குடியரசைப் பாதாளத்திற்கு இழுக்கும் ஜனநாயகம்!

இந்திய ஜனநாயகம் பல விசித்திரமான சந்தர்ப்பங்களைச் சந்தித்திருக்கிறது. அவற்றுக்கெல்லாம் சவால் விடும் விசித்திரங்கள் அண்மைக்காலமாக அரங்கேறிக் கொண்டுள்ளன. ஆள்வோருக்குப் போதுமான இடங்கள் கிடைக்காவிட்டால், மேலும் சில கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அவர்களை அமைச்சரவைக்குள் வைத்துக் கொண்டோ, அல்லது வெளியிலிருந்து ஆதரவு பெற்றோ ஆட்சியை நடத்துவது இயல்புதான்! ஆனால், அடுத்த தேர்தல் வரை இப்படியே ‘நித்திய கண்டம்; பூரண ஆயுசு’ என்று இருந்தால், எல்லாவற்றுக்கும் கூட்டணிக் கட்சிகளையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் தலையசைப்புக்கும், அன்றாடச் செய்தியாளர் சந்திப்பில் உதிர்க்கும் கருத்துகளுக்கும் ‘இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம்’ காண்பதற்கே தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டிய அளவிற்கு நிலைமை இருப்பதால், எப்படியேனும் முழுமையான பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எல்லா வேலைகளையும் ஆள்வோர் செய்யத் தொடங்குவது அண்மைக்கால ‘டிரெண்ட்’டாகி இருக்கிறது! அதற்காகக் கட்சிகளை உடைத்தல், பிற கட்சிகளிலும், கூட்டணிகளிலும் வெற்றி பெற்றவர்களைப் பதவி விலகச் செய்து தம் கட்சியில் இணைத்து வெற்றி பெறச் செய்தல், அல்லது வேறு பல வசதிகளைக் கொடுத்தல் என்று ஜனநாயகத்தின் கேலிக் கூத்துகள் நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ‘இவற்றைத் தான் அன்றாடம் செய்திகளில் பார்க்கிறோமே’ என்று அலுத்துக் கொள்ளாதீர்கள்! நாம் இப்போது பேசுவது தேசிய அரசியல் பற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஏற்கெனவே அக் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்திருந்த சுவேந்து அதிகாரி,  பா.ஜ.க. சார்பாகவே போட்டியிட்டு தனிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சராகிவிட்டார். ஆனால், அதன்பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது பா.ஜ.க! சட்டமன்றத்தில் தான் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருக்கிறதே, பிறகு எதற்கு என்றால், சட்டமன்ற உறுப்பினர்களை அல்ல; அது குறிவைத்தது நாடாளுமன்ற உறுப்பினர்களை!

திரிணாமூல் காங்கிரஸின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக் கட்சியின் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மம்தாவுடன் முரண்பட்டுக் கொண்டு தனி அணியாயினர். 2019-இல் 22 இடங்களில் வெற்றிபெற்றிருந்த அக் கட்சி 2024 தேர்தலில் 29 இடங்களில் மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் முக்கிய இடம்பிடித்தது. ஒருவர் (பஷிராத் தொகுதி) இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னும் அங்கு இடைத் தேர்தல் நடத்தவில்லை தேர்தல் ஆணையம்! அதனால் இப் போது உறுப்பினர் எண்ணிக்கை 28. மாநிலங்களவையில் 13 உறுப்பினர்கள் அக் கட்சிக்கு இருந்தனர். அதில் கடந்த வார நிலவரப்படி(!) மூன்று உறுப்பினர்கள் பதவி விலகிவிட்டனர். இரண்டிலுமாகச் சேர்த்து தான் 20 பேர் இப்போது தனித்து ககோலி கோஷ் தஸ்டிதார் என்ற பெண் உறுப்பினர் தலைமையில் அணிவகுத்து நின்றனர். இதில் மூவர் இஸ்லாமியர்; அறுவர் பெண்கள்.

கடந்த திங்கள் அன்று (ஜூன் 15) மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்துவிட்டு, வெளியில் வந்தவர்கள் இது வரை அறியாத ஒரு புதிய வகை அறிவிப்பைச் செய்தனர். ஏறத்தாழ 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள கட்சியிலிருந்து விலகி, தனிக் கட்சியும் தொடங்காமல், பெரிய கட்சிகளுடனும் இணையாமல், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப் பட்ட திரிபுரா கட்சியான “இந்திய தேசியவாதக் குடிமக்கள் கட்சி”யுடன் இணையப் போவதாக அறிவித்தனர். அக் கட்சி திரிபுராவிலும், மேகாலயாவிலும் அரசியல் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட கட்சி. அதற்கும் மேற்கு வங்காளத்திற்கும் உள்ள  தொடர்பு ஒன்றே ஒன்று தான். அம் மாநிலத்திலுள்ள ஹவுரா மாவட்டத்தின் சங்கரையில் நகரின் ஒரு கட்டடத்தைத் தன் முகவரி என்று பதிவு செய்துள்ளதைத் தவிர, வேறு ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது. கடந்த திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் மட்டும் போட்டியிட்டுத் தோற்றது அந்தக் கட்சி.

அவ்வளவு சிறிய, புதிய, அதுவும் திரிபுராவைச் சேர்ந்த இந்திய தேசியவாதக் குடிமக்கள் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்ட  மேற்கு வங்கத்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்களான ககோலி குழுவினர், ஜோதிப் பிரகாஷ் சாட்டர்ஜி என்பவரை அதன் தலைவராக அறிவித்தனர். தங்கள் கட்சி  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

அக் கட்சியின்  உண்மையான நிறுவனத் தலைவரான ஷெவ்லி குண்டு என்பவர், தான் அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதற்கு முதல்நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அக் கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளரான சாந்தனு டே  (திரிபுராவில் அவர்தான் அக் கட்சியை நிர்வகித்துவந்தவராம்) என்பவர், “புதிய தலைவர் குறித்த எந்தத் தகவலும் தனக்குத் தெரியாது. ஜோதிபிரகாஷ் சாட்டர்ஜி யார் என்று எனக்குத் தெரியாது. நான் மிகவும் கடினமாக உழைத்த இந்தக் கட்சியில்   என்ன நடக்கிறது என்பது பற்றியும் எனக்கு எந்தத் தகவலும் இல்லை. பெரிய தலைவர்கள் எங்களுடன் இணைவதில் மகிழ்ச்சிதான், ஆனால் அவர்கள் இதுவரை எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. நாங்கள் எந்தத் தகவலும் தெரியாமல் இருட்டில் வைக்கப்பட்டிருப்பது எனக்கு ஏமாற்றமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

நடந்திருப்பது இது தான்! புதிதாக ஒரு போர்டு வைக்காமல், ஏற்கெனவே நட்டத்தில் இருந்த ஒரு ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனியை விலைக்கு வாங்கி, ஒரு ‘டம்மி’ தலைவரையும் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்கள்.  இதுதான் ‘இன்றைய ஜன(பண)நாயக நிலவரம்’! பா.ஜ.க.வுக்கு வேண்டியதும் இதுதான்! ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தாலும், இந்திய அரசியலமைப்பை மாற்றும்  வகையிலான  முக்கியமான பல சட்டத் திருத்தங்களைப் பா.ஜ.க.வால் நிறைவேற்ற முடியவில்லை. தொகுதி மறுசீரமைப்பு, நாடாளுமன்ற இடங்கள் அதிகரிப்பு என்று அது கொண்டு வந்த மூன்று சட்டங்கள், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டதைப் பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, விக்சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான், காப்பீட்டுச் சட்டங்களில் திருத்தம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றக் காத்திருக்கிறது பா.ஜ.க.!  இந்தியாவின் இறையாண்மை, மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசு என்ற தன்மையை மாற்றும் போது எந்தவிதத் தடங்கலும் இருக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்.சும் – பா.ஜ.க.வும் கணக்குப் போடுகின்றன. அடுத்து அகிலேஷின் சமாஜ்வாடி கட்சிக்கும் மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.

ஜனநாயகச் சந்தையை நினைத்துச் சிரிக்கும் சூழல் இப்போது இல்லை – பரிதாபப்படும் அளவுக்குப் பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம் – இந்தியக் குடியரசையும் இழுத்துக் கொண்டு!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *