“ஆசிரியர்கள் பகுத்தறிவுச் சிந்தனையுடன் இருக்க வேண்டும்” என்றார் பெரியார். காரணம் மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு அவர்களிடம்தான் இருக்கிறது. இதைக் கருத்தியலாக மட்டும் பெரியார் முன்வைக்காமல், நடைமுறையிலும் செயல்படுத்தினார். பெண்கள், ஆண்கள் இருவருக்குமே ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைத் தோற்றுவித்தார். அந்த வகையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உருவாகினர்.
இந்த வார நேர்காணலில் நாம் பார்க்க இருக்கும் அப்படியான ஓர் ஆசிரியர்தான் சிவந்த பெருமாள். இயற்பெயர் பழுத்த ஆன்மிகமாக இருந்தாலும், சமூகம் அறிந்த புனைப்பெயர் அறிவொளி! வாருங்கள்… இந்த வாரம் புதுக்கோட்டைப் பக்கம் போய் வருவோம்.
அய்யா வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்!
பேராவூரணி வட்டம், கொத்தமங்கலம் பகுதியில் 1949இல் பிறந்தேன். தற்போது வயது 77 ஆகிறது. பெற்றோர் பெயர் அம்மாகண்ணு – முத்தையா. இளம் வயதிலேயே தந்தை மறைந்துவிட்டார். எங்கள் தாய் சிரமப்பட்டு எங்களை ஆளாக்கினார். கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தனக்குக் கல்வி இல்லையென்றாலும், பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அந்த வகையில், கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, அருகில் இருந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை 1969-1974இல் முடித்தேன். பிறகு எம்.எட்., பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றேன். இதற்கிடையில் பட்டயப் படிப்பில் சேர்ந்து மலையாளமும் கற்றேன். நான் முதன்முதலில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தது புதுக்கோட்டை மாவட்டம், மரமடக்கி கிராமத்தில் தான்! அதன் பிறகு மார்த்தாண்டம் அருகில் நட்டாளம் எனுமிடத்தில் பணி செய்தேன். அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான் கோட்டைக்குப் பணி மாறுதல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர்களுக்கான விரிவுரையாளராகப் பணியாற்றினேன். இறுதியாக நாமக்கல் மாவட்டத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி செய்தேன். அந்தக் கால கட்டத்தில் நல்லாசிரியர் விருதும் பெற்றேன். 2007 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன்.
பெரியாரியச் சிந்தனை தங்களுக்கு எப்பொழுது அறிமுகமானது?
காரைக்குடியில் படிக்கும்போது, அங்கிருந்த காந்தி திடலுக்குப் பெரியார் வருகிறார் என்பதை அறிந்து, சக தோழர்களுடன் சென்றேன். ஏற்கெனவே ‘உலகத் தமிழ்க் கழகம்’ எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்தேன். தமிழுணர்வு அடிப்படையில் பெரியார் கூட்டத்தில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் நான்கைந்து பேர் பெரியாருடன் ஒளிப்படம் எடுக்க முயற்சி செய்தோம். ஆனால் பெரியார் அவசரமாகச் சென்றுவிட்டார். அப்போது படம் எடுக்க 5 ரூபாய் செலுத்த வேண்டும். அந்த நிகழ்ச்சியில் தான் காரைக்குடி என்.ஆர்.சாமி அய்யா அறிமுகம் கிடைத்தது. பின்னர் அவர்கள் கடைக்கு அடிக்கடி செல்வேன். கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். பிறகு புதுக்கோட்டை வந்துவிட்டேன்.
1976ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போது, அன்னை மணியம்மையார் மற்றும் ஆசிரியர் கைதைக் கண்டித்து திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தின. இராவணன் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தில் 15 நாட்கள் கைது செய்து திருச்சி சிறையில் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் தோழர்கள் பலரும் எனக்கு அறிமுகமானார்கள்.
தஞ்சாவூர், திருச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்தும் சில பகுதிகளைப் பிரித்து, புதுக்கோட்டை மாவட்டம் என்பதை 1974ஆம் ஆண்டு கலைஞர் உருவாக்கினார். அதனையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நமது கழக அமைப்பை உருவாக்கும் பொருட்டு, 1977இல் இராவணன் அவர்கள் என்னையும் அழைத்துக் கொண்டு திருச்சி பெரியார் மாளிகைக்குச் சென்றார். மணியம்மையார், ஆசிரியர் உள்ளிட்ட பல தோழர்கள் அங்கு இருந்தனர். ஆசிரியரை முதன்முதலாக அப்போது தான் பார்த்தேன்.
புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகம் எப்போது உருவானது?
அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரால் 20.09.1977ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டக் கழகம் உருவானது. புதிய மாவட்டத்தின் தலைவராக புட்பநாதன், செயலாளராக இராவணன் இருந்தனர். பிந்தைய காலத்தில் தலைவராகக் கண்ணுச்சாமி, செயலாளராக இராவணன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து தலைவராகக் காளிமுத்து, செயலாளராகத் தரணி ரமேஷ் இருந்தனர். பிறகு இராமதிராசன் தலைவராகவும், இராவணன் செயலாளராகவும் செயல்பட்டனர். அதன் பின்னர் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒரே மண்டலமாக உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராகவும் இராவணன் இருந்தார். அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி கழக மாவட்டம் புதிதாக உருவானது. தற்சமயம் புதுக்கோட்டைக் கழக மாவட்டத்திற்கு நான் தலைவராகவும், வீரப்பன் செயலாளராகவும் இருந்து வருகிறோம்.
பணியில் இருக்கும் போது இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
1980 முதல் திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளராக இருந்தேன். பணி கிடைத்த பிறகு மாவட்டப் பகுத்தறிவாளர் மன்ற அமைப்பாளர் மற்றும் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும் செயல்பட்டேன். மாவட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கழக மாநாடுகளில் பங்கேற்பேன். பெரியார் மய்ய நிகழ்ச்சியில் பங்கேற்க டில்லி சென்றேன். பெரியார் மேளாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் சென்று வந்தேன். வாய்ப்புள்ள நேரங்களில் நன்கொடைகள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற வைகறைதாசன் – கண்மணி திருமணத்தில் ஆசிரியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கினேன். பிறகு புதுக்கோட்டையில் வெண்கலச் சிலை அமைக்க ரூ 10 ஆயிரம் கொடுத்தேன். 2012 ஆம் ஆண்டு சிறுதுளி பெரு வெள்ளம் திட்டத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கினேன். ‘பெரியார் உலக’த்திற்கு எனது பங்காக ரூ.25 ஆயிரமும், 16 பேரிடம் ரூ.25 ஆயிரம் நன்கொடையாகவும் வாங்கிக் கொடுத்தோம். ஆசிரியரின் 92 ஆவது பிறந்தநாளில், பெரியார் உலகத்திற்கு ஒரு இலட்சம் வழங்கினேன்.
மரமடக்கி பகுதியில் நான் ஆசிரியராக இருந்தபோது, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை என்னிடம் படித்தவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள். வகுப்பில் சமூகநீதி, இட ஒதுக்கீடு, தமிழுணர்வு, பகுத்தறிவுக் கருத்துகள், பாரதிதாசன் கவிதைகள் சொல்லிக் கொடுப்பேன். “ஆசிரியர் அறிவொளி மூலம்தான் நான் பகுத்தறிவுச் சிந்தனைப் பெற்றேன்” என அமைச்சர் பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
தங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?
1984இல் ஆசிரியர் தலைமையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ஈழப்பிரச்சினைத் தொடர்பாகக் குமரியில் இருந்து நடைப்பயணம் இருந்ததால், ஆசிரியர் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பிறகு பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமையில் கொத்தமங்கலத்தில் திருமணம் நடைபெற்றது. எனது இணையர் பெயர் கஸ்துரிபாய். இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றியவர். குறிப்பாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவராக இருக்கும் வா.நேரு அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஈழப்பிரச்சினைக் கடுமையாக நடந்த நேரத்தில் மகன் பிறந்தார். எனவே “போராளி” எனப் பெயர் சூட்டினோம். இரண்டாவதாக மகள் பிறந்த நேரத்தில் கணினி அறிமுகமாகி வளர்ந்த வந்த நேரம். அதனால் “கணினி” எனப் பெயர் வைத்தோம். மகள் சென்னையிலும், மகன் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. மகனுக்கு சு.அறிவுக்கரசு அவர்களும், மகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும் செய்து வைத்தார்கள்.
எங்களின் “பெரியார் இல்லத்தை” 1998ஆம் ஆண்டு ஆசிரியர் திறந்து வைத்தார்கள். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற எனது தங்கை திருமணத்தின் அழைப்பிதழில் கூட பெரியார் படம் இடம்பெற்றிருந்தது. எங்கள் அம்மா அப்போதே அதற்கு ஒப்புக் கொண்டார். எங்கள் அம்மா மறைவின் போது, எந்தச் சடங்குகளையும் நாங்கள் செய்யவில்லை. கிராமங்களில் இவற்றைச் செயல்படுத்துவது ஒரு சவால்தான்”, என மு.அறிவொளி கூறினார்.
