லா பாஸ், ஜூன் 23- தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 50 நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்கள் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளை முழுமையாக முடக்கியதால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே திடீரென நின்றன.
இதனால் ஒட்டுமொத்த நாடும் கடுமையான தட்டுப்பாட்டால் நிலைகுலைந்தது. இந்நிலையில், பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததால், அதிபர் ரோட்ரிகோ பாஸ். அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதாக அவர் அறிவித்தார்.
இந்த அவசரநிலை சட்டம், சாலை மறியல்களை அகற்றி நாட்டின் ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரத்தை வழங்குகிறது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிபர் எச்சரித்துள்ளார். இதனால் பொலிவியா முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
உக்ரைன் டிரோன் தாக்குதல்
கிரிமியாவில் பெட்ரோல் விற்பனை நிறுத்தம்
கிரிமியாவில் பெட்ரோல் விற்பனை நிறுத்தம்
மாஸ்கோ, ஜூன் 23- உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான டிரோன் தாக்குதல்களால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்யா நியமித்துள்ள கிரிமியா ஆளுநர் செர்ஜி அக்ஸியோனோவ் கூறுகையில், ஓரிரு நாள்களுக்கு முன் உக்ரைன் நடத்திய ஆளில்லாத டிரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 28 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களால், அரசு சாராத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மட்டும் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்றார். கிரிமியாவில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதால் எரிபொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு பிராந்தியம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. உக்ரைனிடம் இருந்த கிரிமியாவை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது.
இலங்கையில் தீவிரமாகப் பரவும் டெங்கு.!
44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கொழும்பு, ஜூன் 23- இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 44, ஆயிரம் பேருக்கும் மேற்பட் டோர் அந்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு அந்நாட்டில் அய்ந்து குழந்தைகள் உட்பட 28 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆணையின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.
இலங்கை தலைநகரமான கொழும்புவில் மட்டுமே அதிகபட்சமாக சுமார் 11,000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொழும்பு தவிர்த்து கம்பஹா, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, கண்டி, அம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் குருநாகல் உள்ளிட்ட நகரங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதே மிக மோசமான பதிவாக இருந்தது. தற்போதைய பரவல் வேகத்தை பார்த்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் 2010-ஆண்டு பதிவான டெங்கு பரவலின் மோசமான நிலையை மீண்டும் எட்ட கூடும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
