தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் ஜாதி, மதம், குடும்ப கவுரவம் என்ற பெயரில் நடக்கும் ஆணவப் படுகொலைகளுக்கு ஒரு பக்கம் கடும் எதிர்ப்புகள் உள்ளபோதும், ஜாதி வெறியர்களின் கொலைவெறி தணிந்த பாடில்லை. இந்திய அளவில் தேசிய குற்றவியல் ஆவணம் 2023 அறிக்கைப்படி, இந்தியாவில் ஆணவக் கொலை வழக்குகள் 28 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டு (2024-2025) ஜார்க்கண்ட், அரியானா இரண்டு மாநிலங்களிலும் 40 ஆணவக்கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தனிமனித வளர்ச்சியை நோக்கிய காலகட்டமான 1990 முதல் 2015ஆம் ஆண்டுவரை இறங்கு முகத்தில் இருந்த ஆணவக் கொலை வழக்குகள் மெல்ல மெல்ல அதிகரித்து 2023ஆம் ஆண்டு மீண்டும் மோசமான காலத்திற்குச் சென்றுவிட்டன.
2015-2023 இடையே சராசரியாக ஆண்டுக்கு 20 ஆணவக் கொலை வழக்குகள் பதிவாகின. உச்சநீதிமன்றம் 2006இல் லதாசிங் வழக்கில், “ஆணவக் கொலைகளில் எதுவும் கவுரவமானது இல்லை. இவை காட்டுமிராண்டித்தனமான கொலைகள்” என்று கூறியது. 2011இல் பகவான் தாஸ் வழக்கில் ஆணவப் படுகொலையை ‘அரிதினும் அரிய’ எனத் தெரிவித்து மரண தண்டனைக்குரியதாக குறிப்பிட்டது.
பகவான் தாஸ் ஆணவக் கொலை வழக்கு
இந்தியாவில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகத் சொந்த மகளையே தந்தை படுகொலை செய்த ஒரு கொடூரமான ஆணவக் கொலை வழக்கே பகவான் தாஸ் ஆணவக் கொலை வழக்காகும். இந்திய நீதித்துறை வரலாற்றில், ஆணவக் கொலைகளுக்கு எதிராக மிக முக்கியமான மற்றும் கடுமையான தீர்ப்பை வழங்கிய வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
நாட்டின் தலைநகர் டில்லி புறநகரில் பகவான் தாஸ் என்பவரின் மகள் பிரியங்கா, மாற்று ஜாதியைச் சேர்ந்த அசோக் குமார் என்ற இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது ஜாதிப் பெருமைக்குக் களம் விளைவித்து விட்டதாகக் கருதிய பகவான் தாஸ், மே 2006 இல் தனது மகள் பிரியங்காவை மிகக் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
இந்த வழக்கு டில்லி நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றது. விசாரணை நீதிமன்றத்தில், பகவான் தாஸ் தன் மகளைக் கொலை செய்தது ஆதாரங் களுடன் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி உயர் நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதி செய்தது.
2011இல் பகவான் தாஸ் தனது குடும்பக் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாகவும், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை என்றும், ஆகையால் நான் இந்த முடிவிற்கு வந்தேன் என்று கூறி தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அதே 2011ஆம் ஆண்டில் பகவான் தாஸின் மரண தண்டனையை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்
“ஆணவக் கொலைகள் காட்டுமிராண்டித்தனமானவை. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகத் சொந்த பிள்ளைகளைக் கொல்வது என்பது மிகக் கொடூரமான, பின்தங்கிய மனநிலையைக் காட்டுகிறது. இது ‘கவுரவக் கொலை’ அல்ல, இது வெறும் சதி மற்றும் பச்சாதாபமற்ற படுகொலை.”
ஜாதியின் பெயரால் நடக்கும் இதுபோன்ற ஆணவக் கொலைகள் “அரிதினும் அரிதான வழக்குகள்” என்ற பிரிவின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும். இதற்கு காரண மானவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே சரியான தண்டனை” என்று உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்தியது. இந்த விசாரணையில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது காவல்துறையின் நடவடிக்கை யாகும்.
“ஜாதியக் கட்டமைப்பைக் கண்டு அதற்குச் சாதகமாக இருந்து காவல்துறை குற்றவாளிக்குத் துணைபோனது இந்தக் கொலையில் தெரிய வந்தது. ஆணவக் கொலைகள் நடக்கும் போது அதைத் தடுக்கத் தவறும் அல்லது அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகவான் தாஸ் வழக்கு, இந்தியாவில் “ஆணவக் கொலைகளுக்கு” எதிராகச் சட்ட ரீதியாக எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சொந்த மகளையே கொன்ற தந்தைக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததன் மூலம், ஜாதியின் பெயரால் நடக்கும் குற்றங்களுக்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை என்ற வலுவான செய்தி சமுதாயத்திற்குச் சென்றடைந்தது.
சட்ட ஆணையம் 242ஆவது அறிக்கையில் “Prohibition of Interference with Matrimonial Alliances” மசோதாவை பரிந்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசு அதை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் தனியார் சமூக நீதி அமைப்புகள் கொடுத்த புள்ளிவிவரங்களின் படி 2018-2023 இடையே 400 ஆணவக் குற்றங்கள் கொலை உள்பட பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021-2025 இடையே 59 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.
அண்மைய முக்கிய வழக்குகள் – தமிழ்நாடு
கவின் செல்வகணேஷ் (2025, திருநெல்வேலி)
27 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் செல்வகணேஷ் சென்னையில் பணிபுரிந்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்ணுடன் காதல் காரணமாக, பெண்ணின் சகோதரன் சுர்ஜித் மற்றும் பெற்றோர் (இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள்) இணைந்து கொடூரமாக கொலை செய்தனர். கொலையை அவரது சமூகத்தின் சில அமைப்புகள் ‘சரியான நடவடிக்கை’ என்று சமூகவலைதளத்தில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, பின்னர் அந்த பதிவுகளை அகற்றியது.
சுபாஷ் (2026, தென்காசி)
பெங்களூருவில் பணிபுரிந்த சுபாஷ் என்ற இளைஞர், உயர்ஜாதிப் பெண்ணுடன் நட்பு பாராட்டியது காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பலால் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று வெட்டிக் கொல்லப்பட்டார்.
கண்ணகி-முருகேசன் (2003, கடலூர்) கொலையும் மிகவும் கொடூரமானதாக இருந்தது. ஜாதி, மதம், மற்றும் குடும்ப “கவுரவம்” என்ற பெயரில் நடத்தப்படும் ஆணவக்கொலைகள் இந்தியா முழுமைக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஒரு தீராத சமூக அவலமாகவே தொடர்ந்து நீடிக்கிறது. முற்போக்கான மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டிலும் கூட, ஜாதி மறுப்புத் திருமணங்கள் அல்லது ஜாதி மறுத்த காதலின் காரணமாகப் பல உயிர்கள் பறிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொலைகளுக்கான காரணங்களின் கீழ் ஆணவக் கொலைகளை காவல் துறைப் பதிவு செய்கிறது. இருப்பினும், பல கொலைகள் சாதாரணக் கொலைகளாகவோ அல்லது தற்கொலைகளாகவோ திட்டமிட்டு மாற்றப்படுவதால், அதிகாரப்பூர்வத் தரவுகளை விடக் கள நிலவரம் மிகவும் தீவிரமாக மாறுபட்டு உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் (வட இந்தியாவில்) காப் பஞ்சாயத்துகள் மற்றும் குடும்ப அமைப்புகளால் ஆணவக்கொலைகள் அதிகளவில் அரங்கேறுகின்றன.
மனோஜ் – பப்லி வழக்கு (2007, அரியானா): காப் பஞ்சாயத்தின் உத்தரவின் பேரில் இந்த இணையர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில்தான் ஆணவக்கொலைக்கு நீதிமன்றம் முதன்முறையாக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
நிதிஷ் கதாரா வழக்கு (2002, டில்லி/உ.பி): அரசியல் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததற்காக நிதிஷ் கதாரா என்ற இளைஞர் கடத்திக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.
பிரணய் – அம்ருதா வழக்கு (2018, தெலங்கானா): மிராஜ்கர் பிரணய் குமார் என்ற தாழ்த்தப்பட்டச் சமூகத்து இளைஞர், உயர்ஜாதியைச் சேர்ந்த அம்ருதாவைத் திருமணம் செய்துகொண்டார். கர்ப்பிணியான அம்ருதாவை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போது பெண்ணின் தந்தை ஏற்பாடு செய்த கூலிப்படையால் மனைவி கண் முன்பாகவே மருத்துவமனை வாசலிலேயே வெட்டிக்கொல்லப்பட்டார்.
தற்போது இந்தியாவில் ஆணவக்கொலைகளுக்கென்று தனியாக மத்தியச் சட்டம் எதுவும் இல்லை. இவை பாரதிய நியாய சன்ஹிதா (BNS) (முன்னர் இந்திய தண்டனைச் சட்டம் – IPC) பிரிவுகளின் கீழேயே கையாளப்படுகின்றன.
ஆணவப் படுகொலை பெரும்பாலும் கொலைக் குற்ற வழக்காகவே காவல்துறையினரால் நுணுக்கமாக பதிவு செய்யப்படுகிறது, ஒவ்வோர் ஆணவப் படுகொலையும் கொலை வழக்காக பதிவு செய்யப்படுவது அநீதியானது. அதை ஆணவப் படுகொலையாகப் பதிவு செய்து தாழ்த்தப்பட்ட பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர பல சமூக நீதி அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராடும் சூழல் இன்றும் நிலவுகிறது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் (சக்தி வாஹினி வழக்கு, 2018)
உச்ச நீதிமன்றம் ஆணவக்கொலைகளைத் தடுக்கவும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்த இணையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் பல அதிரடி வழிகாட்டுதல்களை வழங்கியது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியது. தமிழ்நாட்டிலும் மதுரை போன்ற சில மாவட்டங்களில் இதற்கான சிறப்புத் தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஜாதி ஆணவக்கொலைகளை முற்றிலுமாகத் தடுக்கப் ‘பிரத்யேகத் தனிச்சட்டம்’ இயற்றப்பட வேண்டும் என்று சமூக அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இளவரசன் – திவ்யா வழக்கு (தருமபுரி, 2013)
தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான இளவரசனும், செல்லன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
திவ்யாவின் தந்தை நாகராஜ் பஞ்சாயத்து கூட்டத்திற்குப் பின் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2012 நவம்பரில் தருமபுரியில் உள்ள மூன்று பட்டியலினக் குடியிருப்புகள் (நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி) ஜாதி வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
முக்கியமான கட்சியின் பின்னணியில் உள்ள அழுத்தம் காரணமாக திவ்யா தாயாருடன் செல்ல நேரிட்டது. மனமுடைந்த நிலையில் இருந்த இளவரசன், 2013 ஜூலை 4 அன்று தருமபுரி ரயில் தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரற்று சிதைந்து கண்டெடுக்கப்பட்டார். இன்று வரை அவரது மரணம் அய்யத்திற்கிடமாகவே உள்ளது.

கோகுல்ராஜ் படுகொலை (நாமக்கல், 2015)
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலினப் பொறி யியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவர் தனது தோழியான மாற்றுச் சமூகப் பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையடிவாரக் கோயிலில் பேசிக் கொண்டிருந்தார். : குறிப்பிட்ட ஜாதி அமைப்பைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள், கோகுல்ராஜைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து, தலையை துண்டித்து தண்டவாளத்தில் வீசினர்.
இந்த வழக்கில் விசாரணையின் போது சில ஜாதி அமைப்புகளின் மிரட்டல் காரணமாக சாட்சியாக இருந்த பெண் பிறழ் சாட்சியாக மாறினார். இருப்பினும் நீதிமன்றம் இந்தப் படுகொலையின் தீவிரத்தையும் அவரது மிரட்டல் பின்னணியையும் விசாரணையின் போது தெளிவாக அறிந்து 2022 ஆம் ஆண்டு மதுரை சிறப்பு நீதிமன்றம் முதன்மைக் குற்றவாளியான யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதி செய்தது.
உடுமலை சங்கர் படுகொலை (திருப்பூர், 2016)
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் சங்கர், பழநியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 2016 மார்ச் 13 அன்று உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பகல் நேரத்தில், கவுசல்யாவின் பெற்றோரால் ஏவப்பட்ட கூலிப்படையினர் சங்கரையும் கவுசல்யாவையும் நடுச் சாலையில் கொடூரமாக வெட்டினர். இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்; கவுசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்குத் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர், சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். கூலிப்படையினரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. தற்போது கவுசல்யா ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
பிரவீன் படுகொலை (சென்னை, 2024)
சென்னையின் புறநகர்ப் பகுதியான பள்ளிக்கரணையைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் பிரவீன், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தார்.
திருமணத்தை ஷர்மிளாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். 2024 பிப்ரவரி மாதம், பிரவீன் சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ், அவனது நண்பர்கள் சேர்ந்து பிரவீனை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தனர். சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஜாதி வெறி எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்தது.
ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்: சமூகநீதிப் பாதையில் தமிழ்நாடு எட்ட வேண்டியவை இலக்கு!
ஜாதிய ஆணவப் படுகொலைகள் என்பது மனித நேயத்திற்கு எதிராகவும், மனித உரிமைக்கு சவாலாகவும் விளங்கும் மிகக் கொடூரமான குற்றங்களாகும். ‘பகவான் தாஸ்’ வழக்கு விசாரணையின் போது, இத்தகைய கொடூரங்களைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமே மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியச் சட்ட ஆணையமும் இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியிருந்தது. காலங்கள் பல உருண்டோடிய நிலையிலும் ஆணவக் கொலைக்கு எதிரான புதிய தனிச் சட்டம் என்பது இன்றும் ஒரு எட்டாக்கனவாகவே இருந்து வருகிறது. இது தொடர்பான கவலைகளையும், சட்டத்தின் அவசியத்தையும் கடந்த 13.06.2026 அன்று வெளியான தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை மிக விரிவாக எடுத்துரைத்திருந்தது.
தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்று பல்வேறு சமூகநீதி இயக்கங்களுடன் கைகோர்த்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நீண்ட நெடுங்காலமாகப் பல தளங்களில் சமரசமின்றிப் போராடி வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், புதிதாகப் பொறுப் பேற்றுள்ள தவெக அமைச்சர வையில், விசிக சட்டமன்ற உறுப்பினரான வன்னி அரசு சமூகநீதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஆளுநர் உரையில் விடுபட்ட அறிவிப்பு:
ஏமாற்றத்தில் சமூக ஆர்வலர்கள்
ஏமாற்றத்தில் சமூக ஆர்வலர்கள்
பல ஆண்டு காலப் போராட்டக் கோரிக்கையான ‘ஆணவப் படுகொலை தடுப்புத் தனிச்சட்டம்’ குறித்த முக்கிய அறிவிப்பு, புதிய சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஆளுநர் உரையில் நிச்சயம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த உரையில் இச்சட்டம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழர்களின் எதிர்பார்ப்பும், விடியலும்!
ஆளுநர் உரையில் இந்த அறிவிப்பு விடுபட்டிருந்தாலும், ஆணவப் படுகொலை தடுப்புத் தொடர்பான புதிய தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
முன்னோடி மாநிலமாக மாறுமா தமிழகம்?
சமூகநீதியின் தொட்டிலாக விளங்கும் தமிழ்நாடு, ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுவதன் மூலம் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறி, ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே தற்போதைய முதன்மையான எதிர்பார்ப்பாகும்.
