சென்னை, ஜூன் 24– அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 181 அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1 லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களுக்கு மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. அந்தந்த அரசு கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவிகள் நேரில் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன.
கலந்தாய்வு நீட்டிப்பு
சில கல்லூரிகளில் கலைப் படிப்புகளுக்கு சில நாட்களும், அறிவியல் படிப்புகளுக்கு சில நாட்களும் என மாணவ-மாணவிகள் தனித்தனியாக வரவழைக்கப்பட்டு இடங்களை நிர்வாகம் ஒதுக்கியது. முதலில் 18ஆம் தேதியுடன் கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், இடங்கள் நிரம்பாததால், மேலும் கலந்தாய்வுக்கான தேதி நீட்டிக்கப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
தாமதம்!
இப்படியாக கலந்தாய்வு தொடங்கி நடந்தாலும், இதுவரை 43 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்தம் உள்ள1 லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களில், 71 ஆயிரத்து 502 இடங்கள் (56.32 சதவீதம்) மட்டுமே நிரம்பி இருக்கின்றன. அதில் 43 ஆயிரத்து 970 மாணவிகள், 27 ஆயிரத்து 514 மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் அடங்குவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காட்டிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்கள் நிரம்புவதில் தாமதம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் முடிவு வெளியானதுமே தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கிவிடுகின்றனர். ஆனால் அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவுக்கும், அதனைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
தனியார் மயத்தை நோக்கிச்செல்கிறதா த.வெ.க. அரசு?
கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட டெண்டர் தனியார் நிறுவனத்தின் கொள்முதலுக்காக ரத்து!
சென்னை, ஜூன் 24- சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தற்போதைய தவெக அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த ஆட்சியில், சென்னை மாநகரப் பகுதியில் பயணிகள் வசதியை மேம்படுத்தும் நோக்கில் கூடுதலாக 500 புதிய மின்சார பேருந்துகளைக் (Electric Buses) கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான டெண்டரும் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அந்த டெண்டரை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த டெண்டர் ரத்தைத் தொடர்ந்து, சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் புதிய மாற்றுத் திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரசு நேரடியாகப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, தனியார் நிறுவனங்கள் மூலம் 625 புதிய பேருந்துகளை வாங்கி, அவற்றை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கு தவெக அரசு திட்டமிட்டு வருவதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் இந்த புதிய முடிவு, சென்னை மாநகர போக்குவரத்து தனியார் கையில் செல்லும் முதல் படியாக இந்த த.வெ.க. அரசு எடுத்துள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
