சின்னாளப்பட்டி: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா’’ – திறந்தவெளி மாநாட்டில்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை

8 Min Read

*   தேர்தலில் ஓர் இயக்கம் தோற்றதினாலேயே அந்த இயக்கம் அழிந்துவிடாது!

* நீதிக்கட்சியை, எந்தக் கொள்கைக்காகத் தொடங்கினார்களோ அவர்களை எல்லாம்
தேர்தல் அரசியலிலே நாம் தோற்கடித்து விட்டோம் என்று ஆரியம் கொக்கரித்தது!
‘‘இல்லை, மீண்டும் வருவோம்; மீண்டும் எழுவோம்; மீண்டும் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்குவோம்’’
என்று சாதித்துக் காட்டிய வரலாறுதான் சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு!

சென்னை, ஜூன் 27 தேர்தலில் ஓர் இயக்கம் தோற்றதி னாலேயே அந்த இயக்கம் அழிந்துவிடாது என்பதை முதலில் எல்லோரும் மனதில் தெளிவாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்!  எந்த நீதிக்கட்சியை, எந்தக் கொள்கைக்காகத் தொடங்கி னார்களோ அவர்களை எல்லாம் தேர்தல் அரசியலிலே நாம் தோற்கடித்து விட்டோம் என்று ஆரியம் கொக்கரித்த நேரத்திலே, ‘‘இல்லை, மீண்டும் வருவோம்; மீண்டும் எழுவோம்; மீண்டும் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்குவோம்’’ என்று சாதித்துக் காட்டிய வரலாறுதான் சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு. அதனோடு நீதிக் கட்சியினுடைய தொடர்ச்சியும் சேர்ந்து சேலத்தில் 1944 இல் திராவிடர் கழகமாக மாறியது. 1949 இல் உருவான அதனுடைய அரசியல் பிரிவுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இது வரலாறு – அதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சின்னாளப்பட்டி: எதிர்நீச்சலில் வென்ற
பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – மாநாடு

நேற்று  (26.6.2026) மாலை 5  மணியளவில், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில், சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா’’ – மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

15 ஆண்டுகளுக்குப் பிறகு  உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு!

பெருமைக்குரிய சின்னாளப்பட்டி நகரில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு 15 ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கின்றேன்; மீண்டும் இந்த மேடையிலே அமர்ந்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பினைத் தந்திருக்கிறார் நம்முடைய மாவட்டத் தலைவர்; 60 வயது ஆகின்ற இளைஞர் அவர்.  அப்படிப்பட்ட இந்தச் சிறப்பான கூட்டம் – வரலாற்றுத் திருப்பமான ஒரு திறந்தவெளி மாநாட்டை ஒட்டிய நிகழ்வாகும். இந்த திறந்தவெளி மாநாடு என்பது மிகப்பெரிய அளவிலே சிறப்பானது. மாநாட்டிற்கு இந்தத் தலைப்பே மிக வித்தியாசமான ஒரு தலைப்பு  – ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது  ஆண்டு விழா’’ – திறந்தவெளி மாநாடு!

தேர்தலில் ஓர் இயக்கம் தோற்றதினாலேயே
அந்த இயக்கம் அழிந்துவிடாது!

தந்தை பெரியார் எப்படியெல்லாம் தொண்டு புரிந்து  நூறாண்டு கண்ட இந்த சுயமரியாதை இயக்கத்தை  உருவாக்கினார்; எதிர்ப்புகளைச் சந்தித்தார்; இந்த இயக்கம் இன்றைக்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. தந்ைத பெரியார் அதனை சமூகநீதி இயக்கமாக, நீதிக்கட்சியாகத் தொடங்கி, அது பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அவர்கள் உரிமைகளுக்கு உரியது என்று ஆக்கினார். அந்த இயக்கத்தை அரசியலிலே தோற்கடிக்கலாம் என்று பார்ப்பனர்கள் முயற்சி செய்து, அதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெற்றி பெற்றனர். தேர்தலில் ஓர் இயக்கம் தோற்றதினாலேயே அந்த இயக்கம் அழிந்துவிடாது என்பதை முதலில் எல்லோரும்  மனதில் தெளிவாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.

‘‘மீண்டும் வருவோம்; மீண்டும் எழுவோம்; மீண்டும் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்குவோம்!’’

தேர்தல் என்பது ஒரு சூதாட்டம் மாதிரி. ஆகவே, தேர்தல் முடிந்தவுடனே, சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், இதோடு அவ்வளவுதான், நீதிக்கட்சி ஒழிந்தது என்று  சொன்னார்கள். ஆனால், இந்த இயக்கம், இன்றைக்கும் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி இரண்டு இயக்கங்களாக இருக்கின்றன. ஒன்று, முழுக்க முழுக்க அரசியல் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கிறது. இன்னொன்று சமூக இயக்கமாக இருக்கிறது. அதுதான் திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கம். அந்தச் சுயமரியாதை இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. தேர்தல் அரசியலிலே எந்த நீதிக்கட்சியை, எந்தக் கொள்கைக்காகத் தொடங்கினார்களோ அவர்களை எல்லாம் நாம் தோற்கடித்து விட்டோம் என்று ஆரியம் கொக்கரித்த நேரத்திலே, ‘‘இல்லை, மீண்டும் வருவோம்; மீண்டும் எழுவோம்; மீண்டும் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்குவோம்’’ என்று சாதித்துக் காட்டிய வரலாறு தான் சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு. அதனோடு நீதிக் கட்சியினுடைய தொடர்ச்சியும் சேர்ந்து சேலத்தில் 1944 இல் திராவிடர் கழகமாக மாறியது. 1949 இல் உருவான அதனுடைய அரசியல் பிரிவுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இது வரலாறு – அதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் எதிர்நீச்சல் தான்
எங்களுக்கு வழமையானது!

அப்படிப்பட்ட ஒரு சிறப்பான இயக்கம். அந்த இயக்கம், என்றைக்கும் தோற்றுப் போகாது. சிலர் நினைக்கிற மாதிரி ‘‘திராவிடத்தை, அந்த  உணர்ச்சியை  எல்லாம் நாம் மாற்றிவிட்டோம். இனிமே திராவிடமே இருக்காது’’ என்று நினைக்கிற பைத்தியக்காரர்களுக்குத் தெளிவாக உணர்த்தக்கூடிய ஓர் உதாரணமாகத்தான் இந்த மாநாடு நடைபெறுகின்றது, நடைமுறை சாத்தி யம் – அதோடு வரலாற்றின் சுவடுகளையும் எடுத்துக் காட்டக்கூடிய – அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு. இந்த இயக்கம் சாதாரண மலர் பாதையிலே வந்தது அல்ல; மிட்டாமிராசுகள், பணக்காரர்கள், ஜமீன்தார்கள் கட்சி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட நீதிக்கட்சி, பெயர் மாற்றப்பட்டு, மக்கள் இயக்கமாகக் கட்டமைக்கப்பட்ட அந்த நிலையிலேதான், எப்படிப்பட்ட எதிர்ப்புகளைச் சந்தித்தது என்பதை நினைவூட்ட வேண்டும்; இன்றைய அரசியல்வாதிகளுக்கும் சரி, இன்றைய இளைய தலைமுறைக்கும் சரி – அதற்காகத்தான் விசித்திரமான இந்தத் தலைப்பு – ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா!’’ எப்போதும் எதிர்நீச்சல் தான் எங்களுக்கு வழமை யானது.

சுயமரியாதைச் சுடரொளிகள்!

சிறப்பான –  இந்த மாநாட்டினுடைய நினை வரங்கத்திற்குப் சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, பெரியவர் போளி, இப்போதுள்ள உள்ளூர்க்காரர்களுக்குத் தெரியாது. அதே மாதிரி சண்முகம் ஆகியோரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இங்கே வரவேற்புரை ஆற்றி அமர்ந்திருக்கிற மாவட்டத் தலைவர் தோழர் வீரபாண்டியன் அவர்களே, பழனி மாவட்டத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களே,  சின்னாளப்பட்டி நகர தலைவர் நாகேந்திரன் அவர்களே, மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசன் அவர்களே, கழகக் கொடியேற்றிய விருதுநகர்  திராவிடர் கழகத் தலைவரும், இந்த மண்ணுக்குரியவருமான கல்வியாளர் ஆசிரியர் நல்லதம்பி அவர்கள், தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மாநாட்டைத் தொடங்கி வைத்த இந்த மண்ணுக்குரியவரான நம்முடைய அய்யா முதுபெரும் பெரியார் தொண்டர்,  80 வயதைத் தாண்டியவர். அய்யா சேலம் மாவட்டக் காப்பாளர் ஜவகர் அவர்களே, அதுபோல இங்கே  சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தைத் திறந்து வைத்து, எனக்கு முன்னாலே சிறப்பாக உரையாற்றிய கிராமப் பகுத்தறிவு பிரச்சாரக் குழுவின் மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களே, ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அருமைச் சகோதரர் முருகேசன் அவர்களே, பேரூர் திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களே, பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதிபா கனகராஜ் அவர்களே, பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா அவர்களே, மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் அவர்களே, அதேபோல ஜெயராமன் அவர்களே, தலைமைச் செயற்கு உறுப்பினர் மதுரை செல்வம் அவர்களே, மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம், தேனி மாவட்டம், சேலம் மாவட்டம், ஆத்தூர் மாவட்டம், பழனி மாவட்ட கழகப் பொறுப்பாளர்களே மற்றும் சிறப்பாக இங்கே குழுமியுள்ள திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக மற்றும் அனைத்து இயக்கங்கள், இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட அருமைச் சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பான வணக்கம்!

உங்களுக்கெல்லாம்
ஓர் அன்பான வேண்டுகோள்!

மிகப்பெரிய இந்த மேடை, கட்டடம் இந்த ஊரின் பொதுவான மேடையாகும். தேர்தல் காலத்திலேயும் இதில் பேசியிருக்கிறேன். இன்றைக்கு நீங்கள் வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கேட்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. என்னுடைய உரை  அநேகமாக 45 நிமிடங்கள் இருக்கலாம். ஆனால், அதற்குள்ளே எல்லா செய்திகளையும் சொல்லிவிட முடியாது. அதுவும் நான் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். இப்படி  ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டும் என்று  நினைக்கும்போது, உங்களுக்கெல்லாம் ஓர் அன்பான வேண்டுகோள், நாங்கள் பேசுகின்ற கருத்தை விட, பரப்ப வேண்டிய, நீங்கள் படிக்க வேண்டிய கருத்துகள் ஏராளம். அதற்காகதான் தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்து சிறு சிறு வெளி யீடுகளை  புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறோம். அது வியாபார நோக்கத்திற்காக அல்ல. அதனுடைய விலை எல்லாம் பார்த்தீர்களேயானால், இன்றைக்கு இருக்கிற நிலையில், அப்புத்தகங்கள் மலிவான விலைதான். நாங்கள் கூட்டங்களில் பெரியார் அய்யா காலத்திலிருந்து அதைக் கடைப்பிடிக்கிறோம். அய்யாவும் அப்படித்தான் நடந்தார்கள்.

நசுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காகதான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது!

ஏனென்று சொன்னால், அவர் சொல்லுவார், நாங்கள் ஆதாரத்தோடு பேசக்கூடியவர்கள். யாரையும் அவதூறு செய்யக்கூடியவர்கள் அல்ல. யாரிடமும் வெறுப்பு – விருப்பு என்பதை வைத்துக்கொண்டு பேசக்கூடியவர்கள் அல்ல. நம்முடைய சமுதாயம், மக்கள் ஒருங்கிணைந்திருக்க வேண்டும்; மானுடம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். இப்படி ஒரு பரந்த நோக்கத்தோடுதான், சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. நசுக்கப்பட்ட மக்களுடைய உரிமை களான  கல்வி, உத்தியோக உரிமைகளுக்காகதான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்ததுதான் சேலத்திலே 1944 இல் திராவிடர் கழகமாக மாறியது. திராவிடர் கழகம், சமூகத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள், இந்தக் கொள்கைகளை சட்ட வடிவங்களாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அரசியலிலே பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

வருகிறவர்கள், வருவார்கள்; போகிறவர்கள், போய்க்கொண்டிருப்பார்கள்– அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை!

எனவேதான், ‘இரட்டைக் குழல் துப்பாக்கி’ என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். இந்த இரட்டைக் குழலும், எப்பொழுதும் இரட்டைக் குழலாவே இருக்கும். இது ரயில் சினேகம் மாதிரி அல்ல; இது தாய் – பிள்ளை உறவு. தாயும், பிள்ளையும் என்றைக்கும் பிரிய மாட்டார்கள். தாய், பிள்ளை எந்த வீட்டில் இருந்தாலும், தாய் வீடு என்றைக்கும் சொந்தமானது. தாயும், பிள்ளையும் அப்படி இருப்பார்கள். வரவுக்காரர்கள் இருக்கிறார்கள்; அழைப்பு வாங்கிக் கொண்டு வருபவர்கள், வருவார்கள் – போவார்கள்.

எனவே, வருகிறவர்கள், வருவார்கள்; போகிறவர்கள், போய்க்கொண்டிருப்பார்கள். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசி யமே இல்லை. வருகிறவர்கள் எல்லாம் நிரந்தரமாக இருந்தால், நமக்குத் தொல்லை.

எதிர்ப்பு, அந்த எதிர்ப்பைக் கண்டு கொஞ்சம் கூட பயப்படாமல், எப்படி எதிர்நீச்சல் அடித்து வந்த இயக்கம் இது என்பதற்கு சின்னாளப்பட்டி ஓர் அருமையான எடுத்துக்காட்டு. சின்னாளப்பட்டி, சுயமரியாதைச் சுடரொளிகள் இணைந்த அருமையான ஒரு படம், பழைய படம். எனக்குப் பல தோழர்களை நேரிடையாகத் தெரியும். இன்றைக்கு அவருடைய வாரிசுகள் எல்லாம், குடும்ப வாரிசுகள் யார் இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தித்து, அவர்களுக்கு ஒரு சிறப்பு செய்திருக்கிறார்கள் பாருங்கள், இந்தக் கூட்டத்தினுடைய தனித்தன்மை அது.

(தொடரும்)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *