நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தக் கூடாது! பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் தடை!

2 Min Read

மதுரை, ஜூன் 27- ஒரு சொத்தின் வழிகாட்டி மதிப்பை (Guideline Value) தன்னிச்சையாக நிர்ணயம் செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ சார் பதிவாளர்களுக்கு சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நிலங்கள் வழிகாட்டி மதிப்பு

மதுரையைச் சேர்ந்த ஆபேல் மூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந் ததாவது:

“விவசாயிகள் தங்களின் நிலங்களை விற்கும் சூழ்நிலை ஏற்படும் போது, அதிகாரிகள் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர்.

இதனால் பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப் படுகிறது. இந்த கூடுதல் விலை காரணமாக நிலங்களை வாங்க யாரும் முன்வருவதில்லை. இதனால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பதிவுத்துறை தனது சொந்த ஆதாயத்திற்காக வழிகாட்டி மதிப்பை நியாயமற்ற முறையில் உயர்த்துவது சட்டவிரோதமானது.”

எனவே, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்திப் பத்திரப்பதிவு கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பதிவுத்துறை அதிகாரிகளுக்குப் பல்வேறு முக்கிய உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் பிறப்பித் துள்ளது:

ஒரு சொத்தின் மதிப்பு குறைவாக இருப்பதாக சார் பதிவாளர் கருதினாலும், அவர் உடனடியாக கூடுதல் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது. முதலில் அந்தச் சொத்து ஆவணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, சரியான வழிகாட்டி மதிப்பை கணக்கிடுவதற்காக அந்த ஆவணத்தை மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் ஒரு சார் பதிவாளருக்கோ அல்லது மாவட்ட பதிவாளருக்கோ சொத்தின் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கவோ, மாற்றியமைக்கவோ சட்டத்தில் இடமில்லை. தமிழ் நாடு முத்திரைச் சட்டத்தின் கீழ் இதற்கென தனிச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ‘மதிப்பீட்டுக் குழுவிற்கு’ (Valuation Committee) மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது.

சொத்து மதிப்பை நிர்ணயிப்பதற்கான காரணிகள்

அதிகாரிகள் தன்னிச்சையாக சொத்தின் மதிப்பை முடிவு செய்யக் கூடாது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒரு பகுதியின் சொத்து மதிப்பை நிர்ணயிக்கும் போது பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்:

சாலைகள் மற்றும் போக்கு வரத்து வசதிகள். சந்தைகள், மருத்துவ மனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.  சுற்றுப்புற வளர்ச்சி மற்றும் அண்டை நிலங்களின் சந்தை மதிப்பு. இவற்றை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, அதிகாரிகள் தன்னிச்சையாக மதிப்பை நிர்ணயிப்பது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பதிவுத்துறை அதிகாரிகள் அனைவரும் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *