சென்னை, ஜூன் 19 சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது சென்னை மாநகராட்சி சார்பில், ஒன்றிய அரசின் என்சிவிடி சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதன்படி, கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் (1 ஆண்டு), குழாய் பொருத்துநர் (1 ஆண்டு), பொருத்துநர் (2 ஆண்டு), கம்மியர்- மோட்டார் வாகனம் (2 ஆண்டு), மின் பணியாளர் (2 ஆண்டு), எலக்ட்ரானிக் மெக்கானிக் (2 ஆண்டு) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மொத்தம் 184 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. படிக்கும் போது தகுதியுடைய மாணவர்களுக்கு ஒரு மாதம் அல்லது 3 மாதங்கள் நிறுவனங்களின் அனுமதியை பொறுத்து, ரூ.10,500 முதல் ரூ.15,000 வரை உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்
மாதம்தோறும் ரூ.750 பயிற்சி உதவித் தொகை மற்றும் தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்,மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெறலாம். அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்பத்தை, சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம், லாயிட்ஸ் குடியிருப்பு, முத்தையா தெரு அருகில், ராயப்பேட்டை, சென்னை- 600014 என்ற முகவரியில் வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 – 2847 3117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்
பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
மதுரை, ஜூன் 19 தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசாணையை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்த வழக்கில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து சிறப்புக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்து கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், ராயப்பன்பட்டி, ராமநாதபுரம், அத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த அரசாணைக்கு முரணாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் (17.6.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிகள் தரப்பில், ‘பாதிக்கப்பட்ட பெற்றோர்களே நீதிமன்றத்தை நாடலாம் என ஏற்ெகனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், “அரசாணை நடைமுறையில் இருந்தும், அதற்கு மாறாக எவ்வாறு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், இப்புகார் குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
மாநகராட்சியின் வாட்ஸ்-அப் சேவை வழியாக
குடிநீர் கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்
சென்னை, ஜூன் 19 மாநகராட்சி வாட்ஸ்-அப் சேவை வழியாக, குடிநீர், கழிவுநீர் கட்டணங்கள், வரிகளை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி, பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு குடிமைச் சேவைகளை இணையதளம் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் வழங்கி வருகிறது.
சொத்து வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகளுடன், தற்போது சென்னை குடிநீர் வாரியத்தின், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களையும் வாட்ஸ்-அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் சாட்பாட் எண் 9445061913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தலாம்.
மேலும், கட்டண விவரங்கள், நிலுவைத் தொகைகள் மற்றும் ரசீதுகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவைகள் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைவதுடன், நேரமும், செலவும் சேமிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
