திருச்சூர், ஜூன் 21- பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாகக் குறைக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இதுகுறித்து திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பின்வருமாறு விளக்கமளித்தார்:
குறைந்த அளவிலான விலை உயர்வு
பன்னாட்டுச் சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.3.94 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. உடனடி விலைக்குறைப்பு சாத்தியமில்லை. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது என்பதற்காக, இந்தியாவில் உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைக்க முடியாது.
அரசுக்கு இழப்பு
போர் தொடங்கியதில் இருந்தே எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அந்தப் பாதிப்பை ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்டது. இதனால் அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் முந்தைய இழப்புகளை ஈடுசெய்ய வேண்டியுள்ளதால், தற்போதைக்கு எரிபொருள் விலை குறைப்புக்கு வாய்ப்பில்லை என்பதை அமைச்சர் தனது பேச்சின் மூலம் கூறினார்.
