கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித் துறை அனுமதி

2 Min Read

சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலர் அருண்ராய் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

நடப்பு (2026-2027) கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள கலைப் பாடப் பிரிவுகளுக்கும், ஆய்வக வசதிக்கு ஏற்ப அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் 20 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேபோல, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தேவையுள்ள கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 10 சதவீதமும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் முதன்முதலில் ஒப்பளிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் கூடுதல் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். இந்த கூடுதல் சேர்க்கை அனுமதி நடப்பு கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். தவிர, கூடுதல் சேர்க்கைக்காக கூடுதல் பணியிடங்கள் கேட்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்

இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமேசுவரம், ஜூன் 27– இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்கியது தொடர்பான காட்சிப் பதிவு பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 24.6.2026 அன்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, 6 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். குறிப்பாக கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசியதாகவும் தெரிகிறது.

மீனவர்களுக்கு நட்டம்

தங்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதை ராமேசுவரம் மீனவர்கள் தங்களது கைப்பேசியில் காட்சிப் பதிவாக பதிவு செய்தனர். இந்த காட்சிப் பதிவை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிப் பதிவானது தற்போது பரவி வருகிறது.

அந்த காட்சிப் பதிவில், இந்திய கடற்பகுதிக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி புகுவது போன்று ஜி.பி.எஸ். கருவி குறியீட்டுடன் காட்சிப் பதிவை பதிவிட்டுள்ளதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.

இதனால் தங்களுக்கு நட்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் பலர் தெரிவித்தனர். இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து இலங்கை கடற்படையினர் அத்துமீறி இருப்பதாக மீனவ அமைப்புகளும், மீனவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *