டில்லியில் மாநகராட்சி, மாநிலம் மற்றும் ஒன்றியத்தில் என ‘மூன்று எஞ்சின் அரசு’ அங்கே நடக்கிறது. 2024ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று மாநிலத்தைச் சேர்ந்த இளம் கல்வியாளர்களின் மிகவும் கொடூரமான மரணம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கி எடுத்து விட்டது.
இடுப்பளவுக்கு மேல் தண்ணீர்
டில்லியில் 27.07.2024 அன்று பெய்த மிக பலத்த மழையின் காரணமாக , ‘ராவ்ஸ் அய்ஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்’ பயிற்சி மய்யம் இருந்த சாலையின் இருபுறமும் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. அந்த மய்யத்தின் அடித்தளத்தில் மாணவர்கள் படிப்பதற்கான நூலகம் செயல்பட்டு வந்தது.
மழைநீரின் அழுத்தம் தாங்காமல் கட்டடத்தின் வெளிப்பக்கக் கதவு திடீரென உடைந்ததால், சாலையில் தேங்கியிருந்த டன் கணக்கிலான மழைநீர், சுனாமி போல மிக அதிவேகமாக அடித்தளத்திற்குள் புகுந்தது. வெறும் சில நிமிடங்களிலேயே அடித்தளம் முழுவதும் சுமார் 10 முதல் 12 அடி உயரத்திற்குத் தண்ணீர் நிரம்பியது.
அங்கு படித்துக்கொண்டிருந்த சுமார் 30 மாணவர்களில் பெரும்பாலானோர் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனால், தண்ணீரின் வேகம் மற்றும் அங்கிருந்த மரச்சாமான்கள் மிதந்து பாதையை அடைத்ததால் மூன்று மாணவர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே மூழ்கி மரணமடைந்தனர். அந்த மூன்று பேரும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங் களைச் சேர்ந்த திறமையான, பிரகாசமான எதிர்காலம் கொண்ட மாணவர்கள்.
ஸ்ரேயா (25 வயது): உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். விவசாயப் பிரிவில் பி.எஸ்சி. (B.Sc Agriculture) முடித்துவிட்டு, தனது அய்ஏஎஸ் கனவுக்காக ஏப்ரல் மாதம்தான் டில்லிக்கு வந்திருந்தார்.
தான்யா சோனி (25 வயது): தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்தவர். டில்லி பல்கலைக்கழகத்தில் (DU) படித்துக்கொண்டே இந்த மய்யத்தில் சேர்ந்து ஒன்றரை மாதங்களே ஆகியிருந்தன.
நெவின் டால்வின் (28 வயது): கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அழகியல் துறையில் பி.எச்டி. படித்துக் கொண்டிருந்தார்.
விதிமீறல்களும் அலட்சியமும்!
இந்த விபத்து தற்செயலானது அல்ல, முழுக்க முழுக்க பாஜக அரசின் விதிமீறல்களால் நடந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. கட்டடத்தின் அடித்தளத்தை ‘பொருட்கள் வைப்பறையாக’ பயன்படுத்த மட்டுமே டில்லி மாநகராட்சி யிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், விதிகளை மீறி அங்கு குளிரூட்டப்பட்ட சொகுசு நூலகம் நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, அங்குள்ள பல அய்.ஏ.எஸ். பயிற்சி நிலையங்களின் நிலையும் இப்படித் தான், நிறுவனங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் டில்லி மாநகராட்சிக்கு உண்டு. ஆனால் மாநகராட்சி முழுக்க முழுக்க லஞ்ச லாவண்யத்தில் திளைத்துள்ளது.
விளைவு சாதாரணச் சோதனைகள் கூட நடக்கவில்லை. அவசரக் காலங்களில் வெளியேற முறையான வழிகளைக் கூட ஆய்வு செய்யாமல் விட்டதால் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
முறையற்ற வடிகால் அமைப்பு
அப்பகுதியில் இருந்த வடிகால் கால்வாய்கள் நீண்ட நாள்களாகத் தூர்வாரப்படாமல் குப்பைகளால் அடைபட்டிருந்ததால், மழைநீர் வடிய வழியின்றி சாலையில் குளம் போலத் தேங்கியுள்ளது. எப்போதும் போல் விபத்து நடந்த உடனே டில்லி காவல்துறை அந்த பயிற்சி மய்யத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைக் கைது செய்து, அவர்கள் மீது ‘கொலைக்கு நிகரான மரணம் விளைவித்தல்’ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, டில்லியில் தங்கிப் படிக்கும் ஆயிரக்கணக்கான யுபிஎஸ்சி மாணவர்கள் தங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி பல நாள்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டில்லி மாநகராட்சி நிர்வாகம் விதிகளை மீறி அடித்தளத்தில் செயல் பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயிற்றுவிப்பு மய்யங்களுக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.
டில்லி ஓல்ட் ராஜேந்தர் நகர் விபத்து எனப்படும் இந்த வழக்கில் ‘ராவ்ஸ் அய்ஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்’ உரிமையாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்டடத்தின் அடித்தள உரிமையாளர்கள் 26.07.2024 அன்று கைதுசெய்யப்பட்டனர். இத்தோடு அந்தச் செய்தி முடிந்து விடுகிறது.
ஆனால் இவ்வளவு மோசமான விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகஸ்ட் முதல் வாரம் தனிப்பட்ட காரணங்களுக்காக (சிகிச்சை மற்றும் உறவினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக் காரணங்களைக் கூறி) பிணையில் வந்தனர். அதாவது இவ்வளவு மோசமான விபத்துக்குக் காரணமானவர்கள் ஒரு வாரம் மட்டுமே சிறையில் இருந்தனர். அதன் பிறகு பிணை நீடிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய வழக்கமான பிணையை வழங்கியுள்ளது. பின்னர், 2025 ஜனவரி 21 அன்று டில்லி உயர் நீதிமன்றம் இவர்களுக்கு வழக்கமான பிணையை (Regular Bail) உறுதி செய்தது. தலா ரூ.1 லட்சம் தனிநபர் பிணைத் தொகையின் அடிப்படையில் பிணை வழங்கப் பட்டது.
இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்?
வழக்கின் விசாரணை தற்போது சிபிஅய் (CBI) வசம் உள்ளதால், பிணையில் வெளிவந்துள்ள இதன் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இந்தப் பயிற்சி மய்யம் மட்டுமல்ல; வேறு பல கிளைகளும் உண்டு. அந்தக் கிளையில் பணம் சம்பாதிக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது வெளியில் இருக்கின்றனர். இந்த விபத்து தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
14 மாணவர்கள் எரிந்து சாம்பலான கொடூரம்!
சாமியார் ஆளும் மாநிலம் உத்தரப் பிரதேசம்/ அம்மாநிலத்தின் தலைநகர் லக்னோ அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகக் கட்டடம் ஒன்றில் 2026 ஜூன் 22 அன்று கீழ்தளத்தில் உள்ள செல்லப்பிராணிகள் மருத்துவமனையின் வெளிப்பகுதியில் ஏற்கெனவே பழுதாகி இருந்த மின்வயர் மீது விளம்பரப் பதாகைத்துணி உரச தீப்பிடித்தது. அந்த வணிக வளாகத்தின் மூன்று மாடியிலும் பல்வேறு தொழில் நிறுவனங்களும், பயிற்சி வகுப்புகளும் இருந்ததால் எல்லா இடத்திலும் விளம்பரப் பதாகைகள் தொங்கின. கட்டடத்தின் வெளிப்பகுதி முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
உள்ளே உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் எளிதில் தீப்பிடிக்கும் பல்வேறு பொருட்களால் நிறைந்திருந்தன. கடை உரிமையாளர்கள் எப்படியோ தப்பிக்க, பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். தீ பிடித்தால் வெளியேற பாதைகள் இல்லை. ஆகையால் அங்கிருந்த கழிப்பறை ஒன்றில் 4 மாணவிகள், 9 மாணவர்கள் தஞ்சமடைய தீ அந்த கழிப்பறைக்கும் பரவியது. காரணம் கழிப்பறை பிளைவுட் எனப்படும் மரத்துகள்களை இறுக்கி செய்யப்பட்ட செயற்கைப் பலகையால் ஆனது. கட்டடங்களில் பிளைவுட் பயன்படுத்தக் கூடாது என்ற தகவல் தொழில் நுட்பம் இந்தியாவில் தலையெடுத்த 1990-களிலேயே கடுமையான உத்தரவு உள்ளது. ஆனால் வட இந்தியாவில் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட 14 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிர் பிழைப்பதற்காக சிலர் கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்தனர். கீழே விழுந்ததில் கம்பிகள் குத்தியும், சுவரில் மோதியும் 3 பேர் கோர மரணமடைந்தனர். இந்த தீ விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
வெளியேற குறுகிய பாதை மட்டுமே இருந்த அந்தக் கட்டடத்திலிருந்து மாணவர்களின் உடலை வெளியே கொண்டுவர சுவரில் சுமார் அரைமணி நேரமாக சம்மட்டி மற்றும் கடப்பாறை கொண்டு ஓட்டை போட்டார்கள், சுவரில் பாதுகாப்பாக துளைபோட்டு உள்ளே உள்ளவர்களை வெளியே கொண்டுவரும் கனரக கருவிகள் வசதி வந்துவிட்டது. ஆனால் உத்தரப் பிரதேச தலைநகரில் சுமார் 30 மாணவர்கள் சிக்கியுள்ள ஒரு கட்டடத்தின் சுவற்றை ஓட்டை போட சம்மட்டியும் கடப்பாரையும் தான் கிடைத்தன. ஒருவேளை நவீன கருவிகளைப் பயன்படுத்தி இருந்தால் 15 மாணவர்களை காப்பாற்றி இருக்கலாம் போலும்!
இந்தக் கோர விபத்து தொடர்பாக லக்னோ காவல் துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 105 (கொலைக்கு நிகரற்ற குற்றம் manslaughter) மற்றும் தீயணைப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பெயர் விவரம்
வீரேந்திர பிரசாத் சுக்லா (62), ராம்கிருஷ்ணா உபாத்யாய் (43), துஷக் கிருஷ்ணா ஜெய்ஸ்வால் (31), 2ஆவது மாடியில் பயிற்சி நிலையம் சுரேஷ் குமார் சாஹூ (45), கட்டடத்தின் மேல் பகுதியை வாடகைக்கு எடுத்து நடத்தியவர்கள். மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர்.
அப்பாவி மாணவர்கள் இவ்வளவு பேரது கொடூரமான மரணத்திற்குக் காரணமானவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பார்ப்பனர்கள். ஒருவர் ஒடிசா பார்ப்பனர், மற்றொருவர் அரியானா பார்ப்பனர்.
இவ்வளவு கொடூரமான மரணம் நண்பகல் 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது! சாமியார் முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்? உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கோர விபத்து நடந்தபோது என்ன செய்திருக்க வேண்டும்? நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அவரோ மாலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டு கடைசியாக லக்னோவில் நடந்த நிகழ்வைச் சொல்லி “நான் செல்லவேண்டி இருப்பதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது” என்றார். அன்று அவரது உரை மட்டுமே நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த மறுநாள் நிகழ்விடத்திற்கு வருகிறார். அப்போது பாஜகவினரே ‘செட் அப்’ செய்த பாதிக்கப்பட்ட வர்களை சாமியார் முதலமைச்சர் சந்திக்கிறார். பிள்ளைகளை தீக்கிரைக்குப் பலிகொடுத்தவர்கள் முதலமைச்சரிடம் இவ்வாறு கூறுகிறார்களாம்.

“அய்யா, நாங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் உங்களின் பக்கம் நிற்கிறோம். உங்களது ஆட்சி சிறப்பானது” என்று சொல்லிக்கொண்டே போகிறார்களே தவிர, தீவிபத்தில் இறந்த பிள்ளைகளுக்கு நீதி கேட்கவே இல்லை. இதுதான் ‘செட் அப்’ ஆயிற்றே, பிறகு எப்படி கேட்பார்கள்? அதற்கு இவ்வாறு முதலமைச்சர் பதில் கூறுகிறார். “போதும் போதும் உங்கள் வசனம்” என்று கூலாக சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.
அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்பு அதிகாரி மற்றும் லக்னோ மேம்பாட்டு ஆணைய (LDA) பொறியாளர்கள் உள்பட 4 அரசு அதிகாரிகள் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு கொடூர மரணங்கள் நிகழ்ந்தும் இரண்டு நாள் செய்தியோடு அவை மறைக்கப்பட்டு விட்டன.
டில்லியில் கடந்த காலங்களில் நடந்த பயிற்சி மய்ய விபத்துகளான முகர்ஜி நகர் தீ விபத்து, ஓல்ட் ராஜேந்தர் நகர் பேஸ்மென்ட் விபத்து இவற்றோடு லக்னோ விபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர்களின் எதிர்காலம் வெறும் காவி உடை அணிந்து கொண்டு சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் முன்பு கூச்சலிட மட்டுமே இளைஞர்கள் செல்லவேண்டும் என்பதை மட்டுமே உணர்த்துகின்றது. அதையும் மீறி படிக்கச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு மட்டுமல்ல, பொது நிர்வாகமும் தலைகீழ்தான். இந்த விபத்து நடந்த பிறகு ‘த ஹிந்துஸ்தான்’ என்ற நாளிதழ் வெளியிட்ட புள்ளிவிவரம் என்ன கூறுகின்றது? டில்லி, போபால், லக்னோ, சண்டிகர், ஜெய்ப்பூர், உதய்ப்பூர், மண்டி, ரோஹதக், கான்பூர், பாட்னா, நொய்டா, காஜியாபாத், அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பல வட மாநிலப் பெரு நகரங்களில் 99 விழுக்காடு பயிற்சி நிலையங்கள் அனைத்தும் எந்த வித பாதுகாப்பு வசதியுமின்றி இயங்கி வருகிறது என்று உறுதிப்படுத்தி உள்ளது.
கோச்சிங் மாபியாக்கள்
போட்டித்தேர்வு என்பதே கோச்சிங் மாபியாக்கள் கொள்ளை லாபம் அடித்து அவர்களிடமிருந்து கோடிகளைக் கமிசனாகப் பெறுவதற்குத்தான். பயிற்சி மய்யங்கள் (கோச்சிங் சென்டர்கள்) மூலம் அரசுக்குக் கிடைக்கும் ஜிஎஸ்டி (GST) வரி வசூல் குறித்த தரவுகள். தேசிய ஊடக அறிக்கைகள் (NDTV Profit / Daily Pioneer) கூறுவது என்ன? இந்தியாவின் ஒட்டுமொத்த தனியார் பயிற்சி மய்யங்களின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆம், இந்தியாவில் மொத்த கல்விக்கான நிதி ஒதிக்கீட்டிற்கு ஒப்ப கோச்சிங் சென்டர்களின் வருவாய் உள்ளது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் (NEET-UG) தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கட்டணம் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் நேரடி வருவாய் சில நூறு கோடிகள் மட்டுமே. இந்தியாவின் ஒட்டுமொத்த தனியார் பயிற்சித் துறையின் (நீட், ஜேஇஇ, யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் சேர்த்து) தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது வரும் ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் கல்வி பட்ஜெட் எவ்வளவு? ஒன்றிய அரசின் 2024-2025 நிதிநிலை அறிக்கையின்படி, நாட்டின் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.1.20 லட்சம் கோடி ஆகும். (பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.73,008 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.47,619 கோடியும் ஒதுக்கப்பட்டது). ஆதாரம் (Sources): ஒன்றிய நிதி அமைச்சகம் (Ministry of Finance, Govt of India): ஒன்றிய பட்ஜெட் 2024-2025இன் அதிகாரப்பூர்வ கல்வித் துறைக்கான ஒதுக்கீடு விவரங்கள்:
கோவா போன்ற மாநிலங்களின் ஒட்டுமொத்த நிதி நிலை அறிக்கையை விட கோச்சிங் மாபியாக்களின் வருமானம் அதிகம் உள்ளது. இவர்கள் மூலம் வரும் கமிசன்கள் தான் பாஜக மாநில அமைச்சர்களுக்கும் ஒன்றிய அமைச்சர்களுக்கும் குறியாக உள்ளன. இதனால் தான் கோச்சிங்க் சென்டர்கள் புறாக் கூடுகளைப் போலும் தென் அமெரிக்க ஏழை நாடுகளின் சிறைக் கொட்டடிகள் போன்றும் பெருகி உள்ளன.
பலியாகும் இளந்தளிர்கள்
நீட் (NEET) நுழைவுத்தேர்வு மற்றும் அதன் பயிற்சி மய்யங்கள் ஏற்படுத்தியுள்ள கடுமையான மன அழுத்தம் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் இந்திய அளவில் பல இளம் மாணவர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். இது ஒரு மிக முக்கியமான சமூக மற்றும் மனநலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.ஊடகங்களின் தரவுகள், ஆய்வறிக்கைகள் மற்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அடிப்படையிலான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மருத்துவ இதழ்களின் (Medical Dialogues) தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் சுமார் 93-க்கும் மேற்பட்ட நீட் தேர்வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2023 மற்றும் 2024: இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அய்அய்டி-ஜேஇஇ (IIT-JEE) மற்றும் நீட் (NEET) மாணவர்களின் தற்கொலைகள் உச்சத்தை எட்டின. குறிப்பாக ராஜஸ்தானின் கோட்டா (Kota) பகுதியில் மட்டும் 2023இல் 26-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் அதிகப்படியாக 32 நீட் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தரவுகள் கூறுகின்றன. 2026இன் தற்போதைய நிலை என்ன? நீட் தேர்வு ரத்து, முறைகேடுகள் மற்றும் மறுதேர்வு அறிவிப்பு போன்ற தொடர் குழப்பங்களால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் இந்த பாதி வரைக்குள்ளேயே குறைந்தது 14-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடு முழுவதும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குறிப்பாக, தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு 37 நாள்களுக்குள் மட்டும் 12 மாணவர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
மாநில வாரியாக பாதிப்புகள்
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான தற்கொலைகளில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் பயிற்சி மய்யங்கள் இருக்கும் நகரங்கள் “தற்கொலைகளின் மய்யமாக” (Suicide Clusters) மாறியுள்ளதாகப் பேராசிரியர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவிலேயே அதிக அளவாக சுமார் 69% மாணவர்கள் பயிற்சி மய்ய நகரங்களில்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மிக நீண்ட போராட்டத்தை நடத்தி வரும் தமிழ்நாட்டில், தேர்வு பயம் மற்றும் தோல்வி பயத்தால் இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். (சமீபத்தில் கோவை பகுதியைச் சேர்ந்த அனுகீர்த்தனா என்ற மாணவியின் மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது).
பிற மாநிலங்கள்: டில்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், கருநாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலைகளுக்கான முதன்மைக் காரணங்கள் என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன.
பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு: தங்களின் பிள்ளைகள் ‘எப்படியாவது மருத்துவர் ஆக வேண்டும்’ என்று பெற்றோர் செலுத்தும் கடுமையான அழுத்தம். பயிற்சி மய்யங்களின் வணிகமயமாக்கல், மாணவர்களை மதிப்பெண்களின் அடிப்படையில் பிரித்து வைப்பது (Batch Segregation), வாராந்திரத் தேர்வுகளின் மதிப்பெண்களைப் பகிரங்கமாக வெளியிடுவது போன்றவை மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன.
வீட்டை விட்டுத் தூரமாக வந்து தங்கி, 14 முதல் 16 மணி நேரம் வரை தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் தனிமை மற்றும் மனச்சோர்வு. அண்மைக்காலமாக நடக்கும் வினாத்தாள் கசிவு (Paper Leak), தேர்வு ரத்து, மற்றும் திடீர் மறுதேர்வுகள் போன்ற காரணங்கள் மாணவர்களின் நீண்டகால உழைப்பை கேள்விக்குறியாக்கி, அவர்களைக் கடும் விரக்திக்கு தள்ளுகின்றன. இவர்களுக்கு மன விடுதலை எப்போது?
