மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: நாகலாந்தின் துணிச்சல் த.வெ.க.வுக்கு வருமா? கோவி.லெனின் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்

4 Min Read

தமிழ்நாட்டில் 1000 சி.பி.எஸ்.இ. பள்ளி களுக்குத் தடையில்லாச் சான்றை த.வெ.க. அரசு வழங்கியிருப்பதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு ஒன்றின் சார்பில் தலைமைச் செயலகத்திலேயே பேட்டி கொடுக்க வைத்து அரசியல் செய்கிறது ரீல்ஸ் அரசாங்கம். அய்ந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக பேச வைப்பதாக நினைத்துக்கொண்டு, தன்னுடைய கோழைத்தனத்தை த.வெ.க. அரசு வெளிப்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ, என்பது ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளாகும். அதற்கு தடையில்லாச் சான்றிதழை வழங்கக்கூடிய அதிகாரம் தற்போது மாநில அரசுகளுக்குக் கிடையாது. எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய தீயணைப்புத்துறை சான்றிதழ் உள்ளிட்டவைதான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் தேவை. இதைத்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தடையில்லாச் சான்றிதழ் என்று த.வெ.க. அரசு உருட்டியது.

ஒன்றிய அரசு தனது பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டாயமாக மூன்று மொழிகளைக் கற்றுத் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் முதல் மும்மொழிக் கட்டாயம் என்று கடந்த மே மாதமே ஒன்றிய அரசு உறுதியாக அறிவித்துவிட்டது. த.வெ.க. அரசு சார்பிலான ஆளுநர் உரையில், மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என அறிவித்துவிட்டு, ஹிந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கி விட்டோம் எனப் பெருமைப் பீற்றிக் கொள்வது அதன் மோசடித்தனத்தையே காட்டுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுடன் சேர்த்து, மேலும் 1000 பள்ளிகளில் ஹிந்தியையும் சமஸ்கி ருதத்தையும் திணிப்பதற்கு கொல்லைப்புற வாசலை திறந்து விட்டிருக்கிறது இரட்டை வேட நடிகரான விஜய் தலைமையிலான அரசு.

ஹிந்தித் திணிப்புக்குத் தமிழ்நாட்டில் இட மில்லை என்று இருமொழிக் கொள்கையை நிலைநாட்டியது பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க ஆட்சி. கடந்த 60 ஆண்டுகளில் ஆட்சிகள் மாறிய போதும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பதே உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த உறுதியைக் குலைத்து, மூன்றாவது மொழியாக இந்தியையும், அதனைத் தொடர்ந்து சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தன்னால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கவே முடியாது என்பதால், தனக்கான அடிமைகள் கிடைக்கும்போது அதை நிறைவேற்ற முயற்சிப்பது அதன் இயல்பு. அதை முறி யடித்தது ‘திராவிட மாடல்’ அரசு. ஆனால், இப்போது மும்மொழிக் கொள்கைக்கு பின்புற வாசலை திறந்து வைத்து, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கானத் தடையில்லாச் சான்றிதழ் குறித்து பெருமை பேசுகிறது த.வெ.க. அரசு.

மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்கிற தமிழ்நாட்டின் உறுதியான மொழி மரபை நீர்த்துப் போகச் செய்யும் வேலையை விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாக லாந்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் முதல்வர்கள் பலர் இணைந்து, தங்கள் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது சரியல்ல என்றும், குறிப்பாக சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பது சாத்தியமல்லஎன்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளனர் (ஆதாரம்: 3-language policy not viable, say CBSE schools in Nagaland- The Hindu dated 20-.6-.2026)

அந்தக் கடிதத்தில், நாகலாந்து மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பெரிய பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 17 வகையினர் இருக்கி றார்கள் என்பதையும், அவர்களுக்குள் டஜன் கணக்கான உட்பிரிவுகள் இருப்பதையும், ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் மட்டுமே அறிந்த சொந்த மொழிகளையும், பேச்சு வழக்கிலான மொழிகளையும் மட்டுமே பேசுவதால், நாகலாந்தில் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாகத் திணிப்பது சாத்தியமல்ல என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நாகலாந்து மாநிலத்தில் நகரப்பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் பல மொழிகளைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். தங்கள் தாய்மொழிகளாக ஆஓ, அங்கமி, சுமி, லோத்தா, கொன்யாக், சங், போம், சீலியாங், போச்சுரி,ரெங்மா, திக்கிர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தனித்தனி பழங்குடி மொழிகளைப் பேசுகிறார்கள் மாணவர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம், மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் போல நாகலாந்து மாநிலத்திற்கென, தனிப்பட்ட தாய்மொழி கிடையாது. அவரவர் பழங்குடி மொழியுடனான இணைப்பு மொழியாக அங்கும் ஆங்கிலம்தான் இருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க அரசு நாகலாந்தில் சமஸ்கிருத மொழியை மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் திணிக்காமல், நாகலாந்தை ‘கூட்டு மொழிகளின் பகுதி’ என அறிவித்து தங்கள் மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்என்று அம்மாநில சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் முதல்வர்கள் ஒன்றிய பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர்.

இருமொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளின் நிலைப்பாடும் இதுதான். அது போலவே, தமிழ்நாட்டின் தனித்துவமான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருத்துக் கல்விக்கான அனுமதி ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பதையும் திராவிட மாடல் அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்தியது.

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலை நாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. ‘நீட்’ விலக்கு விவ காரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது. நாகலாந்து மாநில சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து துணிச்சலாகக் கடிதம் எழுதுகிறார்கள். த.வெ.க அரசோ மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு அனுமதி கொடுத்துவிட்டதாக தனியார் பள்ளி களின் சங்கங்களைப் பேச வைக்கிறது. நாக லாந்து பள்ளி முதலமைச்சர்களுக்குள்ள துணிச்சல் தமிழ்நாட்டை ஆளும் மாநில முதல மைச்சருக்கு இருக்கிறதா?

– நன்றி: ‘முரசொலி’, 22.6.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *