புதுடில்லி, ஜூன் 19 கடந்த மாதம் நடந்த நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, மாணவர்களுக்கு வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் மறுதேர்வு முடிவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை தேர்வை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் 17.6.2026 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் விவகாரம் தொடர்பான மற்ற வழக்குகளை ஏற்ெகனவே விசாரித்து வரும் நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வுக்கு இந்த புதிய மனுவையும் மாற்றிப் பரிந்துரைத்தனர்.
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூலை 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தனது வழக்கமான பணிகளைத் தொடங்கிய பிறகு, இந்த வழக்கு விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக் கும் நீட் மறுதேர்வுக்கு எவ்வித தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி மறுதேர்வு நடைபெறும் எனத் தெரிகிறது.
பி.எட். படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது
சென்னை, ஜூன் 19 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.
இதுதொடர்பாக, கல்லூரி கல்வி ஆணையர் பி.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புக்கு 2040 இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில் இந்த இடங்களில் சேருவதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இ்ன்று தொடங்கியது. ஜூலை 21-ஆம் தேதி முடிவடைகிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதைத் தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்படும். விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வழங்கப்படும். ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் ஆகஸ்ட் 17 முதல் 21-ஆம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும். முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கும்.
சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத் தொகை
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 19 சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள், முதன் மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரம் பெற இன்று (வெள்ளி) முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்க லாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணி தேர்வில் தமிழ் நாட்டை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின்கீழ், 2026-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி குடிமைப்பணி, இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு இந்த ஆண்டுகுடிமைப்பணி, இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள் இணையதளம் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) ஜூன் 19 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
