நாளை சின்னாளப்பட்டியில் சந்திப்போம் – வாரீர்!

7 Min Read

நெருப்பாற்றில் எதிர்நீச்சல், இயக்கத் தோழர்களின் ஓயா உழைப்பு,
வன்முறை சந்திப்புகள், சிறைவாசங்களால் வளர்க்கப்பட்ட இயக்கமே நமது கழகம்!
தந்தை பெரியார் சந்தித்த எத்தனை எத்தனை எதிர்ப்புகள், செருப்பு வீச்சுகள்–
இந்த வரலாறுகளையெல்லாம் இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டாமா?

நமது இயக்கம் எத்தனை எத்தனை எதிர்ப்புகளை, வன்முறைகளை சந்தித்து வளர்ந்து வந்திருக்கிறதுசாதித்திருக்கிறது. சின்னாளப்பட்டியில் தந்தை பெரியார் பேசிய கூட்டம் எதிரிகளால் எத்தகைய வன்முறைக்கிடையே நடந்தது. இவற்றைப் பற்றியெல்லாம் இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டாமா? அதே சின்னாளப்பட்டியில் நாளை பேசுகிறேன்வாரீர் தோழர்களே! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஒரு  சிற்றூராகத் திகழ்ந்த, கைத்தறி நெசவுக்குப் பெயர் போன சின்னாளப்பட்டி, தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தின் பேரூராகும்.

தந்தை பெரியாருக்கு அமோக வரவேற்பு!

100 ஆண்டுகளுக்குமுன் – சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கினார். அதற்குமுன் 1916 இல் அரசியல் பிரிவாகத் தொடங்கிய நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் (சேலத்தில்) இணைந்து (1944) திராவிடர் கழகமாக மாறிய பிறகு, இரண்டு ஆண்டுகளில், 1946 இல், திராவிடர் கழகம் சார்பில், மதுரை ஜில்லாவில் தந்தை பெரியார் சுற்றுப்பயணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, சின்னாளப்பட்டியில் 16.1.1946 இல் தந்தை பெரியாருக்கு அமோக வரவேற்பை அளித்து – தனிக் காரில் தந்தை பெரியார் அவர்களை சின்னாளப்பட்டித் தெருக்கள் வழியே பெரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது, வழிநெடுக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொதுக்கூட்டம் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது. (ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது என்பது அப்போதைய ‘‘அதிசயச் செய்தி’’ அம்சங்களில் ஒன்று!)

குற்றால அருவிபோல் கொட்டிய தந்தை பெரியாரின் சொற்பொழிவை பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு, சுவைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்டு பொறுக்காத அவ்வூர் காங்கிரஸ்காரர்கள் என்ற பெயரில் காலிகளும், கூலிகளும் தூரத்தில் நின்று, தொடர்ந்து கூச்சலிட்டு மக்களை தந்தை பெரியார் பேச்சைக் கேட்கவிடாமல்  விஷமம் செய்துகொண்டே இருந்தனர். தந்தை பெரியார் அவர்கள், எதிர்ப்பைக் கண்டவுடன், மேலும் உற்சாகமடைந்து, மக்களிடம் உணர்வுப்பூர்வ உரையை முன்பைவிட விறுவிறுப்பாக்கிப் பேச, அன்றைய காங்கிரஸ் கட்சிக் காலிகள், கற்களை எடுத்து சரமாரியாக வீசி, மக்களிடையே பேசிய தந்தை பெரியாரையும் மேலும் பேசவிடாமல் செய்ய முயற்சித்தனர்.

தந்தை பெரியார் என்ற மகத்தான எதிர்நீச்சல் ஏந்தல் சிறிதும் சளைக்காமல், தலையில் சால்வையை முண்டாசாகக் கட்டிக்கொண்டு, பேச்சைத் தொடர்ந்தார். ‘‘எல்லோரும் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு கேளுங்கள்’’ என்று கூறினார்.  தந்தை பெரியார் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்ததால், காலிகள் மேலும் கூச்சலிட்டு, கற்களை சரமாரியாக வீசினர். அங்கு குறைந்த எண்ணிக்கையில் காவலுக்கு வந்த ஒரு சப்–இன்ஸ்பெக்டர், 2 கான்ஸ்டபிள்கள், அதுவும் வெளியூரிலிருந்து வந்தவர்களால், இதனைத் தடுக்க முடியாத பரிதாப நிலை!

கலவரம் அதிகமாகவே, சப்–இன்ஸ்பெக்டர் மேடைக்கு வந்து, தந்தை பெரியாரிடம், ‘கலவரம் அதிகமாகிறது; எங்களால் சமாளிக்க (கண்ட்ரோல்) முடியவில்லை; கூட்டத்தைக் கலையுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டபோது, ‘‘அதை எழுதிக் கொடுங்கள், பிறகு நான் முடிக்கிறேன்’’ என்றார் தந்தை பெரியார்.

ஒலி பெருக்கியில் அவரே, பெரியாரை வேண்டிக் கொள்கிறார். ஒரு மணிநேரப் பேச்சுக்குப் பின், தந்தை பெரியார் தமது பேச்சை நிறுத்தினார். அவரது வலது முழங்கைப் பகுதியில் கல்வீச்சால் அடிபட்டுப் பெரிதும் வீங்கி விட்டது. பிறகு, பல காலம் அந்தப் பாதிப்பு தந்தை பெரியாருக்குத் தொடர்ந்தது!

இது நடைபெற்று 80 ஆண்டுகள் ஆகிறது! அதன் பிறகு, அவ்வூரே, ‘‘பெரியார் மயம்; பெரியார் வசம்’’ என்றாகிவிட்டது!

அவ்வூர் கழக வீரர்கள் – திசையெட்டும் தொழிலுக்குச் செல்லும் பழக்கமுடையவர்கள்.

சென்ற ஊர்களில் எல்லாம் இயக்கம் வேர் ஊன்ற உழைப்பார்கள் – ஒரு பக்கம் தொழில் நடத்திக்கொண்டே. எடுத்துக்காட்டாக குன்னூரில் தோழர் கம்பர், சேலத்தில் ஜவகர், அய்தராபாத் ம.வீ.கிருஷ்ணன், விருதுநகரில் தோழர் நல்லதம்பி போன்ற பலரும் – இப்படிப் பட்டியல் நீளும்!

‘சின்னாளப்பட்டிகள்’ நமக்கு சீலத்தையும்,
சீர்மைப் பயணத்தையும் எடுத்துக்காட்டுகின்றன!

‘‘எதிர்நீச்சல் தான் என்றும் நமது கொள்கை வயப்பட்ட லட்சியப் பயணம்’’ என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்திட, கழகம் வளர்க்க, கொள்கையைப் பெருக்க, எதிர்ப்புக் கண்டு அஞ்சாது, அதை நம் வயலுக்கான ‘உரம்’ என்று கருதி உழைக்க, ‘சின்னாளப்பட்டிகள்’ நமக்கு சீலத்தையும், சீர்மைப் பய ணத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. சேலம் 1944 மாநாட்டிற்கு சில மாதங்கள் முன்பே, கடலூர் – திருபாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு; (நினைவு… அய்யா, அம்மாவை நான் சந்தித்த முதல் அனுபவம் அங்கு) அம்மாநாட்டில், நேரடி எதிர்ப்புக் கூச்சல்கள், மாலையில் மழை, தந்தை பெரியார் பேச்சு முழுமையடைந்து, கைரிக்‌ஷாவில், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் N.T.) ரயில்வே நிலையத்திற்குத் திரும்பியபோது, செருப்பு வீச்சு சம்பவம் நடைபெற்றது (82 ஆண்டுகளுக்கு முன்பு). பிறகு அதே இடத்தில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள்  பங்கேற்க 1972இல், அய்யாவின் முழு உருவச் சிலை திறப்பு விழா – ஊர்வலம் நடத்தி, செருப்பு வீசியதற்குப் பதில், பத்தாயிரம் ரூபாய் மக்கள் நன்கொடை தந்து, கல்வெட்டுடன் சிலை திறந்து, கழகம் வளர்ந்த எதிர்நீச்சல் அங்கு! (அடுத்து திறந்தவெளி மாநாடு அங்கே).

அதுபோலவே, 1945 இல் புதுச்சேரியில் திராவிடர் கழகத் தொடக்க விழா. புதுச்சேரி ஒதியஞ்சாலை கொட்டகையில் ஒரு சம்பவம் – எதிர்நீச்சல்!  (கலைஞர் தாக்கப்பட்டு, சாக்கடைப் பகுதியில் அடிபட்டுக் கிடந்த கொடுமை.) மேலும் அங்கே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (வாத்தியார் என்று அழைக்கப்பட்டவர்) மீது செருப்பு வீச்சு என்ற எதிர்நீச்சல்! அதையும் தாண்டி, இன்று புதுவை மாநில திராவிடர் கழகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது (அடுத்து அங்கு ஒரு நிகழ்ச்சி).

1946 இல் மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு வைகை ஆற்று மணலில் – பெருமளவில் பந்தல் போட்டு, முதல் நாள் வெற்றியுடன் (கருஞ்சட்டை அணி தொடங்கிய ஓராண்டில்) வைத்தியநாத அய்யர் என்ற பார்ப்பனர் சூழ்ச்சியின் காரணமாக, காவல்துறையை ஏவிவிட்டு, கருஞ்சட்டைப் படை மாநாட்டின் பந்தல் கொளுத்தப்பட்டது. மாநாட்டுக்கு வந்த கருஞ்சட்டையினர்மீது காங்கிரஸ் காலிகள், பக்தர்கள் வேஷத்தில் அபாண்ட பழி கூறி, கழகத் தோழர்களைத் தாக்கி, கலவரம் செய்து, இரண்டாம் நாள் மாநாடு நடைபெற முடியாமல், செய்த நிலை.

அந்த எதிர்நீச்சலையும் தாண்டித்தான் இன்று தி.க. – தி.மு.க. என்று மதுரையில் பெரு வளர்ச்சி!

எங்கும் எதிர்நீச்சல், வெற்றி, திறந்தவெளி மாநாடு என்று நெருப்பாற்றில் நீந்தி, இயக்க வளர்ச்சி!  இந்த நூறு ஆண்டுகளில், மக்கள் இயக்கமாகி, திராவிட ஆட்சியில் கட்டிய பலமான கல்விப் பேருரு, சமூகநீதி ஊற்று, மகளிர் முன்னேற்றம் ஆகிய சமூக மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. வியர்வை, ரத்தம், உழைப்பு, சிறைவாசம் ஏற்று கழகத் தோழர்களால் எப்படி இயக்கம் வளர்க்கப்பட்டது என்பதை வரலாறு அறிய வாய்ப்பற்றத் தலைமுறைக்கு வகுப்பு எடுப்பதுபோல, விளக்கிட பலப்பல ‘‘எதிர்நீச்சல் வெற்றித் திறந்தவெளி மாநாடுகளை’’ தமிழ்நாடெங்கும் நடத்தி, ‘‘திராவிடம் வெல்லும் – வரலாறு அதை சொல்லும்’’ என்று காட்டுவோம், வாரீர்! வாரீர்!

இந்த வரிசையில் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – முதல் திறந்த வெளி மாநாடு, 26.6.2026 மாலை 5 மணிக்கு – சின்னாளப்பட்டியில் சந்திப்போமா?

 

தலைவர்,

கி.வீரமணி

25.06.2026                                                                                                                                                                                                                                                          திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *