவரியில் சில வரியினங்களைக் குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேவையெனில், முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கியத் துறைகளாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறைகள் திகழ்கின்றன. ஆண்டுதோறும் இத்துறைகளின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
“தற்போது சந்தை மதிப்புக்கும் (Market Value), வழிகாட்டி மதிப்புக்கும் (Guideline Value) இடையே உள்ள இடைவெளியைச் சீரமைக்கத் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் அறிக்கை பெற்றவுடன், அதன் அடிப்படையில் தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
