சென்னை, ஜூன் 27- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது:
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? இது ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாடுதானா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.”
மக்களிடையே எழுந்த சந்தேகம்
பிஞ்சு மனங்களில் ஜாதிப் பிரிவினையை விதைக்கும் செயலாக இது அமைந்துவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ள தங்கம் தென்னரசு, மாணவர்களிடையே ஜாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்து குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாகவும், தெளிவாகவும் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தெருக்கள் மற்றும் சாலைகளின்
ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை
இடைக்கால தடையை நீட்டித்து
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மதுரை, ஜூன் 27- தமிழ்நாட்டில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், அரசாணையைச் செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டியுள்ளது. எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை” எனக் கோரிக்கை விடுத்தார்.
அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசாணையைச் செயல்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டதோடு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தள்ளி வைத்தனர்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு
ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 27- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2026ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தங்கள் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் ஜூலை 10-க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வுசெய்து தேர்வு பட்டியலை ஜூலை 14 முதல் 21ஆம் தேதிக்குள் இணைய வழியாக அனுப்ப வேண்டும்.
மாவட்ட தேர்வுக்குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி தலைவராகவும், மாநில பிரதிநிதியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெறுவர்.
உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எவ்விதமான புகாருக்கும் இடமில்லாமல் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
