குருப் 1 தேர்வில் வென்று தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித் துறையில் துணை இயக்குநராக தேர்வாகியுள்ள ஜெனிபர் கும்பகோணத்தின் கருப்பூரைச் சேரிந்தவர்.
அவரின் குடிமைப் பணிக்கான விதை உருவாக காரணம் தமிழ்நாட்டை உலுக்கிய கும்பகோணம் தீ விபத்து. 94 இளம் பிஞ்சுகளின் உயிரைக் குடித்த இந்த சம்பவம் நடந்த போது ஜெனிபர் 4-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் ஜெனிபர்.
சம்பவத்தின் தாக்கத்திலிருந்து வெளிவர போராடிக் கொண்டிருந்த போது அப்போதைய தஞ்சையின் ஆட்சியரும் இன்றைய மின்வாரிய தலைவருமான ராதாகிருஷ்னன் இ.ஆ.ப அவர்களின் நிவாரண பணிகளின் தாக்கமாக குடிமை பணிக்கு வர வேண்டுமென உறுதி பூண்டார்.
கிட்டதட்ட 10 ஆண்டுகள் தொடர் முயற்சி மற்றும் பெற்றோர், நண்பர்களின் ஊக்கத்தால் தன்னால் இந்த இலக்கை அடைய முடிந்தது என்கிறார். அதற்கு ‘நான் முதல்வன்’ திட்டம் அவருக்கு உதவியிருக்கிறது. அதிலும் முக்கியமாக அவரின் தாய் பெண்பிள்ளை, திருமணம் என சுற்றத்தாரின் நச்சரிப்புகளையும் தாங்கி தன் கனவுக்கு துணையாக இருந்ததாக கூறுகிறார். கடினமான குடும்ப சூழலிலும் இவரின் கனவுக்கு துணை நின்ற தாய் சுஜாதா அவர்களின் மன உறுதி போற்றத்தக்கது.
கும்பகோணம் தீ விபத்தை நினைவுகூரும் ஜெனிபர் தன் பொறுப்பை சிறப்பான மற்றும் பாதுகாப்பான பள்ளி கட்டமைப்புகளை கிராமப் பகுதிகளில் உருவாக்க உறுதி பூண்டுள்ளார். மிகச் சிறிய வயதிலேயே கொடிய விபத்தை சந்தித்தும் அதையே உரமாக கொண்டு சாதித்த ஜெனிபரின் வெற்றி துன்பங்களை கடந்து வெல்ல துடிக்கும் அனைவருக்கும் முன்னுதாரணம்.
