கலைஞர் பன்னாட்டு அரங்கத்தைச்
சட்டமன்ற வளாகமாக்க அரசு ஆலோசனை
சென்னை, ஜூன், 22 கிழக்குக் கடற்கரை சாலை முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை புதிய சட்டமன்ற வளாகமாக மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் வந்து செல்வதற்கு வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாபெரும் அரங்கம்
தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த கலைஞர் பன்னாட்டு அரங்கத்தில், 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு கூடம் மற்றும் 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி கூட்ட அரங்கம் உள்ளிட்ட வசதிகள் அமைகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் நடப்பாண்டு டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு
இந்த அரங்க கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 20.6.2026) நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றமாக மாற்றத் திட்டம்?
பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்படி, “முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வந்து செல்ல வசதியாக, கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை சட்டமன்ற வளாகமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் எடுக்கும் முடிவைப் பொறுத்து, இந்த கட்டடத்தில் சட்டமன்ற கூட்டம் மட்டும் நடத்தப்படலாம். அடுத்தாண்டு ஜனவரியில் ஆளுநர் உரை இங்கு நிகழ்த்தப்படலாம்” என கூறப்படுகிறது.
தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை முழுமையாக இடமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா அல்லது சட்டமன்ற கூட்டங்களை மட்டும் இங்கு நடத்துவதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முதலமைச்சரின் வசதிக்காக தலைமைச் செயலகத்தை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டால் அது அரசியல் விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
