சென்னை, ஜூன் 28– தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லியும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை கூறியும் மாணவர் சேர்க்கை முன்னெடுக்கப்படுகிறது.
அதன்படி, கோடை விடுமுறைக்கு முன்னதாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்தது. அந்தந்த பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் 4 லட்சம் மாணவ-மாணவிகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த சூழலில், தற்போது வரை 3 லட்சத்து 37 ஆயிரத்து 469 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
